Skip to the text
திருவாய்மொழி

7-1. உண்ணிலாவிய

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி" — உள்ளிருக்கும் ஐம்புலன்கள் என்னை வருத்தி, உன் திருவடித் தாமரையை அடையவிடாமல் தடுக்கின்றன என்று ஆழ்வார் முறையிடும் பதிகம். எதிரி வெளியில் இல்லை, உள்ளேயே இருக்கிறான் என்பதை அவர் தெளிவாக அறிவார். போராட்டம் உலகோடு அல்ல, தன்னோடே.

திருவாய்மொழி 7-1 உண்ணிலாவிய

3337

உண்ணிலாவிய ஐவரால்‌ குமை தீற்றி என்னை உன்‌ பாத பங்கயம்‌ நண்ணிலா வகையே நலிவான்‌ இன்னம்‌ எண்ணுகின்றாய்‌ எண்ணிலாப்‌ பெருமாயனே! இமையோர்கள்‌ ஏத்தும்‌ உலகம்‌ மூன்றுடை அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!

3338

என்னை ஆளும்‌ வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல்‌ மோதுவித்திட்டூு உன்னை நான்‌ அணுகா வகை செய்து போதி கண்டாய்‌ கன்னலே! அமுதே! கார்முகில்‌ வண்ணனே! கடல்‌ ஞாலம்‌ காக்கின்ற மின்னு நேமியினாய்‌! வினையேனுடை வேதியனே!

3339

வேதியா நிற்கும்‌ ஐவரால்‌ வினையேனை மோதுவித்து உன்‌ திருவடிச்‌ சாதியா வகை நீ தடுத்து என்‌ பெறுதி? அந்தோ! ஆதியாகி அகலிடம்‌ படைத்து உண்டுமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள்முடியாய்‌! தொண்டனேன்‌ மதுசூதனனே!

3340

சூது நான்‌ அறியா வகை சுழற்றி ஓர்‌ ஐவரைக்‌ காட்டி உன்னடிப்‌ போது நான்‌ அணுகா வகை செய்து போதி கண்டாய்‌ யாதும்‌ யாவரும்‌ இன்றி நின்னகம்‌ பால்‌ ஒடுக்கி ஓர்‌ ஆலின்‌ நீளிலை மீது சேர்‌ குழவி! வினையேன்‌ வினை தீர்‌ மருந்தே!

3341

தீர்‌ மருந்தின்றி ஐந்து நோயடூம்‌ செக்கிலிட்டுத்‌ திரிக்கும்‌ ஐவரை நேர்‌ மருங்குடைத்‌ தாவடைத்து நெகிழ்ப்பான்‌ ஒக்கின்றாய்‌ ஆர்‌ மருந்தினி ஆகுவார்‌? அடலாழி ஏந்தி அசுரர்‌ வன்குலம்‌ வேர்‌ மருங்கறுத்தாய்‌! விண்ணுளார்‌ பெருமானேயோ!

3342

விண்ணுளார்‌ பெருமாற்கு அடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலன்‌ இவை மண்ணுள்‌ என்னைப்‌ பெற்றால்‌ என்‌ செய்யா மற்று நீயும்‌ விட்டால்‌? பண்ணுளாய்‌! கவி தன்னுளாய்‌! பத்தியினுள்ளாய்‌! பரமீசனே! வந்தென்‌ கண்ணுளாய்‌! நெஞ்சுளாய்‌! சொல்லுளாய்‌! ஒன்று சொல்லாயே

3343

ஒன்று சொல்லி ஒருத்தினில்‌ நிற்கிலாத ஓரைவர்‌ வன்கயவரை என்று யான்‌ வெல்கிற்பன்‌ உன்‌ திருவருள்‌ இல்லையேல்‌? அன்று தேவர்‌ அசுரர்‌ வாங்க அலைகடல்‌ அரவம்‌ அளாவி ஓர்‌ குன்றம்‌ வைத்த எந்தாய்‌! கொடியேன்‌ பருகு இன்னமுதே!

3344

இன்னமுதெனத்‌ தோன்றி ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த முன்ன! மாயம்‌ எல்லாம்‌ முழு வேரரிந்து என்னை உன்‌ சின்னமும்‌ திருமூர்த்தியும்‌ சிந்தித்து ஏத்திக்‌ கை தொழவே அருள்‌ எனக்கு என்னம்மா! என்‌ கண்ணா! இமையோர்‌ தம்‌ குல முதலே!

3345

குலமுதலடும்‌ தீவினைக்‌ கொடு வன்குழியினில்‌ வீழ்க்கும்‌ ஐவரை வலமுதல்‌ கெடுக்கும்‌ வலமே தந்தருள்‌ கண்டாய்‌ நிலமுதல்‌ இனி எவ்வுலகுக்கும்‌ நிற்பன செல்வன என பொருள்‌ பலமுதல்‌ படைத்தாய்‌! என்‌ கண்ணா! என்‌ பரஞ்சுடரே!

3346

என்‌ பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன்‌ இணைத்‌ தாமரைகட்கு அன்புருகி நிற்கும்‌ அது நிற்கச்‌ சுமடூு தந்தாய்‌ வன்பரங்கள்‌ எடுத்து ஐவர்‌ திசை திசை வலித்தெற்றுகின்றனர்‌ முன்பரவை கடைந்து அமுதம்‌ கொண்ட மூர்த்தியோ!

3347

கொண்ட மூர்த்தி ஓர்‌ மூவராய்க்‌ குணங்கள்‌ படைத்து அளித்துக்‌ கெடுக்கும்‌ அப்‌ புண்டரீகக்‌ கொப்பூழ்ப்‌ புனற்‌ பள்ளி அப்பனுக்கே தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ ! முன்னை சடகோபன்‌ சொல்லாயிரத்துள்‌ இப்பத்தும்‌ கண்டு பாட வல்லார்‌ வினை போம்‌ கங்குலும்‌ பகலே