மூலம் கிளையென ஒன்றிரண்டான மொழி இரண்டும் மேலொன்றிலையென நின்ற அவ்வித்தகன் தன்னுரையும் காலம் கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே ஞாலம் புகழும் நம் தேசிகர் தாம் நமை வைத்தனரே
அமிருதாசுவாதினி
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
"யான், எனது என்பது ஒன்று இல்லை; என் செய்வது அவனை அல்லால்" — நான், எனது என்பன இல்லை என்று உரிமையை முற்றிலும் விடும் நூல். தன்னை அவனுடைய அடியார்க்கு ஆட்படுத்துவதே வழி என்று சொல்கிறார். சரணாகதியின் நுட்பமான வடிவம் — இறைவனுக்கு மட்டுமல்ல, அவனுடையவர்களுக்கும் அடிமையாதல் — இங்கே தெளிவாக முன்வைக்கப்படுகிறது.
காரணமும் காவலனும் ஆகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான நாரணனுக்கடியேன் நான் அடிமை பூண்ட நல்லடியார்க்கல்லால் மற்றொருவர்க்கல்லேன் ஆரணங்கள் கொண்டகமும் புறமும் கண்டால் அறிவாகி அறிவதுமாய் அறு நான் கன்றிச் சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் சிலை விசயன் தேரனையச் சிறு வேதத்தே
யான் எனதென்பதொன்றில்லை என் செய்வதவனையல்லால் ஆனதறிந்திடும் தன் அடியார்க்கெனை ஆட்படுத்தித் தானெனை நல்கி நடத்துகின்றான் தன் அருள் வழியே நான் உனை வீடு செய்வேன் என்ற நம் திருநாரணனே
யாதாம் இவை அனைத்தும் படைத்தேந்தும் இறைவனுமாய்க் கோதாம் குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய் மாதா பிதா என மன்னுறவாய்க் கதி யென்ன நின்றான் போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே
இருவிலங்கு கழித்திடராம் உடலம் தன்னில் இலங்கு நடு நாடியினால் எம்மை வாங்கி ஒருவிலங்கு நெறியல்லா வழியால் மன்னும் உயர் வானில் ஏற்றி உயிர் நிலையும் தந்து பெருவிலங்காம் அருள் தன்னால் தன் அடிக்கீழ்ப் பிரியாத அமரருடன் பிணைத்துத் தன்னார் உருவில் அங்கு மிசைவிக்கும் உம்பர் போகம் உகந்து தரும் திருமாலை உகந்தோம் நாமே
உறவை இசைந்திறை இல்லா ஒருவர்க்கென்றும் ஒண்சுடராய் ஓர் எழுத்தில் ஓங்கி நின்றோம் துறவறமும் தூமதியும் துயரம் தீர்வும் தூயவர்கட்கானமையும் இரண்டில் உற்றோம் அறமுயலும் அனைத்துறவாய் அனைத்தும் ஏந்தும் அம்புயத்தாள் கணவனை நாம் அணுகப் பெற்றோம் பிறவி அறுத்தடிசூடி அடிமை எல்லாம் பிரியாத அமரருடன் பெற்றோம் நாமே
கருமமென ஞானமென அதனால் கண்ட உயிர்கவரும் காதலெனக் கானில் ஓங்கும் அருமறையால் தருநிலையில் இன்னாள் எல்லாம் அடியேனை அலையாத வண்ணம் எண்ணித் தருமமுடையார் உரைக்க யான் அறிந்து தனக்கென்னா அடிமைக்காம் வாழ்ச்சி வேண்டித் திருமகளோடொரு காலும் பிரியா நாதன் திண் கழலே சேதுவெனச் சேர்கின்றேனே
வினைவிடுத்து வியன் குணத்தால் எம்மையாக்கி வெருவுரை கேட்டவை கேட்க விளம்பி நாளும் தனை அனைத்தும் அடைந்திடத் தான் அடைந்து நின்ற தன் திருமாதுடன் இறையும் தனியாநாதன் நினைவழிக்கும் வினைவழிக்கு விலக்காய் நிற்கும் நிகரில்லா நெடுங்குணங்கள் நிலை பெறத் தன் கனை கழல் கீழ் அடைக்கலமாக் காட்சி தந்து காரணனாந் தன் காவல் கவர்கின்றானே
என்னது யான் செய்கின்றேன் என்னாதாருக்கு இன்னடிமை தந்தளிப்பான் இமையோர் வாழும் பொன்னுலகில் திருவுடனே அமர்ந்த நாதன் புனலாரும் பொழிலரங்கன் திகழ மன்னித் தன்னகலம் அகலாத தகவால் ஓங்கும் தகவுடனே தன் கருமம் தானே எண்ணி அன்னையென அடைக்கலம் கொண்டஞ்சல் தந்து என் அழலாற நிழலார அளிக்கின்றானே
ஒண்டொடியாள் திருமகளும் தானுமாகி ஒரு நினைவால் ஈன்ற உயிரெல்லாம் உய்ய வண் துவரை நகர் வாழ வாசுதேவற்காய் மன்னவற்குத் தேர்ப் பாகனாகி நின்ற தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன தனித்தருமம் தான் எமக்காய்த் தன்னையென்றும் கண்டு களித்தடி சூட விலக்காய் நின்ற கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே
துய்ய மனத்தர் துறை அணுகாத துணையிலியேன் ஐயம் அறுத்துனதாணை கடத்தல் அகற்றினை நீ கையமர் சக்கரக் காவல் காக்கும் திருவருளால் வையமளந்த அடிக்கீழ் அடைக்கலம் வைத்தருளே
அறியாத இடைச்சியரும் அறியும் வண்ணம் அம்புயத் தாளுடன் அந்நாள் அவதரித்த குறையாதும் இல்லாத கோவிந்தா நின் குரை கழல் கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய் வெறியாரும் மலர்மகளும் நீயும் விண்ணில் விண்ணவர்கள் அடி சூட இருக்கும் மேன்மை குறையாத வினையகற்றி அடிமை கொள்ளக் குறுக ஒரு நன்னாள் நீ குறித்திடாயே
தத்துவமும் சாதனமும் பயனும் காட்டும் தாரமுதல் இருநான்கும் தன் கருத்தால் முத்திவழி நாமுயலும் வகையே காண முகுந்தன் இசைத்தருள் செய்த ஐந்நாலைந்தும் பத்திதனில் படிவில்லார் பரம் சுமத்தப் பார்த்தன் தேர் முன்னே தாம் தாழ நின்ற உத்தமனார் உத்தம நல்லுரை நாலெட்டும் உணர்ந்தவர் தாமுகந்தெம்மை உணர்வித்தாரே
பரக்கும் புகழ் வரும் பைம்பொருள் வாய்த்திடும் பத்தர்களாய் இரக்கின்றவர்க்கிவை ஈந்தால் அறம் உளதென்றியம்பார் கரக்கும் கருத்துடை தேசிகர் கன்றென நம்மை எண்ணிச் சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல் அமுதே
சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஒன்று சொல்லுகின்றோம் நாகம் தனக்கும் இராக்கதற்கும் நமக்கும் சரணாம் ஆகண்டலன் மகனாகிய ஆவலிப்பேறிய ஓர் காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே
ஒருக்காலே சரணாக அடைகின்றாற்கும் உனக்கடிமை ஆகின்றேன் என்கின்றாற்கும் அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்றருள் கொடுப்பன் இதுதான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசை வினாலும் நெருக்காத நீள் விரதம் எனக்கொன்றென்னும் நெறி உரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே
பொன்னை இகழ்ந்து விருகங்கள் புல்லிய புல் உகந்தால் மன்னர் எடுப்பதப்பொன் அலதே மன்னுலகனைத்தும் தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன் பொன்னடி நாம் அடைந்தோம் புறமார் என்கொல் செய்திடினே
வேதத்திரளின் விதி உணர்ந்தோர்கள் விரித்துரைத்த காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும் சாதிக்கவல்ல சரணாகதி தனி நின்ற நிலை ஓதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே
மூவுலகும் தன் பிழையைத் தானே சாற்ற முனிவர்களும் தேவர்களுமுனிந்த அந்நாள் தாவரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த தனிக் காகம் தானிரந்த உயிர் வழங்கிக் காவல் இனியெமக்கெங்கும் கடன் என்றெண்ணிக் காண நிலை இலச்சினை அன்றிட்ட வள்ளல் ஏவல் பயன் இரக்கம் இதற்காறென்றோதும் எழில் உடையார் இணை அடிக்கீழ் இருப்போம் நாமே
திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு வருத்தம் கழிந்த வழி அருளென்ற நம் மண்மகளார் கருத்தொன்ற ஆதிவராகம் உரைத்த கதி அறிவார் பொருத்தம் தெளிந்துரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே
இடம்பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்ப இடர்பிறப்பென்றிவையில்லா என்னை அன்பால் அடம் பற்றாம் அவனென்று நினைந்தான் யாவன் அவன் ஆவி சரியும்போதறிவு மாறி உடம்பில் தாருபலம்போல் கிடக்க நானே உய்யும் வகை நினைந்துயர்ந்த கதியால் என்றன் இடம் பெற்றென்னுடன் வாழ எடுப்பன் என்ற எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே
இரண்டுரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின் திரண்ட பொருள்கள் தெளிந்தடி சூடினம் திண் அருளால் சுருண்ட நம் ஞானச் சுடரொளி சுற்றும் பரப்பதன் முன் புரண்டது நம் வினை போமிடம் பார்த்தினிப் போமளவே
மலையும் குலையும் என்றெண்ணியும் வன்பெரும் புண் திரங்கித் தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர் அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே நிலை என்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே
கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமைதனை எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயும் புதலால் திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின்மதியோர் பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே
பொங்கு புனல் ஆறுகளில் புவனம் எல்லாம் பொற்கழலால் அளந்தவன் தன் தாளால் வந்த கங்கையெனும் நதி போலக் கடல்கள் ஏழில் கமலை பிறந்தவனுகந்த கடலே போலச் சங்குகளில் அவன் ஏந்தும் சங்கே போலத் தாரில் அவன் தண் துளவத் தாரே போல எங்கள் குல பதிகள் இவைமேலாம் என்றே எண்ணிய நல்வார்த்தைகள் நாம் இசைக்கின்றோமே
சீர்க்கடலின் திரை என்னத் தகவால் மிக்க தேசிகராய்த் திண் இருளாம் கடலை நீக்கிப் பாற்கடலோன் திருவணையாய் நின்று பாரம் காணாத பவக்கடலைக் கடத்துகின்றான் ஈர்க்குமரக்கலமென்ன இறைவர் இன்பம் எழுந்தழியும் குமிழியென இகந்தொழிந்தோம் ஆர்க்கினி நாம் என் கடவோம் நமக்கும் ஆரென் கடவாரென்று அடைந்தவர்கட்கறிவித்தோமே
காசினியின் மணி அனைத்தும் காயா வண்ணன் கடைந்தெடுத்த கவுத்துவத்தின் சீர்மைக்கொவ்வா காசி முதலாகிய நல் நகரி எல்லாம் கார்மேனி அருளாளர் கச்சிக் கொவ்வா மாசின் மனந்தெளி முனிவர் வகுத்ததெல்லாம் மாலுகந்த ஆசிரியர் வார்த்தைக் கொவ்வா வாசி அறிந்திவை உரைத்தோம் வையத்துள்ளீர் வைப்பாக இவை கொண்டு மகிழ்மினீரே
அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை அறிவுடனே என்றும் காத்து முந்தைவினை நிரைவழியில் ஒழுகாதெம்மை முன் நிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப்படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத் தந்தை எனநின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே
தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தன்னோர் ஒளி அணைக்கும் குணத்தாலும் தன்னைக் கண்டு தான் தனக்கென்றறியாத தன் குணத்தைத் தன் குணத்தால் தான் இறையில் தானே கூட்டி ஊன் மருத்துப் புலன் மனமானாங்காரங்கள் ஒரு மூலப் பிரகிருதி அன்றி நின்ற நான் தனக்குத் தான் தனக்கென்றிசைவுதந்த நாரணனை நான் மறையால் நான் கண்டேனே
கழியாத கருவினையில் படிந்த நம்மைக் காலமிதுவென்றொருகால் காவல் செய்து பழியாத நல்வினையில் படிந்தார் தாளில் பணிவித்துப் பாசங்கள் அடைய நீக்கிச் சுழியாத செவ்வழியில் துணைவரோடே தொலையாத பேரின்பம் தரமேல் ஏற்றி அழியாத அருளாழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவியெலாம் அளப்பாராரே
நின் அருளாம் கதியன்றி மற்றொன்றில்லேன் நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன் உன்னருளுக்கினிதான நிலை உகந்தேன் உன் சரணே சரணென்னும் துணிவு பூண்டேன் மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர் தம் வாழ்ச்சிதர வரித்தேன் உன்னை இன்னருளால் இனி எனக்கோர் பரமேற்றாமல் என் திருமால் அடைக்கலம் கொள் என்னை நீயே
பரவுமறைகள் எலாம் பதம் சேர்ந்தொன்ற நின்ற பிரான் இரவன்றிரவியின் காலத் தழைத்த எழில் படையோன் அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடியிரண்டும் தர என் தமக்கருளால் தளரா மனம் தந்தனனே
அலர்ந்த அம்புயத்திருந்து தேனருந்தி இன்னகல் அல்குலார் அசைந்தடைந்த நடை கொளாததுனமெனோ நலம் தவிர்ந்ததால் அதென்கொல் நாவின் வீறிழந்ததால் நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறிழந்ததென் சலம் தவிர்ந்து வாதுசெய்து சாடிமூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக்கனைத்துரைத்த எதிராசர் தம் வலம் தரும் கை நாயனார் வளைக்கிசைந்த கீர்த்தியால் வாரி பாலதாம் அதென்று மாசில்வாழி வாழியே
சடையன் திறலவர்கள் பெருஞானக் கடலதனை இடை அமிழாது கடக்கினும் ஈதளவென்றறியார் விடையுடன் ஏழன்றடர்த்தவன் மெய்யருள் பெற்றநல்லோர் அடைய அறிந்துரைக்க அவ்வடியோமும் அறிந்தனமே
பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில் காவலனும் கணவனுமாய்க் கலந்து நின்ற காரணனைக் கருத்துற நாம் கண்ட பின்பு கோவலனும் கோமானுமான அந்நாள் குரவை பிணை கோவியர்தம் குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பெடை போல் சேர்ந்து தீவினையோர் தனிமையெலாம் தீர்ந்தோம் நாமே
ஆதி மறை என வோங்கும் அரங்கத்துள்ளே அருள் ஆரும் கடலைக் கண்டவன் நம் பாணன் ஓதியதோரிரு நான்கும் இரண்டுமான ஒரு பத்தும் பற்றாக உணர்ந்துரைத்தோம் நீதி அறியாத நிலை அறிவார்க்கெல்லாம் நிலை இதுவேயென்று நிலை நாடி நின்றோம் வேதியர் தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம் விதையாகும் இதுவென்று விளம்பினோமே
காண்பனவும் உரைப்பனவுமற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல் பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருள் என்று பரவுகின்றோம் வேண் பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த ஆரியென் என்றியம்ப நின்றோம் நாண் பெரியோம் அல்லோம் நாம் நன்றும் தீதும் நமக்குரைப்பார் உளரென்று நாடுவோமே