Skip to the text
ப்ரபந்தசாரம்

ப்ரபந்தசாரம்

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

பதினெட்டு பாசுரங்களில் ஆழ்வார்களையும் அவர்கள் பிரபந்தங்களையும் வணங்கும் நூல். "கடல்மல்லைக் காவலனே, பூதவேந்தே, ஐப்பசியில் அவிட்ட நாள் வந்து இடர் கடியும்" என்று ஒவ்வொருவரையும் அவரவர் தலம், நட்சத்திரம், நூலுடன் சேர்த்து அழைக்கிறார். நாலாயிரத்தின் சாரத்தை வணக்கமாக முன்வைக்கும் நூல் இது.

1

ஆரண நான்கின்‌ பொருளை ஆழ்வார்கள்‌ ஆய்ந்தடைவே அன்புடனே அம்புவியோர்‌ அனைவரும்‌ ஈடேறவென்று நாரணனார்‌ தாள்களிலே நாலாயிரம்‌ தமிழால்‌ நண்ணியுரை செய்தவற்றை நாடி வகை தொகை செய்தாய்‌ பூரண மாஞானியர்‌ சேர்‌ பொங்கு புகழ்த்‌ தூப்புல்‌ வரும்‌ புனிதனென்றும்‌ பிள்ளையென்றும்‌ புவியோர்‌ புகழ்‌ வேங்கடவா தாரணியோர்‌ இங்குகக்கச்‌ சாற்றிய நல்‌ ப்ரபந்தசாரம்‌ தனை உரைத்து வாழுமனம்‌ தந்தருளாய்‌ என்றனக்கே ஆதிமறையோதி மகிழ்‌ அயக்கிரிவர்‌ தம்மருளால்‌ அன்புடனே தூப்புல்‌ நகர்‌ அவதரித்தே இங்கு வந்த வாதியரை வென்று வந்து வன்புவிமேல்‌ எதிராசர்‌ வாழ்வுறு நல்‌ தரிசனத்தை வண்மையுடனே வளர்த்து நீதினெறி தவறாமல்‌ நிறுத்தியிடும்‌ வேங்கடவா நேசமுடன்‌ ஆழ்வார்கள்‌ நிலைகளையெல்லாம்‌ உணர்ந்து சாதுசனம்‌ வாழவென்று சாற்றிய நல்‌ ப்ரபந்தசாரம்‌ தனை உரைத்து வாழுமனம்‌ தந்தருளாய்‌ என்றனக்கே ஆழ்வார்கள்‌ அவதரித்த நாளூர்‌ திங்கள்‌ அடைவு திருநாமங்கள்‌ அவர்‌ தாம்‌ செய்த வாழ்வான திருமொழிகள்‌ அவற்றுள்‌ பாட்டின்‌ வகையான தொகை இலக்கம்‌ மற்றுமெல்லாம்‌ வீழ்வாக மேதினிமேல்‌ விளங்க நாளும்‌ விரித்துரைக்கும்‌ கருத்துடனே மிக்கோர்‌ தங்கள்‌ நீள்‌ பாதம்‌ நிரந்தரமும்‌ தொழுது வாழ்த்தும்‌ நேசமுடன்‌ அடியேன்‌ தன்‌ நெஞ்சு தானே

2

அருள்‌ மிகுத்த ஒரு வடிவாய்க்‌ கச்சிதன்னில்‌ ஐப்பசீ மாதத்‌ திருவோணத்து நாளில்‌ பொருள்‌ மிகுத்த மறை விளங்கப்‌ புவியோர்‌ உய்யப்‌ பொய்கைதனில்‌ வந்துதித்த புனிதா! முன்னாள்‌ இருளதனில்‌ தண்‌ கோவல்‌ இடைகழிச்‌ சென்று இருவருடன்‌ நிற்கவும்‌ மால்‌ இடை நெருக்கத்‌ திருவிளக்காம்‌ எனும்‌ வையந்தகளி நூறும்‌ செழும்‌ பொருளா எனக்கருள்‌ செய்‌ திருந்த நீயே

3

கடன்மல்லைக்‌ காவலனே! பூதவேந்தே காசினிமேல்‌ ஐப்பசியில்‌ அவிட்ட நாள்‌ வந்து இடர்கடியும்‌ தண்‌ கோவல்‌ இடைகழிச்‌ சென்று இணையில்லா மூவருமாய்‌ இசைந்தே நிற்க நடுவில்‌ இவர்‌ ஒருவரும்‌ என்றறியாவண்ணம்‌ நள்ளிருளில்‌ மால்‌ நெருக்க நந்தா ஞானச்‌- சுடர்‌ விளக்கேற்றிய அன்பே தகளியான தொடைனூறும்‌ எனக்கருள்‌ செய்‌ துலங்க நீயே

4

மாமயிலைப்‌ பதியதனில்‌ துலா மாதத்தில்‌ வரும்‌ சதயத்தவதரித்துக்‌ கோவலூரில்‌ தூமுனிவர்‌ இருவருடன்‌ துலங்க நின்று துன்னிய பேரிருள்‌ நீங்கச்‌ சோதி தோன்றச்‌ சேமமுடன்‌ நெடுமாலைக்‌ காணப்புக்குத்‌ திருக்கண்டேன்‌ என உரைத்த தேவே உன்‌ தன்‌ பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்‌ பழவடியேனுக்கருள்‌ செய்‌ பரம நீயே

5

தைம்மகத்தில்‌ வரும்‌ மழிசைப்பரனே! மற்றைச்‌ சமயங்கள்‌ பல தெரிந்து மாயோன்‌ அல்லால்‌ தெய்வம்‌ மற்றில்லை என உரைத்த வேதச்‌ செழும்‌ பொருள்‌ நான்முகன்‌ தொண்ணூற்றாறு பாட்டும்‌ மெய்ம்மிகுத்த திருச்சந்தவிருத்தப்‌ பாடல்‌ விளங்கிய நூற்றிருபதும்‌ தப்பாமல்‌ மெய்யே வையகத்தில்‌ மறவாமல்‌ உரைத்து வாழும்‌ வகை அடியேனுக்கருள்‌ செய்‌ மகிழ்ந்து நீயே

6

முன்‌ உரைத்த திருவிருத்தம்‌ நூறு பாட்டும்‌ முறையில்‌ வரும்‌ ஆசிரியம்‌ ஏழு பாட்டும்‌ மன்னிய நற்பொருள்‌ பெரிய திருவந்தாதி மறவாதபடி எண்பத்தேழு பாட்டும்‌ பின்‌ உரைத்ததோர்‌ திருவாய்மொழி எப்போதும்‌ பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்‌ இந்நிலத்தில்‌ வைகாசி விசாகம்‌ தன்னில்‌ எழில்‌ குருகை வருமாறா! இரங்கு நீயே

7

தேறிய மாஞானமுடன்‌ திருக்கோளூரில்‌ சித்திரையில்‌ சித்திரைநாள்‌ வந்து தோன்றி ஆறிய நல்‌ அன்புடனே குருகூர்‌ நம்பிக்கு அனவரதம்‌ அந்தரங்க அடிமை செய்து மாறனை அல்லால்‌ என்று மறந்தும்‌ தேவு மற்றறியேன்‌ எனும்‌ மதுரகவியே நீ முன்‌ கூறிய கண்ணிநுண்‌ சிறுத்தாம்பதனில்‌ பாட்டுக்‌ குலவு பதினொன்றும்‌ எனக்குதவு நீயே

