Skip to the text
திருவாய்மொழி

9-6. உருகுமால்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்?" — திருக்காட்கரையில் உறையும் மாயனுடைய மாயத்தை நினைக்கும்தோறும் உயிரால் தாங்கவொண்ணாத அளவு நெஞ்சம் உருகுகிறது, வேட்கை பெருகுகிறது என்னும் பதிகம். நினைவே இத்தனை என்றால் காட்சி எத்தனை என்னும் மிகுதி இதில் தொனிக்கிறது. அவனுடைய அற்புதத்தை எண்ண எண்ண மனம் கரையும் நிலை.

திருவாய்மொழி 9-6 உருகுமால்‌

3612

உருகுமால்‌ நெஞ்சம்‌ உயிரின்‌ பரமன்றி பெருகுமால்‌ வேட்கையும்‌ என்‌ செய்கேன்‌ தொண்டனேன்‌? தெருவெல்லாம்‌ காவி கமழ்‌ திருக்காட்கரை! மருவிய மாயன்‌ தன்‌ மாயம்‌ நினைதொறே

3613

நினைதொறும்‌ சொல்லுந்தொறும்‌ நெஞ்சு இடுந்துகும்‌ வினைகொள்‌ சீர்‌ பாடிலும்‌ வேமெனது ஆருயிர்‌ சுனைகொள்‌ பூஞ்சோலைத்‌ தென்காட்கரை என்னப்பா! நினைகிலேன்‌ நான்‌ உனக்கு ஆட்செய்யும்‌ நீர்மையே

3614

நீர்மையால்‌ நெஞ்சம்‌ வஞ்சித்துப்‌ புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய்‌ என்னுயிர்‌ உண்டான்‌ சீர்மல்கு சோலைத்‌ தென்காட்கரை என்னப்பன்‌ கார்முகில்‌ வண்ணண்‌ தன்‌ கள்வம்‌ அறிகிலேன்‌

3615

அறிகிலேன்‌ தன்னுள்‌ அனைத்துலகும்‌ நிற்க நெறிமையால்‌ தானும்‌ அவற்றுள்‌ நிற்கும்‌ பிரான்‌ வெறிகமழ்‌ சோலைத்‌ தென்காட்கரை என்னப்பன்‌ சிறிய என்னாருயிர்‌ உண்ட திருவருளே

3616

திருவருள்‌ செய்பவன்‌ போல என்னுள்‌ புகுந்து உருவமும்‌ ஆருயிரும்‌ உடனே உண்டான்‌ திருவளர்‌ சோலைத்‌ தென்காட்கரை என்னப்பன்‌ கருவளர்‌ மேனி என்‌! கண்ணன்‌ கள்வங்களே

3617

என்‌ கண்ணன்‌ கள்வம்‌ எனக்குச்‌ செம்மாய்‌ நிற்கும்‌ அங்கண்ணன்‌ உண்ட என்‌ ஆருயிர்க்கோது இது புன்கண்மை எய்திப்‌ புலம்பி இராப்பகல்‌ என்‌ கண்ணன்‌ என்று அவன்‌ காட்கரை ஏத்துமே

3618

காட்கரை ஏத்தும்‌ அதனுள்‌ கண்ணா! என்னும்‌ வேட்கை நோய்‌ கூர நினைந்து கரைந்துகும்‌ ஆட்கொள்‌ வானொத்து என்னுயிர்‌ உண்ட மாயனால்‌ கோட்குறை பட்டது என்னாருமிர்‌ கோளுண்டே

3619

கோளுண்டான்‌ அன்றி வந்து என்னுயிர்‌ தான்‌ உண்டான்‌ நாளுநாள்‌ வந்து என்னை முற்றவும்‌ தான்‌ உண்டான்‌ காளநீர்‌ மேகத்‌ தென்காட்கரை என்னப்பற்கு ஆளன்றே பட்டது என்னாருயிர்‌ பட்டதே

3620

ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது? பேரிதழ்த்‌ தாமரைக்கண்‌ கனி வாயதோர்‌ காரெழில்‌ மேகத்‌ தென்காட்கரை கோயில்‌ கொள்‌ சீரெழில்‌ நால்தடந்தோள்‌ தெய்வவாரிக்கே

3621

வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன்‌ காணில்‌ என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில்‌ முன்னம்‌ பாரித்து தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌ கார்‌ ஒக்கும்‌ காட்கரை அப்பன்‌ கடியனே

3622

கடியனாய்க்‌ கஞ்சனைக்‌ கொன்ற பிரான்‌ தன்னை கொடுமதிள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ வடிவமை ஆயிரத்து இப்பத்தினால்‌ சன்மம்‌ முடிவெய்தி நாசங்கண்டீர்கள்‌ எங்கானலே