Skip to the text
திருவாய்மொழி

6-5. துவளில்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை, நீர் இனி அன்னைமீர்!" — தொலைவில்லிமங்கலத்தை வணங்கும் இவளை இனி விட்டுவிடுங்கள் என்று அன்னையரிடம் சொல்லும் பதிகம். அவளைத் திருத்த முயல்வது பயனற்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் தருணம் இது. எதிர்ப்பு ஓய்ந்து, ஏற்பு தொடங்குகிறது.

திருவாய்மொழி 6-5 துவளில்‌

3271

துவளில்‌ மாமணி மாடம்‌ ஓங்கு தொலைவில்லி' மங்கலம்‌ தொழும்‌ இவளை நீர்‌ இனி அன்னைமீர்‌! உமக்கு ஆசை இல்லை விடூுமினோ தவள ஒண்சங்கு சக்கரம்‌ என்றும்‌ தாமரைத்‌ தடங்கண்‌ என்றும்‌ குவளை ஒண்மலர்க்‌ கண்கள்‌ நீர்‌ மல்க நின்று நின்று குமுறுமே

3272

குமுறும்‌ ஓசை விழவொலித்‌ தொலைவில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு அமுத மென்மொழியாளை நீர்‌ உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்‌ திமிர்‌ கொண்டாலொத்து நிற்கும்‌ மற்றிவள்‌ தேவதேவ பிரான்‌ என்றே நிமியும்‌ வாயொடு கண்கள்‌ நீர்‌ மல்க நெக்கொசிந்து கரையுமே

3273

கரைகொள்‌ பைம்பொழில்‌ தண்பணைத்‌ தொலைவில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு உரைகொள்‌ இன்மொழியாளை நீர்‌ உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்‌ திரைகொள்‌ பெளவத்துச்‌ சேர்ந்ததும்‌ திசை ஞாலம்‌ தாவி அளந்ததும்‌ நிரைகள்‌ மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண்‌ நீர்‌ மல்க நிற்குமே

3274

நிற்கும்‌ நான்மறை வாணர்‌ வாழ்‌ தொலைவில்லி மங்கலம்‌ கண்ட பின்‌ அற்கம்‌ ஒன்றும்‌ அறவுறாள்‌ மலிந்தாள்‌ கண்டீர்‌ இவள்‌ அன்னைமீர்‌! கற்கும்‌ கல்வி எல்லாம்‌ கருங்கடல்‌ வண்ணன்‌ கண்ணபிரான்‌ என்றே ஒற்கம்‌ ஒன்றுமிலள்‌ உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே

3275

குழையும்‌ வாள்முகத்தேழையைத்‌ தொலைவில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு இழைகொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்கண்‌ பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌ மழை பெய்தால்‌ ஒக்கும்‌ கண்ண நீரினொடு அன்று தொட்டும்மையாந்து இவள்‌ நுழையும்‌ சிந்தையள்‌ அன்னைமீர்‌! தொழும்‌ அத்திசை உற்று நோக்கியே

3276

நோக்கும்‌ பக்கம்‌ எல்லாம்‌ கரும்பொடு செந்நெலோங்கு செந்தாமரை வாய்க்கும்‌ தண்பொருநல்‌ வடகரை வண்தொலைவில்லி மங்கலம்‌ நோக்குமேல்‌ அத்திசை அல்லால்‌ மறு நோக்கிலள்‌ வைகல்‌ நாள்தொறும்‌ வாய்க்கொள்‌ வாசகமும்‌ மணிவண்ணன்‌ நாமமே இவள்‌ அன்னைமீர்‌!

3277

அன்னைமீர்‌! அணிமாமயில்‌ சிறு மானிவள்‌ நம்மைக்‌ கைவலிந்து என்ன வார்த்தையும்‌ கேட்குறாள்‌ தொலைவில்லி மங்கலம்‌ என்றல்லால்‌ முன்னம்‌ நோற்ற விதி கொலோ? முகில்வண்ணன்‌ மாயங்கொலோ? அவன்‌ சின்னமும்‌ திருநாமமும்‌ இவள்‌ வாயனகள்‌ திருந்தவே

3278

திருந்து வேதமும்‌ வேள்வியும்‌ திருமாமகளிரும்‌ தாம்‌ மலிந்‌ திருந்து வாழ்‌ பொருநல்‌ வடகரை வண்தொலைவில்லி மங்கலம்‌ கருந்தடங்கண்ணி கை தொழுத அந்நாள்‌ தொடங்கி இந்நாள்‌ தொறும்‌ இருந்திருந்து அரவிந்தலோசன! என்றேன்றே நைந்திரங்குமே

3279

இரங்கி நாள்தொறும்‌ வாய்வெரீ இ இவள்‌ கண்ணநீர்கள்‌ அலமர மரங்களும்‌ இரங்கும்‌ வகை மணிவண்ணவோ! என்று கூவுமால்‌ துரங்கம்‌ வாய்‌ பிளந்தான்‌ உறை தொலைவில்லி மங்கலம்‌ என்று தன்‌ கரங்கள்‌ கூப்பித்‌ தொழும்‌ அவ்வூர்த்‌ திருநாமம்‌ கற்றதற்‌ பின்னையே

3280

பின்னை கொல்‌? நிலமாமகள்‌ கொல்‌? திருமகள்‌ கொல்‌? பிறந்திட்டாள்‌ என்ன மாயங்கொலோ? இவள்‌ நெடுமால்‌ என்றே நின்று கூவுமால்‌ முன்னி வந்தவன்‌ நின்றிருந்து உறையும்‌ தொலைவில்லி மங்கலம்‌ சென்னியால்‌ வணங்கும்‌ அவ்வூர்த்‌ திருநாமம்‌ கேட்பது சிந்தையே

3281

சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையினாலும்‌ தேவ பிரானையே தந்தை தாய்‌ என்றடைந்த வண்குருகூரவர்‌ சடகோபன்‌ முந்தை ஆயிரத்துள்‌ இவை தொலைவில்லி மங்கலத்தைச்‌ சொன்ன செந்தமிழ்‌ பத்தும்‌ வல்லார்‌ அடிமை செய்வார்‌ திருமாலுக்கே