Skip to the text
திருவாய்மொழி

6-6. மாலுக்கு

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மாலுக்கு, வையம் அளந்த மணாளற்கு, நீலக் கருநிற மேக நியாயற்கு" — உலகளந்த மணாளனுக்கு, மேகநிறத்தவனுக்கு என்று ஒவ்வொரு பாசுரமும் "அவனுக்கு" என்று முடியும் பதிகம். மகள் தன்னை அவனுக்கே உரியவளாக்கிக் கொண்டதை தாய் சொல்கிறாள். கொடுத்துவிட்டதை அறிவிக்கும் தொனி இதில் ஒலிக்கிறது.

திருவாய்மொழி 6-6 மாலுக்கு

3282

மாலுக்கு வையம்‌ அளந்த மணாளற்கு நீலக்‌ கரு நிற மேக நியாயற்கு கோலச்‌ செந்தாமரைக்‌ கண்ணற்கு என்‌ கொங்கலர்‌ ஏலக்‌ குழலி இழந்தது சங்கே

3283

சங்கு வில்‌ வாள்‌ தண்டு சக்கரக்‌ கையற்கு செங்கனிவாய்ச்‌ செய்ய தாமரைக்‌ கண்ணற்கு கொங்கலர்‌ தண்ணந்துழாய்‌ முடியானுக்கு என்‌ மங்கை இழந்தது மாமை நிறமே

3284

நிறம்‌ கரியானுக்கு நீடூலகு உண்ட திறம்‌ கிளர்‌ வாய்ச்‌ சிறு கள்வன்‌ அவற்கு! கறங்கிய சக்கரக்‌ கையவனுக்கு என்‌ பிறங்கிரும்‌ கூந்தல்‌ இழந்தது பீடே

3285

பீடுடை நான்முகனைப்‌ படைத்தானுக்கு மாடூடை வையம்‌ அளந்த மணாளற்கு நாடுடை மன்னர்க்குத்‌ தூது செல்‌ நம்பிக்கு என்‌ பாடுடை அல்குல்‌ இழந்தது பண்பே

3286

பண்புடை வேதம்‌ பயந்த பரனுக்கு மண்‌ புரை வையம்‌ இடந்த வராகற்கு தெண்புனல்‌ பள்ளி எம்‌ தேவ பிரானுக்கு என்‌ கண்புனை கோதை இழந்தது கற்பே

3287

கற்பகக்‌ காவன நற்பல தோளற்கு பொற்‌ சுடர்க்‌ குன்றன்ன பூந்தண்‌ முடியற்கு நற்பல தாமரை நாள்‌ மலர்க்‌ கையற்கு என்‌ விற்புருவக்‌ கொடு தோற்றது மெய்யே

3288

மெய்யமர்‌ பல்கலன்‌ நன்கு அணிந்தானுக்கு பையரவின்‌ அணைப்‌ பள்ளியினானுக்கு கையொடு கால்‌ செய்ய கண்ண பிரானுக்கு என்‌ தையல்‌ இழந்தது தன்னுடைச்‌ சாயே

3289

சாயக்‌ குருந்தம்‌ ஒசித்த தமியற்கு மாயச்‌ சகடம்‌ உதைத்த மணாளற்கு பேயைப்‌ பிணம்‌ படப்‌ பாலுண்‌ பிரானுக்கு என்‌ வாசக்‌ குழலி இழந்தது மாண்பே

3290

மாண்பமை கோலத்து எம்‌ மாயக்‌ குறளற்கு சேண்‌ சுடர்க்‌ குன்றன்ன செஞ்சுடர்‌ மூர்த்திக்கு காண்‌ பெரும்‌ தோற்றத்து எம்‌ காகுத்த நம்பிக்கு என்‌ பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே

3291

பொற்பமை நீள்‌ முடிப்‌ பூந்தண்‌ துழாயற்கு மற்பொரு தோளுடை மாயப்‌ பிரானுக்கு நிற்பன பல்லுருவாய்‌ நிற்குமாயற்கு என்‌ கற்புடையாட்டி இழந்தது கட்டே

3292

கட்டெழில்‌ சோலை நல்‌ வேங்கடவாணனை செய்‌ கட்டெழில்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ கட்டெழில்‌ ஆயிரத்து இப்பத்தும்‌ வல்லவர்‌ கட்டெழில்‌ வானவர்‌ போகம்‌ உண்பாரே