எண்டள வம்புயத்துள் இலங்கும் அறுகோணமிசை வண்பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம் திண்கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம் எண்படை ஏந்தி நின்றான் எழிலாழி இறையவனே
பரமதபங்கம்
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
பிற மதங்களின் கொள்கைகளை ஆராய்ந்து மறுக்கும் நூல். "போம் உரைக்கும் பொருள் யாம் அறியோம்; பொருளார் மறையில் தாம் உரைக்கின்றன தாமே அறியும் தரம் உடையார்" என்று மறையின் பொருளை அறிய உரியவர் யார் என்று கேட்கிறார். வாதம் இங்கே வெறுப்பால் அல்ல, தெளிவுக்காகவே நிகழ்கிறது. தேசிகரின் தர்க்க ஆற்றல் தமிழில் வெளிப்படும் இடம் இது.
விடுநெறி அஞ்சி விடத் தொடக்கிய விதியர் அடைந்து தொழத் தழைத்தெழு விழியருள் தந்து விலக்கடிக்களை விரகில் இயம்பி விலக்கி வைத்தனர் கொடு வினை என்பதனைத் தினைத்தனை கொணர்தல் இகந்த குணத் தனத்தினர் குருகையில் வந்து கொழுப்படக்கிய குல பதி தந்த குறிப்பில் வைத்தனர் கடுநரகன்பு கழற்றி மற்றொரு கதி பெறும் அன்பில் எமைப் பொருத்தினர் கமலை உகந்த கடல் கிடைக்கடல் கருணை உயர்ந்த திடர்க்கொருக்கினர் படுமுதல் இன்றி வளர்த்த நற்கலை பல பல ஒன்ற எமக்குரைத்தனர் பழ மறையந்தி நடைக்கிடைச்சுவர் பரமதம் என்றதிடித்த பத்தரே
போமுரைக்கும் பொருள் யாமறியோம் பொருளார் மறையில் தாம் உரைக்கின்றன தாமே அறியும் தரமுடையார் ஆம் உரைக்கென்றிவை ஆய்ந்தெடுத்து ஆரண நூல் வழியே நாம் உரைக்கும் வகை நல்லருள் ஏந்தி நவின்றனரே
சித்தும் அசித்தும் இறையுமெனத் தெளிவுற்று நின்ற தத்துவமூன்றும் தனித்தனி காட்டும் தனி மறையால் முத்தி வழிக்கிது மூலமெனத் துணிவார்களையும் கத்தி மயக்கும் கதகரை நாம் கடிகின்றனமே
முத்தின் வடங்கள் என முகுந்தன் புனை மூவகையாம் சித்தில் அருஞ்சுருதிச் செவ்வை மாறிய சிந்தைகளால் பத்தில் இரண்டு மெய்க்கப் பகட்டும் பரவாதியர் தம் கத்தில் விழுந்தடைந்த அவ்வழுக்கின்று கழற்றினமே
நாக்கியலும் வகை நம்மை அளித்தவர் நல்லருளால் பாக்கியம் ஏந்திப் பரனடியார் திறம் பார்த்ததற்பின் தாக்கியர் தங்கள் தலைமிசைத் தாக்கித் தனிமறை தான் போக்கியம் என்றதனில் பொய்ம்மதங்களைப் போக்குவமே
தீவகை மாற்றி அன்றோர் தேரில் ஆரணம் பாடிய நம் தேவகிசீர் மகனார் திறம்பா அருள் சூடிய நாம் மூவகையாம் அறியாத் தத்துவத்தின் முகம் அறிவார் நாவகையே நடத்தும் நடை பார்த்து நடந்தனமே
வேலைப் புறமகம் காண்பது போல் வேத நன்னெறிசேர் நூலைப் புறமகம் காண்டலில் நுண் அறிவின்றி நின்றீர் மாலைப்பெற வழி காட்டிய தேசிகர் வாசகமே ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உள் எழுதுமினே
சிறை நிலையாம் பவத்தில் சிறுதேன் இன்பம் உண்டுழல்வார் மறை நிலை கண்டறியா மயல் மாற்றிய மன்னருளால் துறை நிலை பாரமெனத் துளங்காவமுதக் கடலாம் இறை நிலை யாம் உரைத்தோம் எம் குருக்கள் இயம்பினவே
வெறியார் துளவுடை வித்தகன் தன்மையின் மெய்யறிவார் குறியார் நெடியவர் என்று ஒரு குற்றம் பிறர்க்குரையார் அறியார் திறத்தில் அருள் புரிந்து ஆரண நன்னெறியால் சிறியார் வழிகள் அழிப்பதும் தீங்கு கழிப்பதற்கே
மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார் கண்டதற்கு விபரீதம் கத்துகின்றார் காணாத குறை மறையில் காட்ட நிற்பார் பண்டொருத்தன் கண்டுரைத்தேன் நானே என்னப் பலவகையில் உபாதிகளால் படிந்து வீழ்வார் கொண்டல் ஒக்கும் திருமேனி மாயக்கூத்தன் குரை கழல்சேர் விதி வகையில் கூடாதாரே
கண்டது மெய்யெனில் காணுமறையில் அறிவு கண்டோம் கண்டதலாததிலதெனில் கண்டிலம் குற்றமிதில் கண்டது போல் மறை காட்டுவதும் கண்டதொத்ததனால் உண்டது கேட்கும் உலோகாயதர் என்றுமீறுவதே
கண்டதனால் காணாததனுமிக்கின்றார் கண்டொருத்தன் உரைத்ததனைக் கவருகின்றார் உண்டுபசி கெடுமென்றே உணர்ந்துண்கின்றார் ஒன்றாலே ஒன்றைத் தாம் சதிக்கின்றார் பண்டுமுலை உண்டதனால் முலை உண்கின்றார் பார்க்கின்றார் பலவல்லாத் தன்மை மற்றும் கண்டு மதி கெட்ட நிலை காணகில்லார் காணாததிலதென்று கலங்குவாரே
காணாதிலதெனும் கல்வியினாரைக் கடிந்ததற்பின் கோணார் குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களில் நாணாதனைத்தும் இலதென்றும் நால்வகை அன்றிதென்றும் வாணாள் அறுக்கின்ற மத்திமத்தான் வழி மாற்றுவமே
மானமிலை மேயமிலை என்றும் மற்றோர் வாதநெறி இலையென்றும் வாது பூண்ட தானுமிலை தன்னுரையும் பொருளும் இல்லை தத்துவத்தின் உணர்த்தி சயம் இல்லை என்றும் வானவரும் மானவரும் மனமும் வெள்க வளம் பேசுமதிகேடன் மத்திமத்தான் தேனநெறி கொண்டனைத்தும் திருடா வண்ணம் செழுமதி போல் எழுமதியால் சேமித்தோமே
முற்றும் சகத்திலதென்றே பகட்டிய முட்டரை நாம் சுற்றும் துறந்து துறையில் நின்றே துகளாக்கிய பின் மற்றொன்றிலது மதி பல உண்டென்று வஞ்சனையால் சற்றும் துறந்த யோகாசாரனைச் சதிக்கின்றனமே
உளக்கதியை நாம் உள்ளி உள்ளந்தேறி உலகத்தார் உகந்திசைய உலகுண்டென்றோம் இளக்க அரிதாகிய நல் தருக்கம் சேர்ந்த எழில் மறையில் ஈசனுடன் எம்மைக் கண்டோம் விளக்கு நிரை போல் மதிகள் வேறாய் வேறொன்று அறியாதே விளங்கும் என விளம்புகின்ற களக்கருத்தன் கண்ணிரண்டும் அழித்தோம் நாணாக் காகம்போல் திரிந்தவன் என் கதறுமாறே
பொருள் ஒன்றிலதென்று போதமொன்றும் கொண்ட பொய்யரை நாம் தெருள் கொண்டு தீர்த்த பின் காணவொண்ணாப் பொருள் தேடுகின்ற மருள் கொண்ட சூதுரைக்கும் செளத்திராந்திகன் வண்ணிக்கை நாம் இருள் கொண்ட பாழுங்கிணறென்று இகழ்ந்தோட இயும்புவமே
நிலையில்லாப் பொருள் மதியை விளைத்துத் தான்சேர் நிறங்கொடுத்துத் தான் அழியும் தன்னால் வந்த நிலையில்லா மதி தன்னில் நிறத்தைக் காணும் இது காணும் பொருள் காண்கை என்ற நீசன் முலையில்லாத் தாய் கொடுத்த முலைப்பால் உண்ணும் முகமில்லா மொழியெனவே மொழிந்த வார்த்தை தலையில்லாத் தாளூரும் கணக்காய் நின்ற கட்டளை நாம் கண்டின்று காட்டினோமே
காண்கின்றவன் இலை காட்சியும் கண்டதும் உண்டவை தாம் ஏண்கொண்டன அன்று இவற்றில் குணமு நிலையுமிலை சேண் கொண்ட சந்ததியால் சேர்ந்தும் ஒன்றென நிற்கும் என்ற கோண்கொண்ட கோளுரை வைபாடிகன் குறை கூறுவமே
கும்பிடுவார் ஆரென்று தேடுகின்றார் குணங்களையும் தங்களுக்குக் கூறுகின்றார் தம் படியைத் தமர்க்குரைத்துப் படிவிக்கின்றார் தமக்கினிமேல் வீடென்று சாதிக்கின்றார் தம் புடவை உணல் குறித்து நெடிதெண்கின்றார் சந்ததிக்குத் தவம் பலிக்கத் தாம் போகின்றார் செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச் சேவகப் பற்றுடனே நாம் செகுத்திட்டோமே
வேதங்கள் மெளலி விளங்க வியாசன் விரித்த நன்நூல் பாதங்களான பதினாறில் ஈசன் படி மறைத்துப் பேதங்கள் இல்லையென்று ஓர் பிரமப்பிச்சியம்புகின்ற போதங்கழிந்தவனைப் புத்தர் மாட்டுடன் பூட்டுவமே
பிரிவில்லா இருள் ஒன்று பிணக்கொன்றில்லாப் பெரு வெயிலை மறைத்துலகம் காட்டுமென்ன அறிவில்லா அறிவொன்றை அவித்தை மூடி அகம்புறமென்றிவை அனைத்தும் அமைக்கும் என்பார் செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்து கெட்டார் சீவனையும் ஈசனையும் சிதைக்கப் பார்த்தார் நெறியில்லா நேர்வழியும் தானே யானான் நெடுமாலை நாம் அடைந்து நிலை பெற்றோமே
சோதனை விட்டொருத்தன் சொல மெய்யெனச் சோகதரைச் சேதனை அற்றவர் என்று சிதைத்த பின் சீவர்கட்கோர் வேதனை செய்கை வெறுமறமென்று விளம்பிவைத்தே மா தவம் என்று மயிர் பறிப்பார் மயல் மாற்றுவமே
சொன்னார் தாம் சொன்னதெலாம் துறவோம் என்றும் சொன்னதுவே சொன்னதலதாகும் என்றும் தின்னாதும் தின்னுமதும் ஏகம் என்றும் சிறியனுமாம் பெரியனுமாம் சீவன் என்றும் மன்னாதுமன்னுமதும் ஒன்றே என்றும் வையம் எலாம் விழுகின்றதென்றும் என்றும் தென்னாடும் வடநாடும் சிரிக்கப் பேசும் சினநெறியார் சினம் எல்லாம் சிதைத்திட்டோமே
ஏகாந்திகம் ஒன்றும் இல்லை என்று ஆசையைத் தாம் உடுப்பார் சோகாந்தமாகத் துறப்புண்ட பின் தொழில் வைதிகம் என்று ஏகாந்திகள் சொன்ன ஈசன் படியில் விகற்பம் எண்ணும் லோகாந்த வீணர் தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே
ஒன்றெனவும் பலவெனவும் தோற்றுகின்ற உலகெல்லாம் ஒருபிரமம் தானே ஆக்கி நன்றெனவும் தீதெனவும் பிரிந்தவெல்லாம் நன்றன்று தீதன்றே என நவின்றார் கன்றும் அலர் பசுவும் அலராகி நின்றே கன்றாகிப் பசுவாகி நின்ற வண்ணம் இன்றுமறை மாட்டுக்கோர் இடையனான ஏகாந்தி இசைந்திட நாம் இயம்பினோமே
சாயா மறைகளில் சத்தம் தெளிந்திடச் சாற்றுதலால் தூயார் இவரென்று தோன்ற நின்றே பல சூதுகளால் மாயா மதமும் மறுசினவாதும் பவுத்தமும் சேர் வையாகரணர் சொல்லும் மறு மாற்றங்கள் மாற்றுவமே
கலக்கத்தில் கலங்கி வரும் காணிக்கெல்லாம் கண்ணாறு சதிர வழி கட்டுவார் போல் உலகத்தில் மறைசேர்ந்த உரைகள் தம்மால் ஒரு பிழையும் சேராமல் உபகரித்தார் பலகத்தும் பவுத்தர் முதலான பண்டைப் பகற்கள்ளர் பகட்டழிக்கப் பரவும் பொய்யாம் சில கற்றுச் சித்தாந்தம் அறியகில்லாச் சிறுவர் இனி மயங்காமல் சேமித்தோமே
கண்டதலாதன கட்டுதலால் கண்டவிட்டதனால் பண்டுளதான மறைக்குப் பழமையை மாற்றுதலால் கொண்டதும் ஈசனைக் கொள்ளாவகை என்று கூறுதலால் கண்ட கராய் நின்ற காணாதர் வாதம் கழற்றுவமே
ஆகமத்தை அனுமானம் என்கையாலும் அழியாத மறை அழிக்க நினைத்தலாலும் போகமற்றொர் உபலம் போல் கிடக்கை தானே புண்ணியர்க்கு வீடென்று புணர்த்தலாலும் மாகம் ஒத்த மணிவண்ணன் படியை மாற்றி மற்றவனுக்கொரு படியை வகுத்தலாலும் காகம் ஒத்த காணாதன் கண்ணை வாங்கிக் காக்கைக்காரென்றலற்றக் காட்டினோமே
கோதம நூல்களைக் குற்றமிலா வகை கூட்டலுமாம் கோது கழித்தொரு கூற்றில் குணங்களைக் கொள்ளவுமாம் யாதும் இகந்து ஒரு நீதியை யாமே வகுக்கவுமாம் வேதியர் நன்னய வித்தரம் என்பது மெய்யுளதே
நான்மறைக்குத் துணையாக நல்லோர் எண்ணும் நாலிரண்டில் ஒன்றான நயநூல் தன்னில் கூன் மறைத்தல் கோதுலது கழித்தல் மற்றோர் கோணாத கோதில் வழி வகுத்தல் அன்றி ஊன்மறைத்த உயிரொளி போல் ஒத்த தொவ்வாது உயிரில்லாக் காணாதம் உரைத்த எல்லாம் வான்மறைக்க மடி கோலும் வண்ணம் என்றோம் மற்றிதற்கார் மறுமாற்றம் பேசுவாரே
ஈசனுமற்றணங்கும் இலதென்று எழில் நான்மறையில் பேசிய நல்வினையால் பெரும் பாழுக்கு நீரிறைக்கும் நீசரை நீதிகளால் நிகமாந்தத்தின் நூல் வழியே மாசில் மனம் கொடுத்தும் மறுமாற்றங்கள் மாற்றுவமே
கனை கடல் போல் ஒரு நீராம் சூத்திரத்தைக் கவந்தனையும் இராகுவையும் போலக் கண்டு நினைவுடனே நிலைத் தருமம் இகந்து நிற்கும் நீசர் நிலை நிலை நாட வண்ணம் எண்ணி வினை பரவு சைமினியார் வேத நூலை வேதாந்த நூலுடனே விரகால் கோத்த முனையுடைய முழுமதி நம் முனிவர் சொன்ன மொழிவழியே வழி என்று முயன்றிட்டோமே
முக்குணமாய் நின்ற மூலப் பிரகிருதிக்கழியா அக்குணமற்ற அருத்துணை மற்றதற்கீசனிலை இக்கணனைப்படி ஐயைந்தும் எண்ணில் முன்முத்தி என்னும் பக்கணவீணர் பழம் பகட்டைப் பழுதாக்குவமே
ஈசன் இலன் என்பதனால் என்றும் சீவர் எங்குமுளர் இலர் உணர்வை என்றவத்தால் பாசமெனும் பிரகிருதி தன்னால் என்றும் பலமும் இலை வீடுமிலை என்னும் பண்பால் காசினி நீர் முதலான காரியங்கள் கச்சபத்தின் கால்கை போல் என்னும் கத்தால் நாசம் அலதிலை காணும் ஞாலத்துள்ளீர் நாம் இசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே
தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை உந்திப் பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்த்திடினும் நாவில் பிரிவின்றி நாமங்கை வாழினும் நான்மறையில் பாவித்ததன்றி உரைப்பது பாறும் பதர்த்திரளே
காரணனா உலகளிக்கும் கண்ணன் தேசைக் கண்ணாடி நிழல் போலக் காண்கையாலும் தாரணையின் முடிவான சமாதி தன்னைத் தனக்கேற்றும் விளக்கென்று தனிக் கையாலும் காரணமாம் அது தனக்குப் பயனாம் சீவன் கைவலிய நிலையென்று கணிக்கையாலும் கோரணியின் கோலமெனக் குறிக்கலாகும் கோகனகத்தயன் கூறும் சமயக் கூறே
சாது சனங்கள் எலாம் சச்சை என்னும் சலம் புணர்த்தார் கோதம சாபம் ஒன்றால் கொடுங்கோலங்கள் கொண்டுலகில் பூத பதிக்கடியார் என நின்று அவன் பொய் உரையால் வேதம் அகற்றி நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே
மாதவனே பரன் என்று வையம் காண மழுவேந்தி மயல்தீர்க்க வல்ல தேவன் கைதவம் ஒன்றுகந்தவரைக் கடிய சாபம் கதுவியதால் அதன் பலத்தைக் கருதிப் பண்டை வேத நெறி அணுகாது விலங்கு தாவி வேறாக விரித்துரைத்த விகற்பம் எல்லாம் ஓதுவது குத்திரத்துக்கென்றுரைத்தான் ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே
கந்தமலர் மகள் மின்னும் காரார் மேனிக் கருணைமுகில் கண்ட கண்கள் மயிலாய் ஆலும் அந்தமில் பேரின்பத்தில் அடியரோடே அடிமை என்னும் பேரமுதம் அருந்திவாழத் தந்தமதி இழந்தரனார் சமயம்புக்குத் தழல் வழிபோய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர் சந்தநெறி நேரறிவார் சரணம் சேர்ந்து சங்கேதத்தவமுனிவீர் தவிர்மினீரே
யாதுமிலாத அன்றும் யவர்க்கும் நன்றியெண்ணிய நம் மாதவனார் வதனத்தமுதுண்ணும் வலம்புரி போல் வாதுகளால் அழியா மறை மெளலியின் வான் பொருளே ஓதிய பஞ்சராத்திரம் உகவாரை ஒழுக்குவமே
பூவலரும் திருவுந்திப் புனிதன் வையம் பொன்னடியால் அளந்திருவர் போற்ற நின்ற நாவலரும் கலைகளெலாம் தன்னை நாட நாடாத நல்நிதியா நணுகு நாதன் கோவலனாய் நிரையளித்த நிறை போல் வேதம் கோவாகக் கோமானாய் அதன் பால் சேர்த்துக் காவலிது நல் உயிருக்கென்று காட்டும் கார்த்தயுகக் கதி கண்டோம் கரை கண்டோமே
நமக்கார் துணையென நாம் என்றருள் தருநாரணனார் உமக்காறிவை என்றடியிணை காட்ட உணர்ந்தடையும் எமக்கோர் பரம் இனியில்லாது இருவினை மாற்றுதலில் தமக்கே பரமென்று தாமுயலும் தரம் சாற்றுவமே
பலத்தில் ஒரு துவக்கற்ற பதவி காட்டிப் பல்லுயிரும் தடுமாறப் பண்ணுகின்ற கலித்திரளின் கடும் கழுதைக் கத்து மாற்றிக் கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம் வலத்திலகு மறுவொன்றால் மறுவொன்றில்லா மாமணியாய் மலர்மாதர் ஒளியாம் அந்நல் நலத்தில் ஒரு நிகரில்லா நாதன் பாதம் நல்வழியாம் அல்வழக்கார் நடத்துவாரே
எல்லார்க்கும் எளிதான ஏற்றத்தாலும் இனி உரைக்கை மிகையான இரக்கத்தாலும் சொல் ஆர்க்கும் அளவாலும் அமைதலாலும் துணிவரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும் கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும் கண்ணன் உரை முடிசூடி முடித்தலாலும் நல்லார்க்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம் நாரணற்கே அடைக்கலமாய் நணுகுவீரே
பண்டை மறைக்குப் பகையென நின்ற பரமதங்கள் கொண்டவர் கொள்ளும் பயன் ஒன்றிலதெனும் கூர்மதியால் வண் துவரைக்கரசான நம் மாயனை வானுலகில் கண்டு களிப்பதெனும் காதல் ஒன்றைக் கருதுவமே
கலந் திகழும் போகங்கள் கண்டு வெள்கிக் காரியமும் காரணமும் கடந்து நாம் போய்க் குலந்திகழும் குருக்கள் அடிசூடி மன்னும் குற்றேவல் அடியவர் தம் குழாங்கள் கூடி வலம் திகழும் திருமகளும் மற்றிடத்தே மன்னிய மண்மகளாரும் நீளையாரும் நலந் திகழ வீற்றிருந்த நாதன் பாதம் நமக்கிதுவே முடியென்ன நண்ணினோமே
மானங்கள் இன்றி வகுத்துரைக்கின்ற மதங்கள் எலாம் தானங்கள் அன்று தரும நெறிக்கென்று சாற்றிய பின் வானம் கவர்ந்து மறைமுடி சூடிய மா தவத்தோர் ஞானங்கள் ஒன்ற நடக்கின்ற நல்வழி நாடுவமே
தன் அடிக்கீழ் உலகேழையும் வைத்த தனித்திருமால் பொன்னடிக்கேற்கின்ற புண்ணியர் கேண்மின் புகலறிவார் முன்னடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப் பின்னடி பார்த்து நடந்து பெரும் பதம் ஏறுவமே
வையமெலாம் இருள் நீக்கு மணி விளக்காய் மன்னிய நான்மறை மெளலி மதியே கொண்டு மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும் விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர் ஐயமற அறுசமயக் குறும்பறுத்தோம் அணியரங்கர் அடியவர்க்கே அடிமை செய்தோம் மைய கடல் வட்டத்துள் மற்றும் தோற்றும் வாதியர் தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே
கோதவம் ஒன்றில்லாத தகவே கொண்ட கொண்டலென வந்துலகில் ஐவர்க்கன்றோர் தூதுவனாய் ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்தோடத் தனியோடித் துயரம் தீர்த்த மாதவனார் வடகொங்கில் வானியாற்றின் வண்ணிகை நன்னடம் கண்டு மகிழ்ந்து வாழும் போது இவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாள் புணராத பரம தப்போர் பூரித்தோமே
திகிரி மழுவுயர் குந்தம் தண்டங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள்வேல் அமர்ந்ததும் தெழி பணில சிலை கண்ணி சீரங்க செவ்வடி செழியகதை முசலம் திசூலம் திகழ்ந்ததும் அகில உலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்க ஆசின்றி நின்றதும் அணியும் அருகணையும் அரவாம் என்ன நின்று அடி அடையும் அடியரை அன்பினால் அஞ்சல் என்பதும் மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும் வளரும் அணி மணிமின்ன வானந்தி கொண்டிட மறைமுறை முறைவணங்க மாறின்றி வென்றதும் சிகி இரவி மதியம் உமிழ் தேசுந்த எண் திசைத் திணிமருள் செகவுகந்து சேமங்கள் செய்ததும் திகழ் அரவணை அரங்கர் தேசென்ன மன்னிய திரிசுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே