Skip to the text
மெய்விரதமான்மியம்

மெய்விரதமான்மியம்

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

"வம்மின் புலவீர்!" — கவிஞர்களை விளித்து அழைத்துத் தொடங்கும் நூல். அருளாளப் பெருமாள் என்றும், அருளாழி அம்மான் என்றும் அவனை அழைத்து, மெய்யான விரதத்தின் மகிமையைச் சொல்கிறார். சடங்கின் வெளிவடிவத்தை அல்ல, அதன் உண்மைப் பொருளையே இந்நூல் வலியுறுத்துகிறது.

1

வாழி அருளாளர்‌ வாழி அணி அத்திகிரி வாழி எதிராசன்‌ வாசகத்தோர்‌ -வாழி சரணாகதி என்னும்‌ சார்வுடன்‌ மற்றொன்றை அரணாகக்‌ கொள்ளாதார்‌ அன்பு

2

எண்டிசையும்‌ கடலேழு மலைகள்‌ ஏழும்‌ ஈரேழு வையகமும்‌ படைத்திலங்கும்‌ புண்டரிகத்தயன்‌ புணர்த்த பெரிய வேள்விப்‌ புனித நறும்‌ போக்கியத்தை உவந்து வந்து தொண்டையெனுமண்டலத்தினடுவில்‌ பாரில்‌ தூநிலமெய்விரதத்துத்‌ தோன்றி நின்ற கொண்டல்‌ அருள்‌ குணமே நாம்‌ கூறுகின்றோம்‌ கூர்மதியீர்‌! குறியாகக்‌ கொண்மினீரே

3

வம்மின்‌ புலவீர்‌! அருளாளப்‌ பெருமாள்‌ என்றும்‌ அருளாழி அம்மான்‌ என்றும்‌ திருமகளைப்‌ பெற்றும்‌ என்‌ நெஞ்சம்‌ கோயில்‌ கொண்ட பேரருளாளர்‌ என்றும்‌ வியப்பா விருதூதும்‌ படி கரை புரண்ட கருணைக்கடலை எவ்வண்ணம்‌ பேசுவீர்‌ ஈதென்ன பாங்கே

4

ஒன்றே புகலென்று உணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ அன்றே அடைக்கலம்‌ கொண்ட நம்மத்திகிரித்‌ திருமால்‌ இன்றே இசையின்‌ இணையடி சேர்ப்பர்‌ இனிப்பிறவோம்‌ நன்றே வருவதெலாம்‌ நமக்கு பரமொன்றிலதே

5

வம்பவிழ்‌ போதமர்‌ மாதர்‌ உகந்த அம்‌ மாநிதியைத்‌ தன்பலமே கொண்டு காணக்கருதிய தாமரையோன்‌ முன்பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ்‌ மதியாய்‌ அம்புலி வேண்டிய பாலனைப்‌ போல அழுதனனே

6

அடங்காக்‌ கரணங்கள்‌ ஐந்துடன்‌ ஆறும்‌ அடக்கி முன்னம்‌ நெடுங்காலம்‌ இந்நிலமே நிலையாப்‌ பூண்டு நீடுறைவான்‌ சடங்கால்‌ பெரிய தவங்கள்‌ செய்தேன்‌ என்ன தன்மை இதென்று இடம்‌ காத்திருந்த திசைமுகன்‌ தன்னை இகழ்ந்தனனே

7

விண்ணுலகில்‌ வீற்றிருந்த மேன்மையாலும்‌ வேதங்கள்‌ ஈரிரண்டும்‌ விரித்தலாலும்‌ கண்ணனை நான்‌ கருத்துறவே காண்பன்‌ என்னக்‌ காணாமல்‌ விலக்கிய தன்‌ வினையைக்‌ காணா எண்ணிய நல்‌ புவனங்கள்‌ ஏழுமாறும்‌ இருமூன்று தீவமும்‌ எட்டிடமும்‌ விட்டுப்‌ பண்ணிய நல்‌ விரதமெலாம்‌ பலிக்கும்‌ என்று பாரதத்தில்‌ பங்கயத்தோன்‌ படிந்திட்டானே

