Skip to the text
திருவாய்மொழி

9-7. எங்கானல்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"எங்கானல் அகங்கழிவாய் இரைத்தேர்ந்து இங்கு இனிதமரும் செங்கால மட நாராய்!" — கடற்கழியில் இரைதேடும் நாரையை நோக்கி, திருமூழிக்களத்தில் உறையும் குடக்கூத்தனுக்கு என் தூதாய்ச் செல் என்று தலைவி வேண்டும் தூதுப் பதிகம். பிரிவில் மனிதத் துணையின்றி, பறவைகளையே தூதனுப்பும் நிலை. அவள் தலையில் கால் வைப்பீரோ என்று பணிந்து கேட்கும் மென்மை இதில் நிறைந்துள்ளது.

திருவாய்மொழி 9-7 எங்கானல்‌

3623

எங்கானல்‌ அகங்கழிவாய்‌ இரைத்தேர்ந்து இங்கு இனிதமரும்‌ செங்கால மடநாராய்‌! திருமூழிக்களத்துறையும்‌ கொங்கார்‌ பூந்துழாய்‌ முடி எங்குடக்கூத்தர்க்கு என்‌ தூதாய்‌ நுங்கால்கள்‌ என்‌ தலை மேல்‌ கெழுமீரோ நுமரோடே

3624

நுமரோடும்‌ பிரியாதே நீரும்‌ நும்‌ சேவலுமாய்‌ அமர்காதல்‌ குருகினங்காள்‌! அணிமூழிக்களத்துறையும்‌ எமராலும்‌ பழிப்புண்டு இங்கென்‌? தம்மால்‌ இழிப்புண்டு தமரோடு அங்குறைவார்க்குத்‌ தக்கிலமே? கேளீரே

3625

தக்கிலமே? கேளீர்கள்‌ தடம்புனல்வாய்‌ இரைதேரும்‌ கொக்கினங்காள்‌! குருகினங்காள்‌! குளிர்‌ மூழிக்களத்துறையும்‌ செக்கமலத்தலர்‌ போலும்‌ கண்‌ கை கால்‌ செங்கனி வாய்‌ அக்கமலத்திலை போலும்‌ திருமேனி அடிகளுக்கே

3626

திருமேனி அடிகளுக்குத்‌ தீவினையேன்‌ விடு தூதாய்‌ திருமூழிக்களம்‌ என்னும்‌ செழுநகர்வாய்‌ அணிழுகில்காள்‌! திருமேனி அவட்கருளீர்‌ என்றக்கால்‌ உம்மைத்‌ தன்‌ திருமேனி ஒளி அகற்றித்‌ தெளிவிசும்பு கடியுமே?

3627

தெளிவிசும்பு கடிதோடுத்‌ தீவளைத்து மின்னிலகும்‌ ஒளிமுகில்காள்‌! திருமூழிக்களத்துறையும்‌ ஒண்சுடர்க்கு தெளிவிசும்பு திருநாடாத்‌ தீவினையேன்‌ மனத்துறையும்‌ துளிவார்கட்குழலார்க்கு என்‌ தூதுரைத்தல்‌ செப்புமினே

3628

தூதுரைத்தல்‌ செப்புமின்கள்‌ தூமொழியாய்‌ வண்டினங்காள்‌! போதிரைத்து மதுநுகரும்‌ பொழில்‌ மூழிக்களத்துறையும்‌ மாதரைத்‌ தம்‌ மார்வகத்தே வைத்தார்க்கு என்வாய்‌ மாற்றம்‌ தூதுரைத்தல்‌ செப்புதிரேல்‌ சுடர்‌ வளையும்‌ கலையுமே

3629

சுடர்‌ வளையும்‌ கலையும்‌ கொண்டு அருவினையேன்‌ தோள்‌ துறந்த படர்புகழான்‌ திருமூழிக்களத்துறையும்‌ பங்கயக்கண்‌ சுடர்‌ பவள வாயனைக்‌ கண்டு ஒரு நாள்‌ ஓர்‌ தூய்‌ மாற்றம்‌ படர்‌ பொழில்வாய்க்‌ குருகினங்காள்‌! எனக்கொன்று பணியீரே

3630

எனக்கொன்று பணியீர்கள்‌ இரும்பொழில்வாய்‌ இரை தேர்ந்து மனக்கின்பம்‌ படமேவும்‌ வண்டினங்காள்‌! தும்பிகாள்‌! கனக்கொள்‌ திண்மதிள்‌ புடை சூழ்‌ திருமூழிக்களத்துறையும்‌ புனக்கொள்‌ காயாமேனிப்‌ பூந்துழாய்‌ முடியார்க்கே

3631

பூந்துழாய்‌ முடியார்க்குப்‌ பொன்னாழிக்‌ கையாருக்கு ஏந்துநீர்‌ இளங்குருகே! திருமூழிக்களத்தாருக்கு ஏந்து பூண்முலை பயந்து என்னிணை மலர்க்கண்‌ நீர்‌ ததும்ப தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று என்றுரையீரே

3632

தகவன்று என்று உரையீர்கள்‌ தடம்புனல்வாய்‌ இரை தேர்ந்து மிக இன்பம்‌ படமேவும்‌ மென்னடைய அன்னங்காள்‌! மிகமேனி மெலிவெய்தி மேகலையும்‌ ஈடழிந்து என்‌ அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே

3633

ஒறிவின்றித்‌ திருமூழிக்களத்துறையும்‌ ஒண்சுடரை ஒழிவில்லா அணிமழலைக்‌ கிளிமொழியாள்‌ அலற்றிய சொல்‌ வழுவில்லா வண்குருகூர்ச்‌ சடகோபன்‌ வாய்ந்துரைத்த அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும்‌ நோய்‌ அறுக்குமே