வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளரவின் அணை மேவி சங்கமார் அங்கைத் தடமலர் உந்திச் சாமமா மேனி என் தலைவன் அங்கமாறு ஐந்து வேள்வி நால்வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
9-1. வங்கமா முந்நீர்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
பெருங்கடலில், வரிநிறப் பெரிய வாளரவின் அணைமேல் பள்ளிகொண்டவனைப் பாடும் பதிகம். சங்கேந்திய அழகிய கை, தாமரை உந்தி என அவனது திருமேனியை ஆழ்வார் விவரிக்கிறார். பேரமைதியின் நடுவே பேராற்றல் துயில்வதுபோன்ற காட்சி இது.
பெரிய திருமொழி 9-1 - வங்கமா முந்நீர் (திருக்கண்ணங்குடி)
கவளமா கதத்த கரி உய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடுபடை துரந்தோன் குவளை நீள்முளரி குமுதம் ஒண்கழுநீர் கொய்ம்மலர் நெய்தல் ஒண்கழனி திவளும் மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வாதை வந்தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப மீது கொண்டு உகளும் மீன் உருவாகி விரிபுனல் வரிய கட்டொளித்தோன் போதலர் புன்னை மல்லிகை மெளவல் புது விரை மதுமலர் அணைந்து சீத ஒண்தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வென்றி சேர் திண்மை விலங்கல் மாமேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறுகண் பன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் ஒன்றலா உருவத்து உலப்பில் பல்காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன் அன்னமென் கமலத்தணி மலர்ப் பீடத்து அலைபுனல் இலைக்குடை நீழல் செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணிமுடி பொடு படுத்து உதிரக் குழுவு வார்புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலி ர் குழுவும் வார்கமுகும் குரவும் நற்பலவும் குளிர்தரு சூதமாதவியும் செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வானுளார் அவரை வலிமையால் நலியும் மறிகடல் இலங்கையார் கோனை பானு சேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி உதிர வில் வளைத்தோன் கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கணமுகில் முரசம் நின்றதிர தேனுலா வரிவண்டு இன்னிசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
அரவ நீள்கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மாமேனி அண்டம் ஊடூருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன் வரையின் மாமணியும் மரதகத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும் திரை கொணர்ந்துந்தி வயல் தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பன்னிய பாரம் பார்மகட்கு ஓழியப் பாரத மாபெரும் போரில் மன்னர்கள் மடிய மணிநெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மாமாயன் துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர் வாய் தென்னவென்று அளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
கலையுலா அல்குல் காரிகை திறத்துக் கடற்பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை மலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாயொலிகள் உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே
அடிவரவு: வங்கம் கவளம் வாதை வென்றி மன்னவன் மழுவினால் வானுளார் அரவு பன்னிய கலை பொன்