மானமரு மென்னோக்கி வைதேவி இன்துணையா கானமரும் கல்லதர் போய்க் காடூறைந்தான் காணேடீ! கானமரும் கல்லதர் போய்க் காடூறைந்த பொன்னடிக்கள் வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே!
11-5. மானமரும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"வைதேவியை இன்துணையாகக் கொண்டு, கல்லதர் வழியே காடுறைந்தான் காணேடீ" — சீதையுடன் காடு சென்ற இராமனைத் தோழிக்குச் சுட்டிக்காட்டும் பதிகம். அரண்மனையை விட்டுக் கல்பாதையில் நடந்ததையே ஆழ்வார் சிறப்பாகச் சொல்கிறார். இணைந்து துன்பம் அனுபவிப்பதே அன்பின் அளவுகோல்.
பெரிய திருமொழி 11-5 - மானமரும் (இரண்டு தோழியர் எம்பெருமானது ஸெளலப்யத்தையும் பரத்வத்தையும் எதிரெதிராகக் கூறுதல்)
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ! நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே!
ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ! தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ் வேழுலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே!
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான் காணேடீ! ர் உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்த பொன் வயிற்றுக்கு எறிநீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே!
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ! கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டூண்டான் ஆகிலும் எண்ணற்கரியன் இமையோர்க்கும் சாழலே!
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ! மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே!
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடூவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ! தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓதநீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே!
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேர் ஊர்ந்தான் காணேடீ! தேர் மன்னர்க்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே!
கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய் வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ! வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும் விண்டேழுலகுக்கும் மிக்கான் காண் சாழலே!
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ! வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே!
அடிவரவு: மானமரும் தந்தை ஆழ்கடல் அறியாதார்க்கு வண்ணம் கன்ற கோதை பார்மன்னர் கண்டார் கள்ளத்தால் மைந்நின்ற