Skip to the text
திருவாய்மொழி

10-7. செஞ்சொற்‌ கவிகாள்‌"

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்தாட் செய்ம்மின் ... என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானேயாகி நின்றான்" — திருமாலிருஞ்சோலையின் வஞ்சக்கள்வன், மாயக் கவியாய் வந்து என் நெஞ்சிலும் உயிரிலும் கலந்து, அவற்றையே உண்டு தானேயாய் நின்றான் என்னும் பதிகம். "என் பாடல் என்னுடையது அல்ல" என்னும் கருத்து இங்கே முழுமை பெறுகிறது — அவனே பாடுபவனாய், அவனே பாடலாய் ஆகிறான். செஞ்சொற் கவிஞர்களை எச்சரிக்கும் தொனியில் அமைந்தது.

திருவாய்மொழி 10-7 செஞ்சொற்‌ கவிகாள்‌"

3733

செஞ்சொற்‌ கவிகாள்‌! உயிர்‌ காத்தாட்‌ செய்ம்மின்‌ - திருமாலிருஞ்சோலை வஞ்சக்‌ கள்வன்‌ மாமாயன்‌ மாயக்‌ கவியாய்‌ வந்து என்‌ நெஞ்சும்‌ உயிரும்‌ உள்கலந்து நின்றார்‌ அறியா வண்ணம்‌ என்‌ நெஞ்சும்‌ உயிரும்‌ அவை உண்டு தானேயாகி நிறைந்தானே

3734

தானேயாகி நிறைந்து எல்லா உலகும்‌ உயிரும்‌ தானேயாய்‌ தானே யான்‌ என்பானாகித்‌ தன்னைத்‌ தானே துதித்து எனக்குத்‌ தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை கோனேயாகி நின்றொழிந்தான்‌ என்னை முற்றும்‌ உயிருண்டே

3735

என்னை முற்றும்‌ உயிர்‌ உண்டு என்‌ மாய ஆக்கை இதனுள்‌ புக்கு என்னை முற்றும்‌ தானேயாய்‌ நின்ற மாய அம்மான்‌ சேர்‌ தென்னன்‌ திருமாலிருஞ்சோலைத்‌ திசை கை கூப்பிச்‌ சேர்ந்த யான்‌ இன்னும்‌ போவேனே கொலோ? என்‌ கொல்‌ அம்மான்‌ திருவருளே?

3736

என்‌ கொல்‌ அம்மான்‌ திருவருள்கள்‌? உலகும்‌ உயிரும்‌ தானேயாய்‌ நன்கென்‌ உடலம்‌ கைவிடான்‌ ஞாலத்தூடே நடந்துழக்கி தென்கொள்‌ திசைக்குத்‌ திலதமாய்‌ நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள்‌ குன்றம்‌ கைவிடான்‌ நண்ணா அசுரர்‌ நலியவே'

3737

நண்ணா அசுரர்‌ நலிவெய்த! நல்ல அமரர்‌ பொலிவெய்த எண்ணாதனகள்‌ எண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பம்‌ தலைச்‌ சிறப்ப பண்ணார்‌ பாடல்‌ இன்கவிகள்‌ யானாய்த்‌ தன்னைத்‌ தான்‌ பாடி தென்னாவென்னும்‌ என்‌ அம்மான்‌ திருமாலிருஞ்சோலையானே

3738

திருமாலிருஞ்சோலையானே ஆகிச்‌ செழுமூவுலகும்‌ தன்‌ ஒரு மா வயிற்றின்‌ உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்‌ திருமால்‌ என்னை ஆளுமால்‌ சிவனும்‌ பிரமனும்‌ காணாது அருமால்‌ எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே

3739

அருளை: என்‌ அம்மானே! என்னும்‌ முக்கண்‌ அம்மானும்‌ தெருள்‌ கொள்‌ பிரமன்‌ அம்மானும்‌ தேவர்‌ கோனும்‌ தேவரும்‌ இருள்கள்‌ கடியும்‌ முனிவரும்‌ ஏத்தும்‌ அம்மான்‌ திருமலை மருள்கள்‌ கடியும்‌ மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே

3740

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என்தலையே திருமால்‌ வைகுந்தமே தண்‌ திருவேங்கடமே எனதுடலே அருமா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடுயும்‌ பிரியான்‌ என்‌ ஊழி முதல்வன்‌ ஒருவனே

3741

ஊழி முதல்வன்‌ ஒருவனே என்னும்‌ ஒருவன்‌ உலகெல்லாம்‌ ஊழி தோறும்‌ தன்‌ உள்ளே படைத்துக்‌ காத்துக்‌ கெடுத்துழலும்‌ ஆழி வண்ணன்‌ என்‌ அம்மான்‌ அந்தண்‌ திருமாலிருஞ்சோலை வாழி மனமே கைவிடேல்‌ உடலும்‌ உயிரும்‌ மங்கவொட்டே

3742

மங்கவொட்டு உன்‌ மாமாயை திருமாலிருஞ்சோலை மேய நங்கள்‌ கோனே! யானே நீயாகி என்னை அளித்தானே! பொங்கைம்புலனும்‌ பொறி ஐந்தும்‌ கருமேந்திரியம்‌ ஐம்பூதம்‌ இங்கு இவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்களே

3743

மானாங்கார மனம்‌ கெட ஐவர்‌ வன்கையர்‌ மங்க தானாங்காரமாய்ப்‌ புக்குத்‌ தானே தானே ஆனானை தேனாங்காரப்‌ பொழில்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ ஆயிரத்துள்‌ மானாங்காரத்திவை பத்தும்‌ திருமாலிருஞ்சோலை மலைக்கே