திருவாய்மொழி 9-10 மாலை நண்ணி
9-10. மாலை நண்ணி
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"மாலை நண்ணித் தொழுதெழுமினோ வினை கெட ... திருக்கண்ணபுரத்து ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே" — காலையும் மாலையும் மலரிட்டு, திருக்கண்ணபுரத்தானின் திருவடிகளைத் தொழுது எழுங்கள்; வினை கெடும் என்று ஆழ்வார் பிறரை அழைக்கும் பதிகம். உள்நோக்கிய ஏக்கத்திலிருந்து வெளிநோக்கிய அழைப்பாய்த் திரும்புகிறது — பாடி ஆடிப் பணியுங்கள், அவ்வளவே. ஒன்பதாம் பத்து இந்த எளிய சரணாகதி அழைப்புடன் நிறைவடைகிறது.
மாலை நண்ணித் தொழுதெழுமினோ வினை கெட காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே
கள்ளவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுதெழுமினோ தொண்டரே!
தொண்டர்! நுந்தம் துயர் போக நீர் ஏகமாய் விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே
மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம் தான் நயந்த பெருமான் சரணாகுமே
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத் தரணியாளன் தனதன்பர்க்கு அன்பாகுமே
அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம் செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் நன்பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும் புறமே தொழுவார்க்கெல்லாம் செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து ஐயன் ஆகத்தணைப்பார்கட்கு அணியனே
அணியனாகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும் ர மணிபொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை? வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை? அல்லி மாதர் அமரும் திருமார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள்! இப்பத்தும் பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே!