Skip to the text
அதிகாரசங்கிரகம்

அதிகாரசங்கிரகம்

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

"என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு, யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கி" — ஆசிரியரையும் அவர் வழிவந்த ஆசிரியர் பரம்பரையையும் வணங்கித் தொடங்கும் நூல். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் முக்கிய உண்மைகளைத் தொகுத்துச் சொல்வதே இதன் நோக்கம். கற்றலுக்கு முன் வணக்கம் என்னும் முறை இங்கே வடிவமாகவே அமைந்திருக்கிறது.

1

பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌ தண்‌ பொருநல்வரும்‌ குருகேசன்‌ விட்டுசித்தன்‌ துய்ய குலசேகரன்‌ நம்‌ பாணநாதன்‌ தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி வையமெல்லாம்‌ மறைவிளங்க வாள்வேல்‌ ஏந்தும்‌ மங்கையர்கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌ செய்ய தமிழ்‌ மாலைகள்‌ நாம்‌ தெளியவோதித்‌ தெளியாத மறை நிலங்கள்‌ தெளிகின்றோமே

2

இன்பத்தில்‌ இறைஞ்சுதலில்‌ இசையும்‌ பேற்றில்‌ இகழாத பல்லுறவில்‌ இராகமாற்றில்‌ தன்பற்றில்‌ வினை விலக்கில்‌ தகவோக்கத்தில்‌ தத்துவத்தை உணர்த்துதலில்‌ தன்மையாக்கில்‌ அன்பர்க்கே அவதரிக்கும்‌ ஆயன்‌ நிற்க அருமறைகள்‌ தமிழ்‌ செய்தான்‌ தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக்‌ காட்டும்‌ தொல்வழியே நல்வழிகள்‌ துணிவார்கட்கே

3

என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு யான்‌ அடைவே அவர்குருக்கள்‌ நிரை வணங்கிப்‌ பின்னருளால்‌ பெரும்பூதூர்‌ வந்த வள்ளல்‌ பெரியநம்பி ஆளவந்தார்‌ மணக்கால்‌ நம்பி நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்‌ நாதமுனி சடகோபன்‌ சேனை நாதன்‌ இன்னமுதத்‌ திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே

4

ஆரணநூல்‌ வழிச்‌ செவ்வை அழித்திடும்‌ ஐதுகர்க்கு ஓர்‌ வாரணமாய்‌ அவர்‌ வாதக்‌ கதலிகள்‌ மாய்த்த பிரான்‌ ஏரணி கீர்த்தி இராமானுசமுனி இன்னுரைசேர்‌ சீரணி சிந்தையினோம்‌ சிந்தியோம்‌ இனித்‌ தீவினையே

5

நீள வந்தின்று விதிவகையால்‌ நினைவொன்றிய நாம்‌ மீள வந்தின்னும்‌ வினையுடம்‌ பொன்றி விழுந்துழலாது ஆளவந்தார்‌ என வென்று அருள்‌ தந்து விளங்கிய சீர்‌ ஆளவந்தார்‌ அடியோம்‌ படியோமினி அல்வழக்கே

6

காளம்‌ வலம்புரியன்ன நற்காதல்‌ அடியவர்க்குத்‌ தாளம்‌ வழங்கித்‌ தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்‌ மூளும்‌ தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும்‌ தொழுதெழுவோம்‌ நமக்கார்‌ நிகர்‌ நானிலத்தே

7

ஆளும்‌ அடைக்கலம்‌ என்றெம்மை அம்புயத்தாள்‌ கணவன்‌ தாளிணை சேர்ந்து எமக்கும்‌ அவை தந்த தகவுடையார்‌ மூளும்‌ இருட்கள்‌ விள்ள முயன்றோதிய மூன்றின்‌ உள்ளம்‌ நாளும்‌ உகக்கவிங்கே நமக்கோர்‌ விதி வாய்க்கின்றதே

8

திருவுடன்‌ வந்த செழுமணிபோல்‌ திருமால்‌ இதயம்‌ மருவிடம்‌ என்ன மலரடி சூடும்‌ வகைபெறுநாம்‌ கருவுடன்‌ வந்த கடு வினையாற்றில்‌ விழுந்தொழுகாது அருவுடன்‌ ஐந்தறிவார்‌ அருள்‌ செய்ய அமைந்தனரே

9

அமையாவிவை எனும்‌ ஆசையினால்‌ அறு மூன்றுலகில்‌ சுமையான கல்விகள்‌ சூழவந்தாலும்‌ தொகை இவை என்று இமையா இமையவர்‌ ஏத்திய எட்டிரண்டெண்ணிய நம்‌ சமயாசிரியர்‌ சதிர்க்கும்‌ தனி நிலை தந்தனரே

10

நிலை தந்த தாரகனாய்‌ நியமிக்கும்‌ இறைவனுமாய்‌ இலதொன்றெனாவகை எல்லாம்‌ தனதெனும்‌ எந்தையுமாய்த்‌ துலையொன்றிலையென நின்ற துழாய்‌ முடியான்‌ உடம்பாய்‌ விலையின்றி நாம்‌ அடியோம்‌ என்னும்‌ வேதியர்‌ மெய்ப்பொருளே

11

பொருளொன்றென நின்ற பூமகள்‌ நாதன்‌ அவன்‌ அடி சேர்ந்து அருள்‌ ஒன்றும்‌ அன்பன்‌ அவன்கொள்‌ உபாயம்‌ அமைந்தபயன்‌ மருளொன்றிய வினை வல்‌ விலங்கென்று இவையைந்தறிவார்‌ இருள்‌ ஒன்றிலாவகை எம்மனம்‌ தேறவியம்பினரே

12

தேற வியம்பினர்‌ சித்தும்‌ அசித்தும்‌ இறையும்‌ என வேறுபடும்‌ வியன்‌ தத்துவ மூன்றும்‌ வினையுடம்பில்‌ கூறுபடும்‌ கொடு மோகமும்‌ தான்‌ இறையாம்‌ குறிப்பும்‌ மாற நினைந்தருளால்‌ மறை நூல்‌ தந்த வாதியரே

13

வாதியர்‌ மன்னும்‌ தருக்கச்‌ செருக்கின்‌ மறை குலையச்‌ சாது சனங்கள்‌ அடங்க நடுங்கத்‌ தனித்தனியே ஆதியெனாவகை ஆரண தேசிகர்‌ சாற்றினர்‌ நம்‌ போதமரும்‌ திருமாதுடன்‌ நின்ற புராணனையே

14

நின்ற புராணன்‌ அடியிணை ஏந்தும்‌ நெடும்‌ பயனும்‌ பொன்றுதலே நிலையென்றிடப்‌ பொங்கும்‌ பவக்கடலும்‌ நன்றிது தீயதிதென்று நவின்றவர்‌ நல்‌ அருளால்‌ வென்று புலன்களை வீடினை வேண்டும்‌ பெரும்‌ பயனே

15

வேண்டும்‌ பெரும்‌ பயன்‌ வீடென்றறிந்து விதி வகையால்‌ நீண்டும்‌ குறுகியும்‌ நிற்கும்‌ நிலைகளுக்கேற்கும்‌ அன்பர்‌ மூண்டொன்றில்‌ மூல வினை மாற்றுதலில்‌ முகுந்தன்‌ அடி பூண்டன்றி மற்றோர்‌ புகலொன்றிலை என நின்றனரே

16

நின்ற நிலைக்குற நிற்கும்‌ கருமமும்‌ நேர்‌ மதியால்‌ நன்றென நாடிய ஞானமும்‌ நல்கும்‌ உட்கண்‌ உடையார்‌ ஒன்றிய பத்தியும்‌ ஒன்றுமிலா விரைவார்க்கருளால்‌ அன்று பயன்‌ தரும்‌ ஆறும்‌ அறிந்தவர்‌ அந்தணரே

17

அந்தணர்‌ அந்தியர்‌ எல்லையில்‌ நின்ற அனைத்துலகும்‌ நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்‌ வந்தடையும்‌ வகை வன்‌ தகவேந்தி வருந்திய நம்‌ அந்தமில்‌ ஆதியை அன்பர்‌ அறிந்தறிவித்தனரே

18

அறிவித்தனர்‌ அன்பர்‌ ஐயம்‌ பறையும்‌ உபாயமில்லாத்‌ துறவித்‌ துனியில்‌ துணையாம்‌ பரனை வரிக்கும்‌ வகை உறவித்தனையின்றி ஒத்தார்‌ என நின்ற உம்பரை நாம்‌ பிறவித்‌ துயர்‌ செகுப்பீரென்று இரக்கும்‌ பிழையறவே

19

அறவே பரமென்று அடைக்கலம்‌ வைத்தனர்‌ அன்று நம்மைப்‌ பெறவே கருதிப்‌ பெரும்‌ தகவுற்றபிரான்‌ அடிக்கீழ்‌ உறவே இவனுயிர்‌ காக்கின்ற ஓருயிர்‌ உண்மையை நீ மறவேல்‌ என நம்மறை முடி சூடிய மன்னவரே

20

மன்னவர்‌ விண்ணவர்‌ வானோர்‌ இறையொன்றும்‌ வான்‌ கருத்தோர்‌ அன்னவர்‌ வேள்வி அனைத்தும்‌ முடித்தனர்‌ அன்புடையார்க்கு என்ன வரம்‌ தரவென்ற நம்‌ அத்திகிரித்‌ திருமால்‌ முன்னம்‌ வருந்தி அடைக்கலம்‌ கொண்ட நம்‌ முக்கியரே

21

முக்கிய மந்திரம்‌ காட்டிய மூன்றில்‌ நிலையுடையார்‌ தக்கவையன்றித்‌ தகாதவையொன்றும்‌ தமக்கிசையார்‌ இக்கருமங்கள்‌ எமக்குளவென்னும்‌ இலக்கணத்தால்‌ மிக்கவுணர்த்தியர்‌ மேதினி மேவிய விண்ணவரே

22

விண்ணவர்‌ வேண்டி விலக்கின்றி மேவும்‌ அடிமையெலாம்‌ மண்‌ உலகத்தில்‌ மகிழ்ந்தடைகின்றனர்‌ வண்‌ துவரைக்‌ கண்ணன்‌ அடைக்கலம்‌ கொள்ளக்‌ கடன்கள்‌ கழற்றிய நம்‌ பண்ணமரும்‌ தமிழ்‌ வேதம்‌ அறிந்த பகவர்களே

23

வேதம்‌ அறிந்த பகவர்‌ வியக்க விளங்கிய சீர்‌ நாதன்‌ வகுத்த வகை பெறுநாம்‌ அவன்‌ நல்‌ அடியார்க்கு ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறை நூல்‌ நீதி நிறுத்த நிலை குலையாவகை நின்றனமே

24

நின்றனம்‌ அன்புடை வானோர்‌ நிலையில்‌ நிலமளந்தான்‌ நன்றிது தீயதிதென்று நடத்திய நான்‌ மறையால்‌ இன்று நமக்கிரவாதலின்‌ இம்மதியின்‌ நிலவே அன்றி அடிக்கடி ஆரிருள்‌ தீர்க்க அடியுளதே

25

உளதான வல்‌ வினைக்கு உள்ளம்‌ வெருவி உலகளந்த வளர்‌ தாமரையிணை வன்‌ சரணாக வரித்தவர்‌ தாம்‌ களைதான்‌ எனவெழும்‌ கன்மம்‌ துறப்பர்‌ துறந்திடிலும்‌ இளைதா நிலை செக எங்கள்‌ பிரானருள்‌ தேன்‌ எழுமே

26

தேனார்‌ கமலத்‌ திருமகள்‌ நாதன்‌ திகழ்ந்துறையும்‌ வானாடுகந்தவர்‌ வையத்திருப்பிடம்‌ வன்‌ தருமக்‌- கானார்‌ இமயமும்‌ கங்கையும்‌ காவிரியும்‌ கடலும்‌ நானா நகரமும்‌ நாகமும்‌ கூடிய நன்னிலமே

27

நன்னிலமாம்‌ அது நற்பகலாம்‌ அது நன்‌ நிமித்தம்‌ என்னலுமாம்‌ அது யாதானும்‌ ஆமங்கடியவர்க்கு மின்னிலை மேனி விடும்‌ பயணத்து விலக்கிலதோர்‌ நன்னிலையாம்‌ நடு நாடி வழிக்கு நடைபெறவே

28

நடைபெற அங்கிப்‌ பகல்‌ ஒளிநாள்‌ உத்தராயணம்‌ ஆண்டு இடை வருகாற்றிரவி இரவின்‌ பதி மின்‌ வருணன்‌ குடையுடை வானவர்‌ கோமான்‌ பிரசாபதி என்றிவரால்‌ இடையிடை போகங்கள்‌ எய்தி எழிற்பதம்‌ ஏறுவரே

29

ஏறி எழிற்பதம்‌ எல்லா உயிர்க்கும்‌ இதமுகக்கும்‌ நாறு துழாய்‌ முடி நாதனை நண்ணி அடிமையில்‌ நம்‌ கூறு கவர்ந்த குருக்கள்‌ குழாங்கள்‌ குரை கழற்கீழ்‌ மாறுதல்‌ இன்றி மகிழ்ந்தெழும்‌ போகத்து மன்னுவமே

30

மன்னும்‌ அனைத்துறவாய்‌ மருள்‌ மாற்றருள்‌ ஆழியுமாய்த்‌ தன்‌ நினைவால்‌ அனைத்தும்‌ தரித்தோங்கும்‌ தனி இறையாய்‌ இன்‌ அமுதத்தமுதால்‌ இரங்கும்‌ திருநாரணனே மன்னியவன்‌ சரண்‌ மற்றோர்‌ பற்றின்றி வரிப்பவர்க்கே

31

வரிக்கின்றனன்‌ பரன்‌ யாவரை என்று மறையதனில்‌ விரிக்கின்றதும்‌ குறியொன்றால்‌ வினையரை ஆதலின்‌ நாம்‌ உரைக்கின்ற நன்னெறி ஓரும்‌ படிகளில்‌ ஓர்ந்து உலகம்‌ தரிக்கின்ற தாரகனார்‌ தகவால்‌ தரிக்கின்றனமே

32

தகவால்‌ தரிக்கின்ற தன்‌ அடியார்களைத்‌ தன்‌ திறத்தில்‌ மிகவாதரம்‌ செய்யும்‌ மெய்யருள்‌ வித்தகன்‌ மெய்யுரையின்‌ அகவாய்‌ அறிந்தவர்‌ ஆரண நீதி நெறி குலைதல்‌ உகவாரென எங்கள்‌ தேசிகர்‌ உண்மை உரைத்தனரே

33

உண்மை உரைக்கும்‌ மறைகளில்‌ ஓங்கிய உத்தமனார்‌ வண்மை அளப்பரிதாதலின்‌ வந்து கழல்‌ பணிவார்‌ தண்மை கிடக்கத்‌ தரமளவென்ற வியப்பிலதாம்‌ உண்மை உரைத்தனர்‌ ஓரம்‌ தவிர உயர்ந்தனரே

34

உயர்ந்தனன்‌ காவலன்‌ அல்லார்க்கு உரிமை துறந்துயிராய்‌ மயர்ந்தமை தீர்ந்து மற்றோர்‌ வழியின்றி அடைக்கலமாய்ப்‌ பயந்தவன்‌ நாரணன்‌ பாதங்கள்‌ சேர்ந்து பழவடியார்‌ நயந்த குற்றேவல்‌ எல்லாம்‌ நாடு நன்‌ மனுவோதினமே

35

ஓதுமிரண்டை இசைந்து அருளால்‌ உதவும்‌ திருமால்‌ பாதம்‌ இரண்டும்‌ சரணெனப்‌ பற்றி நம்‌ பங்கயத்தாள்‌ நாதனை நண்ணி நலந்திகழ்‌ நாட்டில்‌ அடிமையெல்லாம்‌ கோதில்‌ உணர்த்தியுடன்‌ கொள்ளுமாறு குறித்தனமே

36

குறிப்புடன்‌ மேவும்‌ தருமங்களின்றி அக்கோவலனார்‌ வெறித்துளவக்‌ கழல்‌ மெய்யரணென்று விரைந்தடைந்து பிரித்த வினைத்திரள்‌ பின்‌ தொடராவகை அப்பெரியோர்‌ மறிப்புடை மன்னருள்‌ வாசகத்தால்‌ மருளற்றனமே

37

மருளற்ற தேசிகர்‌ வான்‌ உகப்பால்‌ இந்த வையமெல்லாம்‌ இருளற்றிறையவன்‌ இணையடி பூண்டுயவெண்ணுதலால்‌ தெருளற்ற செந்தொழில்‌ செல்வம்‌ பெருகிச்‌ சிறந்தவர்பால்‌ அருளுற்ற சிந்தையினால்‌ அழியா விளக்கேற்றினரே

38

ஏற்றி மனத்தெழில்‌ ஞான விளக்கை இருள்‌ அனைத்தும்‌ மாற்றினவர்க்கொரு கைம்மாறு மாயனும்‌ காணகில்லான்‌ போற்றி உகப்பதும்‌ புந்தியில்‌ கொள்வதும்‌ பொங்கு புகழ்‌ சாற்றி வளர்ப்பதும்‌ சற்றல்லவோ முன்னம்‌ பெற்றதற்கே

39

முன்‌ பெற்ற ஞானமும்‌ மோகம்‌ துறக்கலும்‌ மூன்றுரையில்‌ தன்‌ பற்ற தன்மையும்‌ தாழ்ந்தவர்க்கீயும்‌ தனித்தகவும்‌ மன்‌ பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர்பால்‌ சின்பற்றி என்பயன்‌ சீர்‌ அறிவோர்க்கிவை செப்பினமே

40

செப்பச்‌ செவிக்கமுதென்னத்‌ திகழும்‌ செழும்‌ குணத்துத்‌ தப்பற்றவருக்குத்‌ தாமே உகந்து தரும்‌ தகவால்‌ ஓப்பற்ற நான்மறை உள்ளக்கருத்தில்‌ உறைத்துரைத்த முப்பத்திரண்டிவை முத்தமிழ்‌ சேர்ந்த மொழித்திருவே

41

திருவுடன்‌ வந்த செழுமணி போல்‌ * திருமாலிதயம்‌ * மருவிடம்‌ என்ன மலரடி சூடும்‌ * வகைபெறுநாம்‌ * கருவுடன்‌ வந்த கடுவினையாற்றில்‌ * விழுந்தொழுகாது * அருவுடன்‌ ஐந்தறிவார்‌ * அருள்‌ செய்ய அமைந்தனரே

புருடன்‌ மணிவரமாகப்‌ பொன்றா மூலப்‌ பிரகிருதி மறுவாக மான்‌ தண்டாகத்‌ தெருள்‌ மருள்‌ வாளுறையாக ஆங்காரங்கள்‌ சார்ங்கம்‌ சங்காக மனம்‌ திகிரியாக இருடிகங்கள்‌ ஈரைந்தும்‌ சரங்களாக இருபூத மாலை வனமாலையாகக்‌ கருடன்‌ உருவாம்‌ மறையின்‌ பொருளாம்‌ கண்ணன்‌ கரிகிரி மேல்‌ நின்றனைத்தும்‌ காக்கின்றானே

42

ஆராதவருள்‌ அமுதம்‌ பொதிந்த கோயில்‌ அம்புயத்தோன்‌ அயோத்தி மன்னற்களித்த கோயில்‌ தோலாத தனிவீரன்‌ தொழுத கோயில்‌ துணையான வீடணற்குத்‌ துணையாம்‌ கோயில்‌ சேராத பயனெல்லாம்‌ சேர்க்கும்‌ கோயில்‌ செழுமறையின்‌ முதலெழுத்துச்‌ சேர்ந்த கோயில்‌ தீராத வினையனைத்தும்‌ தீர்க்கும்‌ கோயில்‌ திருவரங்கம்‌ எனத்‌ திகழும்‌ கோயில்‌ தானே

43

கண்ணன்‌ அடியிணை எமக்குக்‌ காட்டும்‌ வெற்பு கடு வினையர்‌ இரு வினையும்‌ கடியும்‌ வெற்பு திண்ணமிது வீடென்னத்‌ திகழும்‌ வெற்பு தெளிந்த பெரும்‌ தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு புண்ணியத்தின்‌ புகல்‌ இதெனப்‌ புகழும்‌ வெற்பு பொன்னுலகில்‌ போகமெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு வேங்கட வெற்பென விளங்கும்‌ வேத வெற்பே

44

உத்தமவமர்த்தலம்‌ அமைத்ததோர்‌ எழில்‌ தனு உய்த்த கணையால்‌ அத்திரவரக்கன்‌ முடி பத்தும்‌ ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்‌ மத்துறு மிகுத்த தயிர்‌ மொய்த்த வெணெய்‌ வைத்ததுணும்‌ அத்தனிடமாம்‌ அத்திகிரி பத்தர்‌ வினை தொத்தற அறுக்கும்‌ அணி அத்திகிரியே

45

எட்டு மா மூர்த்தியெண்‌ கணன்‌ எண்‌ திக்‌- கெட்டிறை எண்‌ பிரகிருதி எட்டுமா வரைகள்‌ ஈன்றவெண்‌ குணத்தோன்‌ எட்டெணுமெண்‌ குணமதியோர்க்கு எட்டு மா மலர்‌ எண்‌ சித்தி எண்‌ பத்தி எட்டு யோகாங்கம்‌ எண்‌ செல்வம்‌ எட்டு மா குணம்‌ எட்டெட்டெணும்‌ கலை எட்டிரத மேலதுவும்‌ எட்டினவே

46

ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ தானுமாகி ஒருநினைவால்‌ ஈன்ற உயிரெல்லாம்‌ உய்ய வண்‌ துவரை நகர்‌ வாழ வசுதேவற்காய்‌ மன்னவற்குத்‌ தேர்ப்‌ பாகனாகி நின்ற தண்‌ துளவ மலர்‌ மார்பன்‌ தானே சொன்ன தனித்தருமம்‌ தான்‌ எமக்காய்த்‌ தன்னையென்றும்‌ கண்டு களித்தடி சூட விலக்காய்‌ நின்ற கண்புதையல்‌ விளையாட்டைக்‌ கழிக்கின்றானே

47

மூண்டாலும்‌ அரியதலில்‌ முயல வேண்டா முன்னம்‌ அதில்‌ ஆசைதனை விடுகை திண்மை வேண்டாது சரணநெறி வேறோர்‌ கூட்டு வேண்டில்‌ அயன்‌ அத்திரம்‌ போல்‌ வெள்கிநிற்கும்‌ நீண்டாகுநிறை மதியோர்‌ நெறியில்‌ கூடா நின்‌ தனிமை துணையாக என்தன்‌ பாதம்‌ பூண்டால்‌ உன்‌ பிழைகளெல்லாம்‌ பொறுப்பனென்ற புண்ணியனார்‌ புகழ்‌ அனைத்தும்‌ புகழுவோமே

48

சாதனமும்‌ நற்பயனும்‌ நானேயாவன்‌ சாதகனும்‌ என்‌ வசமாய்‌ என்னைப்பற்றும்‌ சாதனமும்‌ சரணநெறியன்றுமக்குச்‌ சாதனங்கள்‌ இந்நிலைக்கோர்‌ இடையில்‌ நில்லா வேதனை சேர்‌ வேறங்கமிதனில்‌ வேண்டா வேறெல்லாம்‌ நிற்கு நிலை நானே நிற்பன்‌ தூதனுமாம்‌ நாதனுமாம்‌ என்னைப்‌ பற்றிச்‌ சோகம்‌ தீரென உரைத்தான்‌ சூழ்கின்றானே

49

தன்‌ நினைவில்‌ விலக்கின்றித்‌ தன்னை நண்ணார்‌ நினைவனைத்தும்‌ தான்‌ விளைத்தும்‌ விலக்கு நாதன்‌ என்‌ நினைவை இப்பவத்தில்‌ இன்று மாற்றி இணையடிக்கீழ்‌ அடைக்கலம்‌ என்றெம்மைவைத்து முன்‌ நினைவால்‌ யாம்‌ முயன்ற வினையால்‌ வந்த முனிவயர்ந்து முத்திதர முன்னே தோன்றி நன்‌ நினைவால்‌ நாம்‌ இசையும்‌ காலம்‌ இன்றோ நாளையோ என்று நகை செய்கின்றானே

50

பாட்டுக்குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ மாட்டுக்கருள்‌ தரு மாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ நாட்டுக்கிருள்‌ செக நான்மறை அந்தி நடை விளங்க வீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டும்‌ அம்மெய்விளக்கே

51

உறு சகடம்‌ உடையவொரு காலுற்றுணர்ந்தன உடன்‌ மருதம்‌ ஒடிய ஒரு போதில்‌ தவழ்ந்தன உறி தடவும்‌ அளவில்‌ உரலோடுற்று நின்றன உறுநெறியோர்‌ தருமன்‌ விடு தூதுக்குகந்தன மறநெறியர்‌ முறிய பிருதானத்து வந்தன மலர்மகள்‌ கை வருட மலர்‌ போதில்‌ சிவந்தன மறுபிறவி அறுமுனிவர்‌ மாலுக்கிசைந்தன மனு முறையில்‌ வருவதோர்‌ விமானத்துறைந்தன அறமுடைய விசயன்‌ அமர்‌ தேரில்‌ திகழ்ந்தன அடலுரக படமடிய ஆடிக்‌ கடிந்தன அறு சமயம்‌ அறிவரிய தானத்தமர்ந்தன அணி குருகை நகர்‌ முனிவர்‌ நாவுக்கமைந்தன வெறியுடைய துளவமலர்‌ வீறுக்கணிந்தன விழுகரியோர்‌ குமரன்‌ என மேவிச்‌ சிறந்தன விறலசுரர்‌ படையடைய வீயத்‌ துரந்தன விடலரிய பெரிய பெருமாள்‌ மெய்ப்‌ பதங்களே

52

மறை உரைக்கும்‌ பொருளெல்லாம்‌ மெய்யென்றோர்வார்‌ மன்னிய கூர்மதி உடையார்‌ வண்‌ குணத்தில்‌ குறை உரைக்க நினைவில்லார்‌ குருக்கள்‌ தம்பால்‌ கோதற்ற மனம்‌ பெற்றார்‌ கொள்வார்‌ நன்மை சிறை வளர்க்கும்‌ சில மாந்தர்‌ சங்கேதத்தால்‌ சிதையாத திண்‌ மதியோர்‌ தெரிந்ததோரார்‌ பொறை நிலத்தின்‌ மிகும்‌ புனிதர்‌ காட்டும்‌ எங்கள்‌ பொன்றாத நன்னெறியில்‌ புகுதுவாரே

53

இது வழியின்‌ அமுதென்றவர்‌ இன்புலன்‌ வேறிடுவார்‌ இதுவழியாம்‌ அலவென்றறிவார்‌ எங்கள்‌ தேசிகரே இதுவழி எய்துகவென்று உகப்பால்‌ எம்‌ பிழை பொறுப்பார்‌ இது வழியா மறையோர்‌ அருளால்‌ யாம்‌ இசைந்தனமே

54

எட்டுமிரண்டும்‌ அறியாத எம்மை இவை அறிவித்து எட்டவொண்ணாத இடம்‌ தரும்‌ எங்கள்‌ அம்மாதவனார்‌ முட்ட வினைத்திரள்‌ மாள முயன்றிடும்‌ அஞ்சலென்றார்‌ கட்டெழில்‌ வாசகத்தால்‌ கலங்கா நிலை பெற்றனமே

55

வானுள்‌ அமர்ந்தவர்க்கும்‌ வருந்த வரு நிலைகள்‌ தான்‌ உளனாய்‌ உகக்கும்‌ தரம்‌ இங்கு நமக்குளதே கூனுள நெஞ்சுகளால்‌ குற்றமெண்ணி இகழ்ந்திடினும்‌ தேனுள பாத மலர்த்‌ திருமாலுக்குத்‌ தித்திக்குமே

56

வெள்ளைப்‌ பரிமுகர்‌ தேசிகராய்‌ விரகால்‌ அடியோம்‌ உள்ளத்தெழுதியதோலையில்‌ இட்டனம்‌ யாம்‌ இதற்கென்‌ கொள்ளத்‌ துணியினும்‌ கோதென்றிகழினும்‌ கூர்‌ மதியீர்‌ எள்ளத்தனையுகவாதிகழாது எம்மெழில்‌ மதியே