8

எத்திசை நிலனும்‌ எய்தி அருந்தவம்‌ செய்த அந்நாள்‌ சத்தியவிரதம்‌ செல்வாய்‌ என்ற ஓருரையின்‌ சார்வால்‌ அத்திசைச்‌ சென்றழைத்து அங்கமரர்‌ இல்லெடுப்பான்‌ தன்னை உத்தரவேதிசெய்‌ என்று உரை அணங்கிறை உரைத்தான்‌

9

உத்தம அமர்த்தலம்‌ அமைத்ததோர்‌ எழில்‌ தனுவின்‌ உய்த்த கணையால்‌ அத்திர அரக்கன்‌ முடிபத்தும்‌ ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்‌ மத்துறு மிகுத்த தயிர்‌ மொய்த்த வெணெய்‌ வைத்ததுணும்‌ அத்தன்‌ இடமாம்‌ அத்திகிரி பத்தர்‌ வினை தொத்தற அறுக்கும்‌ அணி அத்திகிரியே

10

திண்மணிகள்‌ பொன்னுடனே சேர்தலாலும்‌ சிதையாத நூல்‌ வழியில்‌ சேர்த்தியாலும்‌ வண்மை எழும்‌ ஈரிரண்டு வண்ணத்தாலும்‌ வானவர்க்கும்‌ வியப்பான வகுப்பினாலும்‌ ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும்‌ ஒருகாலும்‌ அழியாத அழகினாலும்‌ மண்மகளார்க்‌ கலங்காரம்‌ என்ன மன்னும்‌ மதிட்கச்சி நகர்‌ கண்டு மகிழ்ந்திட்டானே

11

காமங்கள்‌ பலகொண்ட வேதம்‌ கொண்டு கைதவமே செய்வார்க்குக்‌ காணகில்லாப்‌ பூமங்கை கேள்வனை நான்‌ கண்டு போற்றப்‌ புண்ணியத்தில்‌ நிகரில்லா விரதம்‌ பூண்டேன்‌ சாமங்கள்‌ கழிவதன்‌ முன்‌ சடக்கெனப்போய்த்‌ தன்னாற்றில்‌ தனியிருந்து தவம்‌ செய்கின்ற நாமங்கை வந்திட நீ அழைப்பாய்‌ என்று நன்மகனை நான்முகன்‌ தான்‌ நவின்றிட்டானே

12

அன்னவடிவாள்‌ அசையும்‌ அன்னநடையாள்‌ உயரும்‌ அன்ன அரசேறி வருவாள்‌ அத்தன்‌ அயன்‌ அத்தனயன்‌ உத்திதனை அத்திதென உத்திபுரியாள்‌ நல்‌ நடைவிடா நடம்‌ இதென்ன நடவா நடுவு நண்ணு குவடேறி இழிவாள்‌ நற்பதிகள்‌ அற்பதிகள்‌ கற்புரள அற்புத மருள்‌ கதியினால்‌ கல்‌ நடை விடா இடமில்‌ உன்னதி சிறா விகட மன்னுகிரி கூடமிடியக்‌ கட்டவிடை இற்றுவிழ முற்றும்‌ விழி உற்றடைய விட்டருகுற அன்ன நயசீர்‌ அயனிதென்னென விழா அமரர்‌ மன்னு பதியேறி மகிழ அச்சுதன்‌ அணைத்தனுவில்‌ அத்திசை வரத்தகைய அற்றணுகினாள்‌

13

அன்று நயந்த அயமேத மா வேள்வி பொன்ற உரை அணங்கு பூம்புனலாய்க்‌ கன்றிவர ஆதி அயனுக்கு அருள்‌ செய்தணையானான்‌ தாதை அரவணையான்‌ தான்‌