8

பொன்‌ புரையும்‌ வேல்‌ குலசேகரனே! மாசிப்‌ புனர்பூசத்தெழில்‌ வஞ்சிக்‌ களத்துத்‌ தோன்றி அன்புடனே நம்பெருமாள்‌ செம்பொற்கோயில்‌ அனைத்துலகின்‌ பெருவாழ்வும்‌ அடியார்‌ தங்கள்‌ இன்ப மிகு பெருங்குழுவும்‌ காண மண்மேல்‌ இருளிரிய என்றெடுத்த இசையில்‌ சொன்ன நன்‌ பொருள்‌ சேர்‌ திருமொழி நூற்றைந்து பாட்டும்‌ நன்றாக எனக்கருள்‌ செய்‌ நல்கி நீயே

9

பேர்‌ அணிந்த வில்லிபுத்தூர்‌ ஆனி தன்னில்‌ பெருஞ்சோதி தனில்‌ தோன்றும்‌ பெருமானே! முன்‌ சீர்‌ அணிந்த பாண்டியன்‌ தன்‌ நெஞ்சு தன்னில்‌ தியக்கற மால்‌ பரத்துவத்தைத்‌ திறமாச்‌ செப்பி வாரணமேல்‌ மதுரை வலம்‌ வரவே வானில்‌ மால்‌ கருட வாகனனாய்த்‌ தோன்ற வாழ்த்தும்‌ ஏரணி பல்லாண்டு முதல்‌ பாட்டு நானூற்று எழுபத்தொன்றிரண்டும்‌ எனக்குதவு நீயே

10

வேயர்‌ புகழ்‌ வில்லிபுத்தூர்‌ ஆடிப்பூரம்‌ மேன்மேலும்‌ மிக விளங்க விட்டுசித்தன்‌ தூய திருமகளாய்‌ வந்தரங்கனார்க்குத்‌ துழாய்‌ மாலை முடிசூடிக்‌ கொடுத்த மாதே நேயமுடன்‌ திருப்பாவைப்‌ பாட்டாறைந்தும்‌ நீ உரைத்த தையொரு திங்கள்‌ பாமாலை ஆய புகழ்‌ நூறுடன்‌ நாற்பத்து மூன்றும்‌ அன்புடனே அடியேனுக்கருள்‌ செய்‌ நீயே

11

மன்னு மதிள்‌ திருமண்டங்குடி தான்‌ வாழ மார்கழி மாதக்‌ கேட்டை நாளில்‌ வந்து துன்னு புகழ்த்‌ தொண்டரடிப்பொடியே! நீ முன்‌ துழாய்‌ மாலை பணியடிமை செய்து நாளும்‌ தென்னரங்க மணவாளற்கன்பு மிக்குச்‌ செப்பிய நல்‌ திருமாலை நாற்பத்தைந்தும்‌ பன்னிய நல்‌ திருப்பள்ளியெழுச்சி பத்தும்‌ பழவடியேனுக்கருள்‌ செய்‌ பரிந்து நீயே

12

உலகறிய மலி புகழ்க்‌ கார்த்திகை மாதத்தில்‌ உரோகிணி நாள்‌ உறந்தை வளம்‌ பதியில்‌ தோன்றித்‌ தலம்‌ அளந்த தென்னரங்கர்‌ பால்‌ உலோக சாரங்க மாமுனி தோள்‌ தனிலே வந்து பலமறையின்‌ பொருளால்‌ பாண்‌ பெருமாளே! நீ பாதாதி கேசமதாய்ப்‌ பாடித்‌ தந்த சொலவமலனாதிபிரான்‌ பத்துப்‌ பாட்டும்‌ சோராமல்‌ எனக்கருள்‌ செய்‌ துலங்க நீயே

13

அறிவு தரும்‌ பெரிய திருமொழி தப்பாமல்‌ ஆயிரத்தோடெண்பத்துநாலு பாட்டும்‌ குறியதொரு தாண்டகம்‌ நாலைந்து ஆறைந்தும்‌ குலா நெடுந்தாண்டகம்‌ எழுகூற்றிருக்கை ஒன்றும்‌ சிறிய மடல்‌ பாட்டு முப்பத்தெட்டிரண்டும்‌ சீர்‌ பெரிய மடல்‌ தனில்‌ பாட்டெழுபத்தெட்டும்‌ இறையவனே! கார்த்திகையில்‌ கார்த்திகை நாள்‌ எழில்‌ குரையல்‌ வரு கலியா இரங்கு நீயே

