சீரார் தூப்புல் பிள்ளை அந்தாதியென்று செழுந்தமிழால் நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக்கீழ் மொழிந்தான் ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்திவ்வுலகுய்யவே சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன் தாள் தூமலர் சூடிய தொல்லருள் மாறன் துணை அடிக்கீழ் வாழ்வை உகக்கும் இராமானுசமுனி வண்மை போற்றும் சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே
பிள்ளையந்தாதி
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
திருமலை நல்லான் சக்கரவர்த்தி என்னும் ஆசிரியரை நோக்கிப் பாடிய இருபது பாசுரங்கள். "மாநிலத்து ஓதிய மாமறை மன்னிய நற்கலைகள் ஆனவை செய்யும் அரும்பொருள் அத்தனையே அருளும்" — மறைகளும் கலைகளும் தரும் பொருள் அனைத்தையும் ஆசிரியரே அருளுவதாகச் சொல்கிறது. அந்தாதி முறையில் அமைந்த இந்நூலுடன் தேசிக பிரபந்தம் நிறைவடைகிறது.
சென்னி வணங்கச் சிறு பனி சோரவெங்கண் இணைகள் வெந்நரகங்களும் வீய வியன் கதி இன்பமேவ துன்னு புகழுடைத் தூப்புல் துரந்தரன் தூமலர்த் தாள் மன்னிய நாள்களும் ஆகுங்கொல் மாநிலத்தீர் நமக்கே
மாநிலத்தோதிய மாமறை மன்னிய நற்கலைகள் ஆனவை செய்யும் அரும் பொருள் அத்தனையே அருளும் தூநெறி காட்டும் இராமானுசமுனித் தோத்திரம் செய் ஊனமில் தூப்புல் அய்யன் ஓர் புகழன்றி உய்வில்லையே
உய்யும் வகை இல்லை உத்தரவேதியுள் வந்துதித்த செய்யவள் மேவிய சீர் அருளாளரைச் சிந்தை செய்யும் மெய்யவன் எந்தை இராமானுசன் அருள் மேவி வாழும் ஐயன் இலங்கு தூப்புல் பிள்ளை ஆய்ந்த பொருளன்றியே
அன்றிவ்வுலகினை ஆக்கி அரும் பொருள் நூல் விரித்து நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவி பின்னும் வென்றிப் புகழ் திருவேங்கடநாதன் எனும் குருவாய் நின்று நிகழ்ந்து மண்மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே
வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் எங்கள் தூப்புல் மெய்த்தவன் உத்தமன் வேங்கடநாதன் வியன் கலைகள் மொய்த்திடு நாவின் முழக்கொடு வாதியர் மூலமறக் கைத்தவன் என்றுரைத்தேன் கண்டிலேன் என் கடுவினையே
வினைகாள் உமக்கு இனி வேறோரிடம் தேடவேண்டும் எனைச்- சினமேவி முன் போல் சிதைக்கும் வகை இங்கரிது கண்டீர் எனெனில் இராமானுசமுனி இன்னுரை சேரும் தூப்புல் புனிதன் என் புந்தி புகுந்து திகழ்ந்து பொருந்தினரே
பொருந்திப் புவிதனில் பொய் வாழ்க்கை பூண்கின்ற பூரியர்காள் இருந்து நரகின் இடர் கெடும் ஆற்றை அறிகின்றிலீர் பொருந்தும் பொருளொன்று கேளீர் பொங்கும் இவ்விடர்க் கடற்கு வருந்தாது தூப்புல் மாபூருடன் பாதம் வணங்குமினே
வணக்கம் ஒடுக்கம் வழக்கம் ஒழுக்கம் இரக்கம் சேரும் இணக்கம் உறக்கம் இழுக்கும் அழுக்கும் இகந்து நிற்கும் குணக்குலம் ஓங்கும் இராமானுசன் குணம் கூறும் தூப்புல் அணுக்கனைப் பிள்ளைதனை அரணாக அடைபவர்க்கே
அடைபவர் தீவினை மாற்றி அருள் தரும் தூப்புல் ஐயா இடர் தரும் இப்பிறவிக் கடல் தன்னில் அமிழ்ந்த என்னைக் கடையறப் பாசம் கழற்றி நின் தாளிணை காணும் வண்ணம் உடையவனே! அருளாய் உணர்ந்தார் தங்கள் கற்பகமே
கற்பகமே என்று காசினியோரைக் கதிக்க மாட்டேன் வெற்பிடையே நின்று வெந்தவத் தீயிலும் வேவமாட்டேன் பற்பல கலைவல்ல பாவலனே பத்தர் ஏத்தும் தூப்புல் அற்புதனே அருளாய் அடியேனுக்கரும் பொருளே
பொருளானதொன்றும் என்னில் பொருந்தாததும் அன்றி அந்தோ மருளே மிகுத்து மறையவர் நல்வழி மாற்றி நின்றேன் தெருளார் மறைமுடித் தேசிகனே எங்கள் தூப்புல் தேவே! அருளாய் இனி எனக்குன் அருளே அன்றி ஆறில்லையே
ஆறாகவெண்ணும் அருங்கருமம் ஞானம் காதல் கொண்டு வேறாக நிற்கும் விரகெனக்கில்லை விரத்தி இல்லை தேறாது திண்மதி சீரார் கதியிலும் செம்பொன் மேனி மாறாத தூப்புல் மாலே! மறவேன் இனி நின் பதமே
நின் பதம் தன்னிலும் நேரே எனக்கில்லை அன்பு கண்டாய் நின் பதம் ஒன்றியவன் பரிலும் நேசமில்லை அந்தோ என் படி கண்டினி என்பயன் ஏதமில் தூப்புல் எந்தாய்! உன் படியே அருளாய் உதவாய் எனக்குன்னருளே
உன்னருள் அன்றி எனக்கொரு நற்றுணை இன்மையினால் என்னிரு வல்வினை நீயே விலக்கி இதம் கருதி மன்னிய நல் திருமந்திரம் ஓதும் பொருள் நிலையே பொன் அருளால் அருளாய் புகழ் தூப்புல் குலவிளக்கே
விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள் வளக்காதல் கொண்டுறை மார்பன் திறத்தும் உனதடியார் துளக்காதல் இல்லவர் தங்கள் திறத்திலும் தூய்மை எண்ணிக் களக்காதல் செய்யும் நிலை கடியாய் தூப்புல் காவலனே
காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தேமலர்ச் சேவடி சேர்ந்து பணிந்து அவர் தம் அருளால் நாவலரும் தென் வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி காவல தூப்புல் குலத்தரசே! எம்மைக் காத்தருளே
அருள் தரும் ஆரண தேசிகனே! எங்கள் தூப்புல் தேவே வருகவி தார்க்கிகசிங்கமே! வாதியர் வாழ்வறுத்தாய் இரு கையும் கூப்பி உரைக்கும் இவ்விண்ணப்பம் ஒன்று கேளாய் உருவவெனக்கருளாய் எண்ணும் உள்ளம் உன் தொண்டரையே
தொண்டர் உகக்கும் துணையடி வாழி! நின் தூமுறுவல் கொண்ட முகம் வாழி! வாழி வியாக்கியா முத்திரைக்கை வண் திருநாமமும் வாழி மணிவட முப்புரி நூல் கொண்டசீர்த் தூப்புல் குலமணியே! வாழி நின் வடிவே
வடிவழகார்ந்த வண் தூப்புல் வள்ளல் மென்மலர் அடிமேல் அடியவர் ஓத அந்தாதி இருபதும் ஆய்ந்துரைத்தேன் திடமுடன் ஈதைத் தினந்தொறும் ஆதரித்தோதும் அன்பர் முடியிடை நேர்படும் தூப்புல் அம்மான் பத மாமலரே