Skip to the text
திருவாய்மொழி

8-10. நெடுமாற்கடிமை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் அவனைக் கருத, வஞ்சித்து" — அவனுக்கு அடிமை செய்வேன் என்பதுபோல் நடித்து, உண்மையில் ஏமாற்றியதாக ஆழ்வார் தன்னைக் குற்றம் சாட்டும் பதிகம். தொண்டு செய்வதுபோல் தோன்றியதும், உள்ளே அது இல்லாததும் வேறு வேறு என்பதை அவர் அறிவார். எட்டாம் பத்து இந்தக் கடுமையான தன்னாய்வுடன் நிறைவடைகிறது.

திருவாய்மொழி 8-10 நெடுமாற்கடிமை

3546

நெடுமாற்கடிமை செய்வேன்‌ போல்‌ அவனைக்‌ கருத வஞ்சித்து தடுமாற்றற்ற தீக்கதிகள்‌ முற்றும்‌ தவிர்ந்த சதிர்‌ நினைந்தால்‌ கொடூமா வினையேன்‌ அவன்‌ அடியார்‌ அடியே கூடும்‌ இது அல்லால்‌ விடுமாறென்பதென்‌? அந்தோ! வியன்‌ மூவுலகு பெறினுமே

3547

வியன்‌ மூவுலகு பெறினும்‌ போய்த்‌ தானே தானே ஆனாலும்‌ புயல்‌ மேகம்‌ போல்‌ திருமேனி அம்மான்‌ புனை பூங்கழல்‌ அடிக்‌ கீழ்‌ சயமே அடிமை தலை நின்றார்‌ திருத்தாள்‌ வணங்கி இம்மையே பயனே இன்பம்‌ யான்‌ பெற்றது உறுமோ பாவியேனுக்கே

3548

உறுமோ பாவியேனுக்கு? இவ்வுலகம்‌ மூன்றும்‌ உடன்‌ நிறைய சிறுமா மேனி நிமிர்த்த என்‌ செந்தாமரைக்‌ கண்‌ திருக்குறளன்‌ நறுமா விரை நாள்‌ மலரடிக்‌ கீழ்ப்‌ புகுதல்‌ அன்றி அவன்‌ அடியார்‌ சிறுமா மனிசராய்‌ என்னை ஆண்டார்‌ இங்கே திரியவே

3549

இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்‌? இருமாநிலம்‌ முன்‌ உண்டுமிழ்ந்த செங்கோலத்த பவள வாய்ச்‌ செந்தாமரைக்‌ கண்‌ என்‌ அம்மான்‌ பொங்கேழ்‌ புகழ்கள்‌ வாயவாய்ப்‌ புலன்‌ கொள்‌ வடிவு என்‌ மனத்ததாய்‌ அங்கேய்‌ மலர்கள்‌ கையவாய்‌ வழிபட்டோட அருளிலே

3550

வழிபட்டோட அருள்‌ பெற்று மாயன்‌ கோல மலரடிக்‌ கீழ்‌ சுழிபட்டோடும்‌ சுடர்ச்‌ சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும்‌ இழிபட்டோடும்‌ உடலினில்‌ பிறந்து தன்‌ சீர்‌ யான்‌ கற்று மொழிபட்டோடும்‌ கவி அமுதம்‌ நுகர்ச்சி உறுமோ? முழுதுமே

3551

நுகர்ச்சி உறுமோ? மூவுலகின்‌ வீடு பேறு தன்‌ கேழில்‌ புகர்ச்‌ செம்முகத்த களிறட்ட பொன்‌ ஆழிக்‌ கை என்‌ அம்மான்‌ நிகர்ச்‌ செம்பங்கி எரி விழிகள்‌ நீண்ட அசுரர்‌ உயிர்‌ எல்லாம்‌ தகர்த்துண்டு உழலும்‌ புட்பாகன்‌ பெரிய தனி மாப்‌ புகழே?

3552

தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாத்‌ தான்‌ தோன்றி முனிமாப்‌ பிரம முதல்‌ வித்தாய்‌ உலகம்‌ மூன்றும்‌ முளைப்பித்த தனிமாத்‌ தெய்வத்‌ தளிரடிக்‌ கீழ்ப்‌ புகுதல்‌ அன்றி அவன்‌ அடியார்‌ நனிமாக்‌ கலவி இன்பமே நாளும்‌ வாய்க்க நங்கட்கே

3553

நாளும்‌ வாய்க்க நங்கட்கு நளிர்‌ நீர்க்‌ கடலைப்‌ படைத்து தன்‌ தாளும்‌ தோளும்‌ முடிகளும்‌ சமனிலாத பல பரப்பி நீளும்‌ படர்‌ பூங்கற்பகக்‌ காவும்‌ நிறை பன்னாயிற்றின்‌ கோளுமுடைய மணிமலை போல்‌ கிடந்தான்‌ தமர்கள்‌ கூட்டமே

3554

தமர்கள்‌ கூட்ட வல்வினையை நாசம்‌ செய்யும்‌ சதிர்‌! மூர்த்தி அமர்கொள்‌ ஆழி சங்கு வாள்‌ வில்‌ தண்டாதி பல்‌ படையன்‌ குமரன்‌ கோல ஐங்கணை வேள்‌ தாதை கோதில்‌ அடியார்‌ தம்‌ தமர்கள்‌ தமர்கள்‌ தமர்களாம்‌ சதிரே வாய்க்க தமியேற்கே

3555

வாய்க்க தமியேற்கு ஊழி தோறூழி ஊழி மாகாயாம்‌ பூக்கொள்‌ மேனி நான்கு தோள்‌ பொன்‌ ஆழிக்‌ கை என்‌ அம்மான்‌ நீக்கமில்லா அடியார்‌ தம்‌ அடியார்‌ அடியார்‌ அடியார்‌ எங்‌ கோக்கள்‌ அவர்க்கே குடிகளாய்ச்‌ செல்லும்‌ நல்ல கோட்பாடே

3556

நல்ல கோட்பாட்டூலகங்கள்‌ மூன்றின்‌ உள்ளும்‌ தான்‌ நிறைந்த அல்லிக்‌ கமலக்‌ கண்ணனை அந்தண்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌ இவையும்‌ பத்தும்‌ வல்லார்கள்‌ நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே