Skip to the text
பெரிய திருமொழி

9-2. பொன்னிவர்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

பொன்னும் மரகதமும் போன்ற ஒளிரும் திருமேனியையும், வேதம் ஓதும் திருவாயையும் வருணிக்கும் பதிகம். அணிகலன்களும் ஒளியும் நிறைந்த ஒரு காட்சியை ஆழ்வார் கண்முன் நிறுத்துகிறார். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஒரே சமயத்தில் விருந்தாக அவன் இருக்கிறான்.

பெரிய திருமொழி 9-2 - பொன்னிவர்‌ (திருநாகை - தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்குக்‌ கூறிய பாசுரம்‌)

1758

பொன்னிவர்‌ மேனி மரகதத்தின்‌ பொங்கிளம்‌ சோதி அகலத்து ஆரம்‌ மின்‌ இவர்‌ வாயில்‌ நல்வேதம்‌ ஓதும்‌ வேதியர்‌ வானவராவர்‌ தோழீ! என்னையும்‌ நோக்கி என்‌ அல்குலும்‌ நோக்கி ஏந்திளம்‌ கொங்கையும்‌ நோக்குகின்றார்‌ அன்னை என்னோக்கும்‌ என்று அஞ்சுகின்றேன்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1759

தோடவிழ்‌ நீலம்‌ மணம்‌ கொடுக்கும்‌ சூழ்புனல்‌ சூழ்குடந்தைக்‌ கிடந்த சேடர்‌ கொல்‌ என்று தெரிக்க மாட்டேன்‌ செஞ்சுடர்‌ ஆழியும்‌ சங்கும்‌ ஏந்தி பாடக மெல்லடியார்‌ வணங்கப்‌ பன்மணி முத்தொடு இலங்கு சோதி ஆடகம்‌ பூண்டு ஒரு நான்கு தோளும்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1760

வேயிருஞ்சோலை விலங்கல்‌ சூழ்ந்த மெய்ய மணாளர்‌ இவ்வையம்‌ எல்லாம்‌ தாயின நாயகர்‌ ஆவர்‌ தோழீ! தாமரைக்‌ கண்கள்‌ இருந்தவாறு சேயிருங்குன்றம்‌ திகழ்ந்ததொப்பச்‌ செவ்வியவாகி மலர்ந்த சோதி ஆயிரம்‌ தோளொடு இலங்கு பூணும்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1761

வம்பவிழும்‌ துழாய்‌ மாலை தோள்‌ மேல்‌ கையன அழியும்‌ சங்கும்‌ ஏந்தி நம்பர்‌ நம்‌ இல்லம்‌ புகுந்து நின்றார்‌ நாகரிகர்‌ பெரிதும்‌ இளையர்‌ ர செம்பவளம்‌ இவர்‌ வாயின்‌ வண்ணம்‌ தேவர்‌ இவரது உருவம்‌ சொல்லில்‌ அம்பவளத்‌ திரளேயும்‌ ஒப்பர்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1762

கோழியும்‌ கூடலும்‌ கோயில்‌ கொண்ட கோவலரே ஒப்பர்‌ குன்றம்‌ அன்ன பாழியந்தோளும்‌ ஓர்‌ நான்குடையர்‌ பண்டு இவர்‌ தம்மையும்‌ கண்டறியோம்‌ வாழியரோ இவர்‌ வண்ணம்‌ எண்ணில்‌ மாகடல்‌ போன்றுளர்‌ கையில்‌ வெய்ய ஆழி ஒன்றேந்தி ஓர்‌ சங்கு பற்றி அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1763

வெஞ்சின வேழம்‌ மருப்பொசித்த வேந்தர்‌ கொல்‌? ஏந்திழையார்‌ மனத்தை தஞ்சுடையாளர்‌ கொல்‌? யான்‌ அறியேன்‌ தாமரைக்‌ கண்கள்‌ இருந்தவாறு கஞ்சனை அஞ்ச முன்‌ கால்‌ விசைத்த காளையாரவர்‌ கண்டார்‌ வணங்கும்‌ அஞ்சன மாமலையேயும்‌ ஒப்பர்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1764

பிணியவிழ்‌ தாமரை மொட்டலர்த்தும்‌ பேரருளாளர்‌ கொல்‌? யான்‌ அறியேன்‌ பணியும்‌ என்‌ நெஞ்சம்‌ இதென்‌ கொல்‌? தோழீ! பண்டு இவர்‌ தம்மையும்‌ கண்டறியோம்‌ அணிகெழு தாமரை அன்ன கண்ணும்‌ அங்கையும்‌ பங்கயம்‌ மேனி வானத்து அணிகெழு மாமுகிலேயும்‌ ஒப்பர்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1765

மஞ்சுயர்‌ மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர்‌ வந்து என்‌ நெஞ்சுள்ளும்‌ கண்ணுள்ளும்‌ நின்று நீங்கார்‌ நீர்மலையார்‌ கொல்‌? நினைக்க மாட்டேன்‌ மஞ்சுயர்‌ பொன்மலை மேல்‌ எழுந்த மாமுகில்‌ போன்றுளர்‌ வந்து காணீர்‌ அஞ்சிறைப்‌ புள்ளும்‌ ஒன்றேறி வந்தார்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1766

எண்திசையும்‌ எறி நீர்க்‌ கடலும்‌ ஏழுலகும்‌ உடனே விழுங்கி மண்டி ஓர்‌ ஆலிலைப்‌ பள்ளி கொள்ளும்‌ மாயர்‌ கொல்‌? மாயம்‌ அறிய மாட்டேன்‌ ர கொண்டல்‌ நன்மால்‌ வரையேயும்‌ ஒப்பர்‌ கொங்கலர்‌ தாமரைக்‌ கண்ணும்‌ வாயும்‌ அண்டத்தமரர்‌ பணிய நின்றார்‌ அச்சோ ஒருவர்‌ அழகியவா!

1767

அன்னமும்‌ கேழலும்‌ மீனுமாய ஆதியை நாகை அழகியாரை கன்னி நன்மாமதிள்‌ மங்கை வேந்தன்‌ காமருசீர்க்‌ கலிகன்றி குன்றா இன்னிசையால்‌ சொன்ன செஞ்சொல்‌ மாலை ஏழும்‌ இரண்டும்‌ ஒரொன்றும்‌ வல்லார்‌ மன்னவராய்‌ உலகாண்டு மீண்டும்‌ வானவராய்‌ மகிழ்வெய்துவரே

அடிவரவு: பொன்‌ தோடு வேய்‌ வம்பு கோழி வெஞ்சினம்‌ பிணி மஞ்சுயர்‌ எண்திசை அன்னம்‌ தன்னை