14

தரணியில்‌ மன்னி அயனார்‌ தனித்தவம்‌ காத்தபிரான்‌ கருணை எனும்‌ கடலாடித்‌ திருவணை கண்டதற்பின்‌ திரள்‌ நரகெண்ணிய சித்திரகுத்தன்‌ தெரித்து வைத்த சுருணையில்‌ ஏறிய சூழ்வினை முற்றும்‌ துறந்தனமே

15

சுகலேசம்‌ எண்ணிய சூழ்வினை தீர்க்கத்‌ துணிந்தயனார்‌ அகலாத அன்புடன்‌ கொண்ட அயமேத வேதியின்‌ மேல்‌ புகலோங்கு பொன்மலையன்ன ஓர்‌ புண்ணிய கோடியுடன்‌ பகலோன்‌ பகல்‌ விளக்காகப்‌ பரஞ்சுடர்‌ தோன்றியதே

16

பெருமையுடை அத்திகிரிப்‌ பெருமாள்வந்தார்‌ பேராத அருள்‌ பொழியும்‌ பெருமாள்‌ வந்தார்‌ அருமறையின்‌ உச்சிதனில்‌ நின்றார்‌ வந்தார்‌ அங்கமுடன்‌ அவையாகும்‌ அரியோர்‌ வந்தார்‌ திருவுரையாய்த்‌ தாம்‌ பொருளாய்‌ நிற்பார்‌ வந்தார்‌ திருவருளால்‌ செழுங்கலைகள்‌ தந்தார்‌ வந்தார்‌ மருவலர்க்கு மயக்குரைக்கும்‌ மாயோர்‌ வந்தார்‌ வானேற வழி தந்தார்‌ வந்தார்‌ தாமே

17

அத்திகிரி அருளாளப்‌ பெருமாள்‌ வந்தார்‌ ஆனைபரி தேரின்மேல்‌ அழகர்‌ வந்தார்‌ கச்சிதனில்‌ கண்கொடுக்கும்‌ பெருமாள்‌ வந்தார்‌ கருத வரம்‌ தரு தெய்வப்‌ பெருமாள்‌ வந்தார்‌ முத்திமழை பொழியு முகில்‌ வண்ணர்‌ வந்தார்‌ மூலமென ஓலமிட வல்லார்‌ வந்தார்‌ உத்திர வேதிக்குள்ளே உதித்தார்‌ வந்தார்‌ உம்பர்தொழும்‌ கழலுடையார்‌ வந்தார்‌ தாமே

18

இரு பரிதி இயைந்த மகுடமும்‌ எழில்‌ மதி திகழ்ந்த வதனமும்‌ இருவகை இலங்கு குழைகளில்‌ எதிர்‌ பொர உகந்த மகரமும்‌ ஒரு தகவுயர்ந்த திருமகள்‌ ஒளி மறுவின்‌ மன்னும்‌ அகலமும்‌ உருவருவுமிழ்ந்த உதரமும்‌ உலகடைய நின்ற கழல்களும்‌ மருவின்‌ இடை பொங்கு புனலென மலை குனிய நின்ற மலையென மருளற விளங்கும்‌ ஒளியென மலர்‌ அயன்‌ உகந்த பயனென அருவில்‌ உறைகின்ற உயிரென அடியவர்‌ உகந்த அமுதென அரு மறைகள்‌ ஒன்றி அடிதொழ அருள்‌ வரதர்‌ நின்ற பெருமையே

