தம்பரம் என்றிரங்கித் தளராமனம் தந்தருளால் உம்பர் தொழும் திருமால் உகந்தேற்கும் உபாயமொன்றால் நம்பிறவித் துயர்மாற்றிய ஞானப் பெரும் தகவோர் சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே
அமிருதரஞ்சனி
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
தேசிக பிரபந்தத்தின் தொடக்க நூல். "முத்திக்கு அருள் சூட, மூன்றைத் தெளி முன்னம்" — வீடுபேறு வேண்டுவோர் முதலில் மூன்று உண்மைகளைத் (சித், அசித், ஈஸ்வரன்) தெளிய வேண்டும் என்று வழிகாட்டுகிறார். கற்க வேண்டியவற்றை வரிசைப்படுத்தி வைக்கும் ஒரு தொடக்கநூல் இது. அமிர்தத்தை ரசிக்கச் செய்வது என்னும் பெயருக்கேற்ப, ஆழ்ந்த பொருள்களை இனிமையாக அறிமுகப்படுத்துகிறது.
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால் அடிகாட்டிய நம் தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே
முத்திக்கருள் சூட மூன்றைத் தெளிமுன்னம் இத் திக்கால் ஏற்கும் இதம்
மூன்றில் ஒருமூன்றும் மூவிரண்டும் முந்நான்கும் தோன்றத் தொலையும் துயர்
உயிருமுடலும் உடலாக வோங்கித் தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான் பயிரில் களைபோல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில் வளைபோல் எம் ஆசிரியர் வாக்கு
அலையற்ற ஆரமுதக்கடல் அக்கடல் உண்ட முகில் விலையற்ற நன்மணிவெற்பு வெயில் நிலவோங்கு பகல் துலையுற்றன என்பர் தூமறை சூடுந்துழாய் முடியாற்கு இலையொத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கெண்ணுதற்கே
உத்தி திகழும் உரை மூன்றின் மும்மூன்றும் சித்தம் உணரத் தெளிவித்தார் முத்தி தரும் மூல மறையின் முடிசேர் முகில்வண்ணன் சீலமறிவார் சிலர்
எனக்குரியன் எனது பரம் என் பேறென்னாது இவையனைத்தும் இறையில்லா இறைக்கடைத்தோம் தனக்கிணை ஒன்றில்லாத திருமால் பாதம் சாதனமும் பயனும் எனச் சலங்கள் தீர்ந்தோம் உனக்கிதமென்றொரு பாகன் உரைத்ததுற்றோம் உத்தமனாம் அவன் உதவி எல்லாம் கண்டோம் இனிக்க வருமவை கவர இகந்தோம் சோகம் இமையவரோடொன்றினி நாம் இருக்கும் நாளே
தத்துவங்கள் எல்லாம் தகவால் அறிவித்து முத்தி வழி தந்தார் மொய்கழலே அத் திவத்தில் ஆரமுதம் ஆறாம் இரு நிலத்தில் என்றுரைத்தார் தாரமுதல் ஓதுவித்தார் தாம்
திருநாரணனெனும் தெய்வமும் சித்தும் அசித்தும் என்று பெரு நான்மறை முடிபேசிய தத்துவம் மூன்றிவை கேட்டு ஒரு நாள் உணர்ந்தவர் உய்யும் வகையன்றி ஒன்றுகவார் இரு நால் எழுத்தின் இதயங்கள் ஓதிய எண்குணரே
காரணமாய் உயிராகி அனைத்தும் காக்கும் கருணை முகில் கமலையுடன் இலங்குமாறும் நாரணனார் வடிவான உயிர்கள் எல்லாம் நாம் என்று நல் அடிமைக்கேற்குமாறும் தாரணிநீர் முதலான மாயை காலம் தனிவான் என்றிவை உருவாம் தன்மைதானும் கூரணிசீர் மதியுடைய குருக்கள் காட்டக் குறிப்புடன் நாம் கண்டவகை கூறினோமே
அப்படி நின்ற அமலன் படியெல்லாம் இப்படி எம் முள்ளத்தெழுதினார் -எப்படியும் ஏரார் சுருதி ஒளியால் இருள்நீக்கும் தாராபதி அனையார் தாம்
செம்பொன் கழலிணைச் செய்யாள் அமரும் திருவரங்கர் அன்பர்க்கடியவராய் அடிசூடிய நாமுரைத்தோம் இன்பத் தொகையென எண்ணிய மூன்றில் எழுத்தடைவே ஐம்பத்தொரு பொருள் ஆருயிர் காக்கும் அமுதெனவே
யான் அறியும் சுடராகி நின்றேன் மற்றும் யாதுமலேன் வான் அமரும் திருமால் அடியேன் மற்றோர் பற்றுமிலேன் தான் அமுதாம் அவன் தன் சரணே சரணென்றடைந்தேன் மானமிலா அடிமைப் பணி பூண்ட மனத்தினனே
சீலம் கவர்ந்திடும் தேசிகர் தேசின் பெருமையினால் தூலங்கள் அன்ன துரிதங்கள் மாய்த்தன துஞ்சல் தரும் கோலம் கழிந்திடக் கூறியகாலம் குறித்து நின்றோம் மேலிங்கு நாம் பிறவோம் வேலை வண்ணனை மேவுதுமே
வண்மை உகந்த அருளால் வரந்தரும் மாதவனார் உண்மை யுணர்ந்தவர் ஓதுவிக்கின்ற உரைவழியே திண்மைதரும் தெளிவொன்றால் திணியிருள் நீங்கியநாம் தண்மை கழிந்தனம் தத்துவம் காணும் தரத்தினமே
நாராயணன் பரன் நாம் அவனுக்கு நிலை அடியோம் சோராதனைத்தும் அவன் உடம்பென்னும் சுருதிகளால் சீரார் பெருந்தகைத் தேசிகர் எம்மைத் திருத்துதலால் தீரா மயல் அகற்றும் திறம்பாத் தெளிவுற்றனமே
ஒன்றே புகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால் அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம் நன்றே வருவதெல்லாம் நமக்குப் பரம் ஒன்றிலதே
சிறு பயனில் படியாத தகவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே மறுபிறவியறுத்தழியா வானில் வைக்கும் மனமே! நீ மகிழாதே இருப்பதென் கொல் உறுவதுனக்குரைக்கேன் இங்கிருக்குங்காலம் ஒரு பிழையும் புகுதாத உணர்த்தி வேண்டிப் பெறுவதெல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேரடிமையால் ஏதென்றிகழேல் நீயே
சாக்கியர் சைனர்கள் சார்வாகர் சாங்கியர் சைவர் மற்றும் தாக்கியர் நூல்கள் சிதையத் தனிமறையின் கருத்தை வாக்கியம் முப்பதினால் வகை செய்து வியாகரித்தோம் தேக்கி மனத்துள் இதனைத் திணியிருள் நீங்குமினே
தள்ளத் துணியினும் தாய்போல் இரங்கும் தனித் தகவால் உள்ளத்துறைகின்ற உத்தமன் தன்மை உணர்ந்துரைத்தோம் முள்ளொத்த வாதியர் முன்னேவரின் எங்கள் முக்கியர்பால் வெள்ளத்திடையில் நரிபோல் விழிக்கின்ற வீணர்களே
செய்யேல் மறமென்று தேசிகன் தாதை அவனுரைத்த மெய்யே அருள் பொருள் சூடிய எண்மதி காதலியாம் பொய்யே பகைபுலன் ஐயிரண்டொன்று பொருங்கருவி கையேறு சக்கரக் காவலன் காவல் அடைந்தவர்க்கே
அந்தமில் ஆதிதேவன் அழிசெய்தடைத்த அலை வேலை ஓத மடையச் செந்தமிழ் நூல் வகுத்த சிறு மா மனிச்சர் சிறுகைச் சிறாங்கையது போல் சந்தம் எலாம் உரைப்ப இவையென்று தங்கள் இதயத்தடக்கி அடியோம் பந்தம் எலாம் அறுக்க அருள் தந்துகந்து பரவும் பொருள்கள் இவையே
முக்குண மாயையின் மூவெட்டின் கீழ்வருமூவகையும் இக்குணமின்றி இலங்கிய காலச் சுழி இனமும் நற்குணமொன்றுடை நாகமும் நாராயணன் உடம்பாய்ச் சிற்குணம் அற்றவையென்றுரைத்தார் எங்கள் தேசிகரே
எனதென்பதும் யான் என்பதும் இன்றித் தனதென்று தன்னையும் காணாது -உனதென்று மாதவத்தால் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனில் கைதவத்தான் கைவளரான் காண்
பல் வினை வன்கயிற்றால் பந்த முற்றுழல்கின்றனரும் நல்வினை மூட்டிய நாரணனார் பதம் பெற்றவரும் தொல்வினை என்றும் இல்லாச் சோதி வானவரும் சுருதிச் செல்வினை ஓர்ந்தவர் சீவர் என்றோதச் சிறந்தனமே
ஆரணங்கள் எல்லாம் அடிசூட மேல் நின்ற காரணமாய் ஒன்றால் கலங்காதான் -நாரணனே நம்மேல் வினை கடியும் நல் வழியில் தான் நின்று தன் மேனி தந்தருளும் தான்
குடல்மிசை ஒன்றியும் கூடியும் நின்ற கொடுந்துயரும் உடல்மிசைத் தோன்றும் உயிரும் உயிர்க்குயிரும் இறையும் கடல்மிசைக் கண்ட தரளத்திரள் அவை கோத்த பொன்னூல் மடல்மிசை வார்த்தை அதன் பொருள் என்ன வகுத்தனமே
தத்துவம் தன்னில் விரித்திடத் தோன்றும் இரண்டுதனில் பத்தி விலக்கிய பாசண்டர் வீசுறும் பாசமுறார் எத்திசையும் தொழுதேத்திய கீர்த்தியர் எண் திசையார் சுத்தர் உரைத்த சுளகம் அருந்திய தூயவரே
வினைத் திரள் மாற்றிய வேதியர் தந்த நல் வாசகத்தால் அனைத்தும் அறிந்தபின் ஆறும் பயனுமென அடைந்தோம் மனத்தில் இருந்து மருந்தமுதாகிய மாதவனார் நினைத்தல் மறத்தல் அரிதாய நன்னிழல் நீள்கழலே
ஓது மறை நான்கதனில் ஓங்கும் ஒரு மூன்றினுள்ளே நீதிநெறி வழுவா நிற்கின்றோம் -போதமரும் பேராயிரமும் திருவும் பிரியாத நாராயணன் அருளால் நாம்
ஊன் தந்து நிலை நின்ற உயிரும் தந்து ஓர் உயிராகி உள் ஒளியோடுறைந்த நாதன் தான் தந்த இன்னுயிரை எனதென்னாமல் நல்லறிவும் தந்தகலா நலமும் தந்து தான் தந்த நல் வழியால் தாழ்ந்த என்னைத் தன் தனக்கே பாரமாகத் தானே எண்ணி வான் தந்து மலரடியும் தந்து வானோர் வாழ்ச்சிதர மன்னருளால் வரித்திட்டானே
திருமால் அடையிணையே திண் சரணாக் கொண்டு திருமால் அடி இணையே சேர்வார் -ஒரு மால் அருளால் அருளாத வானோர்கள் வாழ்ச்சி அருளால் நமக்களித்தார் ஆய்ந்து
சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோற்கு ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை அடிகள் பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நன்னிலை நாம் பெறும்பேறு ஏற்கின்ற எல்லைகள் எல்லாக் களை அறவெண்ணினமே
திருமால் அடியிணை சேர்ந்து திகழ்ந்த அடிமை பெறத் திரு நாரணன் சரண் திண்சரணாகத் துணிந்தடைவோர் ஒரு நாள் உறைக்க உயிர்தரும் மந்திரம் ஓதிய நாம் வருநாள் பழுதற்று வாழும் வகையதில் மன்னுவமே
மற்றொரு பற்றின்றி வந்தடைந்தார்க்கெல்லாம் குற்றம் அறியாத கோவலனார் -முற்றும் வினை விடுத்து விண்ணவரோடொன்ற விரைகின்றார் நினைவுடைத்தாய் நீ மனமே நில்லு
எல்லாத் தருமமும் என்னை இகழ்ந்திடத் தான் இகழாது எல்லாந் தனதென எல்லாம் உகந்தருள் தந்த பிரான் மல்லார் மதக்களிறொத்த வினைத்திரள் மாய்ப்பன் என்ற சொல்லால் இனி ஒருகால் சோகியாத் துணிவுற்றனமே
வினைத் திரள் மாற்றிய வேதியர் தந்தருள் வாசகத்தால் அனைத்தும் அறிந்தபின் ஆறும் பயனுமென அடைந்தோம் மனத்திலிருந்து மருந்தமுதாகிய மாதவனார் நினைத்தல் மறத்தல் அரிதாகி நின்றன நீள் கழலே
எட்டில் ஆறிரண்டில் ஒன்றில் எங்கும் ஆறியம்புவார் விட்ட ஆறு பற்றும் ஆறு வீடு கண்டு மேவுவார் சிட்டரான தேசுயர்ந்த தேசிகர்க்குயர்ந்து மேல் எட்டு மூன்றும் ஊடறுத்தது எந்தை மால் இரக்கமே