ஒருமதி அன்பர் உளம் கவர்ந்தன உலகம் அடங்க வளர்ந்தளந்தன ஒருசடை ஒன்றிய கங்கை தந்தன உரக படங்கள் அரங்கு கொண்டன தருமம் உயர்ந்ததிதென்ன நின்றன தருமன் இரந்ததிசைந்து சென்றன சகடம் உடைந்து கலங்க வென்றன தமர்கள் அருந்துமருந்திதென்பன திருமகள் செய்ய கரங்கள் ஒன்றின திகழ் துளவுந்து மணம் கமழ்ந்தன செழுமணி கொண்ட சிலம்பிலங்கின சிலைதனில் அன்றோர் அணங்குமிழ்ந்தன அருமறையந்தம் அமர்ந்த பண்பின அயன் முடி தன்னில் அமர்ந்துயர்ந்தன அருள் தரவெண்ணி அயிந்தை வந்தன அடியவர் மெய்யர் மலர்ப் பதங்களே
நவமணிமாலை
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
ஒன்பது வகைப் பாக்களால் தொடுக்கப்பட்ட மாலை. "புரம் உயர்த்த அசுரர்கட்கு ஓர் புறம் உரைத்த பொய்யினான், வரை எடுத்து மழை தடுத்த மழையொடு ஒத்த" — மேகம் போன்ற திருமேனியனை வருணிக்கிறது. வடிவத்தின் வேறுபாடு பொருளின் ஒருமையை மேலும் தெளிவாக்குகிறது.
மகரம் வளரும் அளவில் பெளவம் அடைய உற்றலைத்தனை வடிவு கமடமென அமர்ந்து கிரிதனைத் தரித்தனை மலியும் அசுரன் உரம் இடந்து வசுதையைப் பெயர்த்தனை வலிகொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்குதித்தனை பகரும் உலகம் அடி அளந்து தமர்களுக்களித்தனை பரசு முனிவன் வடிவு கொண்டு பகைவரைத் துணித்தனை பணிய விசைவில் தசமுகன் தன் முடிகள் பத்துதிர்த்தனை படியும் உருவில் வரு பிலம்ப அசுரனைத் தகர்த்தனை நகரிதுவரையென உகந்து வரை கரத்தெடுத்தனை நடமொடியலு பரியில் வந்து நலிவறுக்கவுற்றனை நலியும் வினைகள் செகுமருந்தின் நலமுறைந்த வெற்பினை நணுகு கருட நதி கிளர்ந்த புனல் உகப்பில் வைத்தனை அகர முதல வுரைகொள் மங்கை கணவனுக்களித்தனை அடையும் வினதை சிறுவனுய்ய அருள் கொடுத்துயர்த்தினை அடியும் அணையும் எனும் அனந்தன் அடிதொழக் களித்தனை அவனி மருவு திருவயிந்தை அடியவர்க்கு மெய்யனே
புரம் உயர்த்த அசுரர்கட்கோர் புறம் உரைத்த பொய்யினான் வரை எடுத்து மழை தடுத்த மழையொடொத்த மெய்யினான் திரை நிரைத்த கடலெரித்த சிலைவளைத்த கையினான் அருள் கொடுத்து வினை தவிர்க்கும் அடியவர்க்கு மெய்யனே
தேசொத்தார் இல்லை எனும் தெய்வ நாயகனார் வாசக் குழல் மாமலராள் மணவாளர் வாசித்தெழுமன்மதனார் மணல் தோப்பில் மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவாரே
உருளும் சகடம் ஒன்றுதைத்தாய் உலகம் ஏழும் உண்டுமிழ்ந்தளந்தாய் பொருளும் அழலும் இறையாகப் பூண்டேன் அடிமையினில் மீண்டேன் இருளும் மருளும் தரும் அந்நாள் எழிலார் ஆழி சங்கேந்தி அருளும் தெருளும் தர என்பால் அடியோர் மெய்ய! வந்தருளே
வஞ்சனைசெய் பூதனையை மலியும் சாட்டை மல்லரையோர் மதகளிற்றை வானோர் அஞ்சும் கஞ்சனை முன் கடிந்தவனி பாரம் தீர்த்த காவலனே! கோவலனாய் நின்ற கோவே அஞ்சனமும் காயாவும் அனைய மேனி அடியவர்க்கு மெய்யனே அயிந்தை வாழும் மஞ்செனவே அருள் பொழியும் வள்ளலே நின் வடிவழகு மறவாதார் பிறவாதாரே
மையுமா கடலும் மயிலும் மாமழையும் மணிகளும் குவளையும் கொண்ட மெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோர் ஈசனே நீசனேன் அடைந்தேன் கையும் ஆழியுமாய்க் களிறு காத்தவனே காலனார் தமரெனைக் கவராது ஐயனே! வந்தன்றஞ்சல் என்றருள் தென் அயிந்தை மாநகர் அமர்ந்தானே
மஞ்சுலாவு சோலைசூழ் அயிந்தை மன்னு மன்னுசீர் வரையெடுத்து நிரையளித்த மாசில் வாசுதேவனே செஞ்சொலன்பர் சிந்தை கொண்டு தீதிலாத தூதனாய்த் தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ தெய்வ நாயக வெஞ்சொலாளர் கால தூதர் வீசு பாசம் வந்தென்மேல் விழுந்தழுந்தி யான் அயர்ந்து வீழ்வதற்கு முன்ன நீ அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்றளிக்க வேண்டும் அச்சுதா அடியவர்க்கு மருளியக்கும் அடியவர்க்கு மெய்யனே
பொருத்தம் பொருந்தலும் போகும் தவற்றுடன் பொய்ம் மதிமேல் விருத்தம் கலித்துறை மேவும் அழல் மதம் வேறினியென் திருத்தமனத்தினில் சேரா எமைத் தெய்வநாயக நின் வருத்தம் பொறா அருளால் மன் அடைக்கலம் கொண்டருளே
அந்தமில்சீர் அயிந்தைநகர் அமர்ந்த நாதன் அடியிணைமேல் அடி உரையால் ஐம்பதேத்திச் சிந்தை கவர் பிராகிருதம் நூறு கூறிச் செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் பரவு நவமணிமாலை இவையும் சொன்னேன் முந்தை மறை மொழிய வழி மொழி நீயென்று முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேன் நானே