14

தேசமெலாம்‌ உகந்திடவே பெரும்பூதூரில்‌ சித்திரையில்‌ ஆதிரைநாள்‌ வந்து தோன்றிக்‌ காசினிமேல்‌ வாதியரை வென்று அரங்கர்‌ கதியாக வாழ்ந்தருளும்‌ எதிராசா! முன்‌ பூசுரர்கோன்‌ திருவரங்கத்தமுதனார்‌ உன்‌ பொன்னடிமேல்‌ அந்தாதியாகப்‌ போற்றிப்‌ பேசிய நற்கலித்துறை நூற்றெட்டுப்‌ பாட்டும்‌ பிழை அறவே எனக்கருள்‌ செய்‌ பேணி நீயே

15

எண்ணின்‌ முதலாழ்வார்கள்‌ மூன்று நூறும்‌ எழில்‌ மழிசைப்பிரான்‌ இருநூற்றொரு பத்தாறும்‌ உண்மைமிகு மாறன்‌ மறை ஆயிரத்தோ- டுற்ற இருநூற்றுத்‌ தொண்ணூறுமாறும்‌ வண்மையுடை மதுரகவி பத்தும்‌ ஒன்றும்‌ வஞ்சியர்கோன்‌ நூற்றைந்தும்‌ பட்டநாதன்‌ பண்ணியல்‌ நானூற்றேழு பத்து மூன்றும்‌ பார்க்கோதை நூற்றேழு பத்து மூன்றே

16

பத்தரடிப்பொடி பாடல்‌ ஐம்பத்தைந்தும்‌ பாணர்‌ புகழ்‌ பத்துடனே பரகாலன்‌ சொல்‌ அத்தன்‌ உயர்‌ வேங்கடமாற்காயிரத்தோ டான இருநூற்றோர்‌ ஐம்பத்து மூன்றும்‌ முத்தி தரும்‌ எதிராசர்‌ பொன்னடிக்கே மொழிந்த அமுதர்‌ பாடல்‌ நூறும்‌ எட்டும்‌ எத்திசையும்‌ வாழ இவர்‌ பாடி வைத்த இவை நாலாயிரமும்‌ அடியோங்கள்‌ வாழ்வே

17

வையகமெண்‌ பொய்கை பூதம்‌ பேயாழ்வார்‌ மழிசையர்கோன்‌ மகிழ்‌ மாறன்‌ மதுரகவி பொய்யில்‌ புகழ்க்‌ கோழியர்கோன்‌ விட்டுசித்தன்‌ பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்‌ ஐயன்‌ அருள்‌ கலியன்‌ எதிராசர்‌ தம்மோடு ஆறிருவர்‌ ஓரொருவர்‌ அவர்‌ தாம்‌ செய்த துய்ய தமிழ்‌ இருபத்து நான்கின்‌ பாட்டின்‌ தொகை நாலாயிரமும்‌ அடியோங்கள்‌ வாழ்வே

18

அந்தமிலா ஆரணங்கள்‌ நாலாகி நின்ற அதன்‌ கருத்தை ஆழ்வார்கள்‌ ஆய்ந்தெடுத்துச்‌ செந்தமிழால்‌ அருள்‌ செய்த வகை தொகையும்‌ சிந்தாமல்‌ உலகங்கள்‌ வாழவென்று சந்த மிகு தமிழ்‌ மறையோன்‌ தூப்புல்‌ தோன்றும்‌ வேதாந்தகுரு மொழிந்த ப்ரபந்தசாரம்‌ சிந்தையினால்‌ அனு தினமும்‌ சிந்திப்போர்க்குச்‌ சேமமதாம்‌ திருமால்‌ தன்‌ கருணை யாலே