Skip to the text
அடைக்கலப்பத்து

அடைக்கலப்பத்து

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

பதினொரு பாசுரங்களில் அமைந்த சரணாகதி நூல். "தந்திரங்கள் வேறின்றி, தமது வழி அழியாது" — வேறு உபாயங்கள் இன்றி, மந்திரங்களாலும் உரைகளாலும் அவனையே அடைக்கலமாகக் கொள்வதைச் சொல்கிறது. கேட்பது ஒன்றே — அடைக்கலம். கேட்கும் முறையின் எளிமையே இந்நூலின் வலிமை.

1

பத்தி முதலாம்‌ அவற்றில்‌ பதி எனக்குக்‌ கூடாமல்‌ எத்திசையும்‌ உழன்றோடி இளைத்துவிழும்‌ காகம்‌ போல்‌ முத்திதரு நகரேழில்‌ முக்கியமாம்‌ கச்சிதனில்‌ அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்‌ நான்‌ புகுந்தேனே

2

சடைமுடியன்‌ சதுர்முகனென்று இவர்முதலாம்‌ தரமெல்லாம்‌ அடைய வினைப்பயனாகி அழிந்துவிடும்‌ படி கண்டு கடி மலராள்‌ பிரியாத கச்சிநகர்‌ அத்திகிரி இடமுடைய அருளாளர்‌ இணையடிகள்‌ அடைந்தேனே

3

தந்திரங்கள்‌ வேறின்றித்‌ தமது வழி அழியாது மந்திரங்கள்‌ தம்மாலும்‌ மற்றுமுள்ள உரையாலும்‌ அந்தரம்‌ கண்டடிபணிவார்‌ அனைவர்க்கும்‌ அருள்புரியும்‌ சிந்துர வெற்பிறையவனார்‌ சீலம்‌ அல்லதறியேனே

4

காகம்‌ இராக்கதன்‌ மன்னர்‌ காதலி கத்திரபந்து நாகம்‌ அரன்‌ அயன்‌ முதலா நாகநகரார்‌ தமக்கும்‌ போகமுயர்‌ வீடுபெறப்‌ பொன்னருள்‌ செய்தமை கண்டு நாகமலை நாயகனார்‌ நல்லடிப்‌ போதடைந்தேனே

5

உகக்கும்‌ அவை உகந்து உகவாவனைத்தும்‌ ஒழிந்து உறவுகுணம்‌- மிகத்‌ துணிவு பெறவுணர்ந்து வியன்‌ காவலென வரித்துச்‌ சகத்தில்‌ ஒரு புகலில்லாத்‌ தவம்‌ அறியேன்‌ மதிட்கச்சி நகர்க்‌ கருணை நாதனை நல்லடைக்கலமாய்‌ அடைந்தேனே

6

அளவுடையார்‌ அடைந்தார்க்கும்‌ அதன்‌ உரையே கொண்டவர்க்கும்‌ வளவுரை தந்தவன்‌ அருளே மன்னிய மாதவத்தோர்க்கும்‌ களவொழிவார்‌ எமரென்ன இசைந்தவர்க்கும்‌ காவலராம்‌ துளவ முடி அருள்‌ வரதர்‌ துவக்கிலெனை வைத்தேனே

7

உமதடிகள்‌ அடைகின்றேன்‌ என்று ஒரு கால்‌ உரைத்தவரை அமையுமினி என்பவர்‌ போல்‌ அஞ்சலெனக்‌ கரம்‌ வைத்து தமதனைத்தும்‌ அவர்‌ தமக்கு வழங்கியும்‌ தாம்‌ மிக விளங்கும்‌ அமைவுடைய அருளாளர்‌ அடியிணையை அடைந்தேனே

8

திண்மை குறையாமைக்கும்‌ நிறைகைக்கும்‌ தீவினையால்‌ உண்மை மறவாமைக்கும்‌ உளமதியில்‌ உகக்கைக்கும்‌ தண்மை கழியாமைக்கும்‌ தரிக்கைக்கும்‌ தணிகைக்கும்‌ வண்மையுடை அருளாளர்‌ வாசகங்கள்‌ மறவேனே

9

சுருதி நினைவிவையறியும்‌ துணிவுடையார்‌ தூமொழிகள்‌ பரிதிமதி ஆசிரியர்‌ பாசுரம்‌ சேர்ந்தருக்கணங்கள்‌ கருதியொரு தெளிவாளால்‌ கலக்கம்‌ அறுத்தத்திகிரிப்‌ பரிதிமதி நயனமுடைப்‌ பரமன்‌ அடி பணிந்தேனே

10

திருமகளும்‌ திருவடிவும்‌ திருவருளும்‌ தெள்ளறிவும்‌ அருமை இலாமையும்‌ உறவும்‌ அளப்பரிய வடியரசும்‌ கருமம்‌ அழிப்பளிப்பமைப்பும்‌ கலக்கம்‌ இலா வகைநின்ற அருள்‌ வரதர்‌ நிலை இலக்கில்‌ அம்பென நான்‌ அமிழ்ந்தேனே

11

ஆறு பயன்‌ வேறில்லா அடியவர்கள்‌ அனைவர்க்கும்‌ ஆறும்‌ அதன்‌ பயனும்‌ இவை ஒருகாலும்‌ பலகாலும்‌ ஆறு பயன்‌ எனவே கண்டு அருளாளர்‌ அடியிணைமேல்‌ கூறிய நற்குண உரைகள்‌ இவை பத்தும்‌ கோதிலவே