Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

4-2. அலம்பா வெருட்டா

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

திருமாலிருஞ்சோலையைப் பாடும் பதிகம் தொடர்கிறது. அரக்கரை அழித்தவன், வாளரக்கன் முடியைத் தள்ளியவன், மல்லரைத் தகர்த்தவன் என அவனது வீரம் ஒவ்வொரு பாசுரத்திலும் நினைவுகூரப்படுகிறது. ஆயர்கள் கூடி அமைத்த விழாவும், யானையின் துயர் தீர்த்த கருணையும் இடம்பெறுகின்றன. வலிமையும் இரக்கமும் ஒருங்கே உறையும் மலை இது என்பதே பொருள்.

பெரியாழ்வார்‌ திருமொழி 4-2 அலம்பா வெருட்டா (திருமாலிருஞ்சோலை மலைச்‌ சிறப்பு)

338

அலம்பா வெருட்டாக்‌ கொன்று திரியும்‌ அரக்கரை குலம்‌ பாழ்‌ படுத்துக்‌ குல விளக்காய்‌ நின்ற கோன்‌ மலை சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள்‌ ஆடும்‌ சீர்‌ சிலம்பாறு பாயும்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

339

வல்லாளன்‌ தோளும்‌ வாளரக்கன்‌ முடியும்‌ தங்கை பொல்லாத மூக்கும்‌ போக்குவித்தான்‌ பொருந்தும்‌ மலை எல்லா இடத்திலும்‌ எங்கும்‌ பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும்‌ சீர்த்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

340

தக்கார்‌ மிக்கார்களைச்‌ சஞ்சலம்‌ செய்யும்‌ சலவரை தெக்கா நெறியே போக்குவிக்கும்‌ செல்வன்‌ பொன்மலை ர்‌ எக்காலமும்‌ சென்று சேவித்திருக்கும்‌ அடியரை அக்காநெறியை மாற்றும்‌ தண்‌ திருமாலிருஞ்சோலையே

341

ஆனாயர்‌ கூடி அமைத்த விழவை அமரர்‌ தம்‌ கோனார்க்கொழியக்‌ கோவர்த்தனத்துச்‌ செய்தான்‌ மலை வானாட்டில்‌ நின்று மாமலர்க்‌ கற்பகத்தொத்திழி தேனாறு பாயும்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

342

ஒரு வாரணம்‌ பணி கொண்டவன்‌ பொய்கையில்‌ கஞ்சன்‌ தன்‌ ஒரு வாரணம்‌ உயிர்‌ உண்டவன்‌ சென்றுறையும்‌ மலை வாரணம்‌ தன்‌ பிடி துறந்தோட கடல்வண்ணன்‌ திருவாணை கூறத்‌ திரியும்‌ தண்‌ திருமாலிருஞ்சோலையே

343

ஏவிற்றுச்‌ செய்வான்‌ ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத்‌ தகர்த்த சாந்தணி தோள்‌ சதுரன்‌ மலை ஆவத்தனமென்று அமரர்களும்‌ நன்முனிவரும்‌ சேவித்திருக்கும்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

344

மன்னர்‌ மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்‌ மேல்‌ முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன்‌ மலை கொன்னவில்‌ கூர்வேற்கோன்‌ நெடுமாறன்‌ தென்‌ கூடற்கோன்‌ தென்னன்‌ கொண்டாடும்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

345

குறுகாத மன்னரைக்‌ கூடு கலக்கி வெங்கானிடைச்‌ சிறுகால்‌ நெறியே போக்குவிக்கும்‌ செல்வன்‌ பொன்மலை அறுகால்‌ வரி வண்டுகள்‌ ஆயிர நாமம்‌ சொல்லி சிறுகாலைப்‌ பாடும்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

346

சிந்தப்‌ புடைத்துச்‌ செங்குருதி கொண்டு பூதங்கள்‌ அந்திப்‌ பலி கொடுத்து ஆவத்தனம்‌ செய்‌ அப்பன்‌ மலை இந்திர கோபங்கள்‌ எம்பெருமான்‌ கனி வாயொப்பான்‌ சிந்தும்‌ புறவில்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

347

எட்டுத்‌ திசையும்‌ எண்ணிறந்த பெருந்தேவிமார்‌ விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்‌ மலை பட்டிப்‌ பிடிகள்‌ பகடூறிஞ்சிச்‌ சென்று மாலை வாய்த்‌ தெட்டித்‌ திளைக்கும்‌ தென்‌ திருமாலிருஞ்சோலையே

348

மருதப்‌ பொழிலணி மாலிருஞ்சோலை மலை தன்னை கருதி உறைகின்ற கார்க்கடல்‌ வண்ணன்‌ அம்மான்‌ தன்னை விரதம்‌ கொண்டேத்தும்‌ வில்லிபுத்தூர்‌ விட்டு சித்தன்‌ சொல்‌ கருதி உரைப்பவர்‌ கண்ணன்‌ கழலிணை காண்பர்களே