19

சித்தசித்தென விரித்துரைத்தன அனைத்தமைத்‌ துறையும்‌ இறைவனார்‌ சிறிய பெரிய உருவுடைய உடலமென நடலம்‌ இலதிலகுநிலையினார்‌ சித்திரத்தெழிலை ஒத்த பத்தரொடு முத்தர்‌ பித்தி எனும்‌ உணர்வினார்‌ சிதைவில்‌ மறைநெறியில்‌ எறியவுரு முறைகள்‌ முறிய சிறை அரிய நிறைவினார்‌ கத்துவிக்க வல கத்துவித்தை வழி கற்றவர்க்கசைவில்‌ மறையினார்‌ கபிலர்‌ கணசரணர்‌ சுகதர்‌ சமணர்‌ அரர்‌ வழிகளழியும்‌ அருள்‌ மொழியினார்‌ கத்திலக்கிலும்‌ அருக்‌ குலத்திலும்‌ அசித்தில்‌ ஒக்கும்‌ ஒரு முதல்வனார்‌ கரணம்‌ இடுகடிய பதினோர்‌ இருடிகமும்‌ அடைய முடியும்‌ அடி இருடியார்‌ ஒத்தனைத்துலகும்‌ ஒற்றியொற்றி வரும்‌ இப்பவத்திசையினிசைவினார்‌ உருவம்‌ அருவம்‌ எனும்‌ உலகின்‌ முடுகிலதில்‌ உவமையிலதிலகு தலைவனார்‌ உத்தமப்‌ படி வகுத்த வித்தைகளில்‌ உத்தரிக்க உணர்‌ குணவனார்‌ உரிய கிரிசைகளில்‌ அரியதொரு விரகு தெரிய விரையும்‌ அவர்‌ பரிவினார்‌ சத்தசத்தெனும்‌ அனைத்தணைத்த வினை தொத்‌ தறுக்க வல துணிவினார்‌ சரியும்‌ அளவில்‌ உரியவரை அறிவரிய தமனி நெறி செருகு விரகினார்‌ தத்துவத்‌ திரள்‌ உதைத்துதைத்தடைவு தத்துவிக்கும்‌ அவர்‌ தலைவனார்‌ தருகை உணரும்‌ அவர்சரணம்‌ அணுக விடலரிய அருள்‌ வரதர்‌ அடியமே

20

திருமகள்‌ மண்மகள்‌ நீளை முதலா எல்லாத்‌ தேவியரும்‌ தன்னுடனே திகழ்ந்து நிற்கத்‌ தருமம்‌ இருமூன்று முதலனைத்தும்‌ தோன்றத்‌ தன்னனைய சூரியர்‌ தன்னடிக்கீழ்‌ வாழ அருமறைசேர்‌ அளவில்லா அவனியின்‌ கண்‌ அரவணை மேல்‌ வீற்றிருப்பால்‌ அனைத்தும்‌ காக்கும்‌ கருமணியைக்‌ கரிகிரி மேல்‌ கண்டேன்‌ என்‌ தன்‌ கடுவினைகள்‌ அனைத்தும்‌ நான்‌ கண்டிலேனே

21

பெடை இரண்டை ஒர்‌ அனம்‌ அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்‌ பெருகும்‌ அருவிகள்‌ அருகு மருவிய பெரிய மணிவரை பயிலலாம்‌ பிடி இரண்டொடு களவம்‌ ஒன்று பிணைந்த பேரழகோதலாம்‌ பிரிவில்‌ ஒளியொடு நிழலும்‌ அருகுறும்‌ இரவி இலகுதல்‌ பரவலாம்‌ கொடி இரண்டொடு விடவி ஒன்று குளிர்ந்தவாறு குலாவலாம்‌ குறைவில்‌ சுருதியும்‌ நினைவும்‌ இலகிய தரும அருநிலை என்னலாம்‌ அடி இரண்டையும்‌ அடையும்‌ அன்பர்‌ அறிந்த பேரருளாளனார்‌ அணுகுமலர்மகள்‌ அவனி மகளொடு கரடி கிரியினில்‌ அவிர்தலே

22

வேரொப்பார்‌ விண்‌ முதலாம்‌ காவுக்கெல்லாம்‌ விழியொப்பார்‌ வேதமெனும்‌ கண்‌ தனக்குக்‌ காரொப்பார்‌ கருணைமழை பொழியு நீரால்‌ கடலொப்பார்‌ கண்டிடினும்‌ காணாக்‌ கூத்தால்‌ நீரொப்பார்‌ நிலமளிக்கும்‌ தன்மை தன்னால்‌ நிலமொப்பார்‌ நெடும்பிழைகள்‌ பொறுக்குநேரால்‌ ஆரொப்பார்‌ இவர்‌ குணங்கள்‌ அனைத்தும்‌ கண்டால்‌ அருளாளர்‌ தாம்‌ எனினும்‌ தமக்கொவ்வாரே

23

எந்நிலமும்‌ குரத்தால்‌ குறிசெய்த எழிற்‌ பரிகொண்டு அன்னம்‌ உயர்த்த செய்யோன்‌ அன்றுவேள்விசெய்‌ வேதியின்மேல்‌ முன்னிலையாகிய மூர்த்தியன்‌ நான்முக! மற்றும்‌ உனக்கு என்ன வரம்‌ தருவோம்‌ என்று நாதன்‌ இயம்பினனே

24

சென்று மலர்பறித்து எந்நாதன்‌ சேவடிப்‌ போதுகந்து நன்றென நீர்சுடர்‌ நன்‌ முகவாசம்‌ இலை கொடுத்துக்‌ கன்னல்‌ இலட்டுவத்தோடு அன்னம்‌ சீடை கறிபடைத்துப்‌ பின்னும்‌ செவித்தவன்பாதம்‌ பணிமின்கள்‌ என்றனனே

25

ஆழிநிலை வினை கடிவான்‌ அயமேதமுடித்த தற்பின்‌ வேழமலை நாயகனார்‌ விடைகொடுக்க விண்ணேறி நாழிகையில்‌ வானவரை மாற்றியிடு நான்முகன்‌ தான்‌ ஊழியெலாம்‌ அழியாத உயோகம்‌ அடைந்திருந்தானே

26

ஆதியுகத்தயன்‌ கண்டிட நின்ற அருள்‌ வரதர்‌ காதல்‌ உயர்ந்த களிற்றைத்‌ திரேதையில்‌ காத்தளித்து வாதுயர்‌ தேவகுருவுக்கிரங்கித்‌ துவாபரத்தில்‌ சோதி அனந்தன்‌ கலியில்‌ தொழுதெழ நின்றனரே

27

புண்டரீகம்‌ உயர்த்த புராணனார்‌ பொய்யில்‌ மாமக உத்தர வேதியில்‌ கொண்டல்‌ ஆரருள்‌ மாரி பொழிந்திடக்‌ கொண்டதோருயர்‌ கூர்மதி அன்பினால்‌ பண்டை நான்மறை மெளலி படிந்த யான்‌ பாரில்‌ மெய்விரதக்‌ கவி பாடினேன்‌ தொண்டை மண்டல வேதியர்‌ வாழவே தூய தென்மறை வல்லவர்‌ வாழவே

28

உய்விரதம்‌ ஒன்றின்றி அடைந்தார்‌ உய்ய ஒருவிரதம்‌ தான்கொண்ட உயர்ந்த மாலைச்‌ செய்விரதம்‌ ஒன்றாலும்‌ தெளிய கில்லாச்‌ சிந்தையினால்‌ திசை படைத்த திசை முகன்‌ தான்‌ பொய்விரத நிலமெல்லாம்‌ போயே மீண்டு புகலிதுவே புண்ணியத்துக்கென்று சேர்ந்த மெய்விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த ஆசிரியன்‌ விளங்கினானே

29

சீராரும்‌ தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ தாரார்‌ அருளாளர்‌ தாள்‌ நயந்து -சீராக மெய்விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்‌ கையில்‌ கனிபோலக்‌ கண்டு