Skip to the text
மும்மணிக்கோவை

மும்மணிக்கோவை

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

அகவல், வெண்பா, கலித்துறை என மூன்று வகைப் பாக்களை ஒன்றாகக் கோத்த கோவை நூல். "மொழிவார் மொழிவன மும்மறையாகும்" — சொல்பவர் சொல்வன மும்மறையாகும் என்று தொடங்கி, இன்னமுதக் கடலாய் நிற்பவனைப் பாடுகிறது. மூன்று மணிகளை ஒரு மாலையில் கோர்ப்பதுபோன்ற யாப்பு அமைப்பே இதன் பெயருக்குக் காரணம்.

1

அருள்‌ தரும்‌ அடியவர்பால்‌ மெய்யை வைத்துத்‌ தெருள்‌ தர நின்ற தெய்வநாயக! நின்‌ அருளெனும்‌ சீரோர்‌ அரிவையானதென இருள்‌ செக எமக்கோர்‌ இன்னொளி விளக்காய்‌ மணிவரை அன்ன நின்‌ திருவுருவில்‌ அணியமர்‌ ஆகத்தலங்கலாய்‌ இலங்கி நின்படிக்கெல்லாந்‌ தன்படி ஏற்க அன்புடன்‌ நின்னோடவதரித்தருளி வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து ஈண்டிய வினைகள்‌ மாண்டிட முயன்று தன்னடி சேர்ந்த தமருனை அணுக நின்னுடன்‌ சேர்ந்து நிற்குநின்‌ திருவே

2

திருமால்‌ அடியவர்க்கு மெய்யனார்‌ செய்ய திருமாமகள்‌ என்றும்‌ சேரும்‌ திருமார்பில்‌ இம்‌ மணிக்கோவை உடன்‌ ஏற்கின்றார்‌ என்றன்‌ இம்‌ மும்மணிக்கோவை மொழி

3

மொழிவார்‌ மொழிவன மும்மறையாகும்‌ அயிந்தையில்‌ வந்து இழிவார்‌ இழிகவென்று இன்னமுதக்‌ கடலாகி நின்ற விழிவார்‌ அருள்‌ மெய்யர்‌ மெல்லடி வேண்டிய மெல்லியல்‌ மேல்‌ பொழிவார்‌ அனங்கர்‌ தம்‌ பூங்கரும்புந்திய பூ மழையே

4

மழையில்‌ எழுந்த மொக்குள்‌ போல்‌ வையம்‌ அழியவொன்றழியா அடியவர்‌ மெய்ய அருமறையின்‌ பொருள்‌ ஆய்ந்தெடுக்குங்கால்‌ திருவுடன்‌ அமர்ந்த தெய்வநாயக நின்‌ திருத்‌ தனக்கு நீ திருவாகி இந்து தன்‌ நிலவுடன்‌ இலங்கு தன்மையினை நந்துதல்‌ இல்லா நல்‌ விளக்காகி அந்தமில்‌ அமுத ஆழியாய்‌ நிற்றி பாற்கடல்‌ தன்னில்‌ பன்மணி அன்ன சீர்க்கணம்‌ சேர்ந்த சீலம்‌ எல்லையிலை அடியவர்‌ பிழைகள்‌ நின்‌ கருத்தடையாது அடைய ஆண்டருளும்‌ அரசனும்‌ நீயே உயர்ந்த நீ உன்னை எம்முடன்‌ கலந்தனை அயிந்தை மாநகரில்‌ அமர்ந்தனை எமக்காய்ச்‌ சித்திர மணியெனத்‌ திகழுமன்னுருவில்‌ அத்திரம்‌ அணியென அனைத்தும்‌ நீ அணுகி விண்ணுள்‌ அமர்ந்த வியன்‌ உருவதனால்‌ எண்ணிய ஈரிரண்டுருக்களும்‌ அடைதி பன்னிரு நாமம்‌ பலபல உருவாய்‌ இன்னுருவெங்கும்‌ எய்தி நீ நிற்றி மீனோடாமை கேழல்‌ கோளரியாய்‌ வானோர்‌ குறளாய்‌ மழுப்படை முனியாய்ப்‌ பின்னும்‌ இராமர்‌ இருவராய்ப்‌ பாரில்‌ துன்னிய பரம்‌ தீர்‌ துவரை மன்னனுமாய்க்‌ கலி தவிர்த்தருளும்‌ கற்கியாய்‌ மற்றும்‌ மலிவதற்கெண்ணும்‌ வல்வினை மாற்ற நானா உருவம்‌ கொண்டு நல்‌ அடியோர்‌ வானார்‌ இன்பமிங்குறவருதி ஓருயிர்‌ உலகுக்கென்னு நீ திருவோடு ஏர்‌ உயிரெல்லாம்‌ ஏந்தி இன்புறுதி யாவரும்‌ அறியாதெங்கு நீ கரந்து மேவுருச்‌ சூழ்ந்து வியப்பினால்‌ மிகுதி கொண்டிட எம்மை அடைக்கலம்‌ உலகில்‌ கண்டிலம்‌ கதி உனையன்றி மற்றொன்றும்‌ பல்வகை நின்ற நின்படி அனைத்தினும்‌ தொல்வகை காட்டும்‌ துணிந்து தூமறையே

5

தூமறையின்‌ உள்ளம்‌ துளங்காத்‌ துணிவு தரும்‌ ஆமறிவால்‌ ஆர்ந்தடிமை ஆகின்றோம்‌ பூமறையோன்‌ பாராயணத்தில்‌ பணியும்‌ அயிந்தை நகர்‌ நாராயணனார்க்கே நாம்‌

6

ஆர்க்கும்‌ கருணை பொழிவான்‌ அயிந்தையில்‌ வந்தமர்ந்த கார்க்கொண்டலைக்‌ கண்ட காதல்‌ புனமயில்‌ கண்பனியா வேர்க்குமுகிழ்க்கும்‌ விதிர்விதிர்க்கும்‌ வெள்கி வெவ்வுயிர்க்கும்‌ பார்க்கின்றவர்க்கிது நாம்‌ என்கொல்‌ என்று பயிலுவமே

7

பயின்‌ மதி நீயே பயின்‌ மதி தருதலின்‌ வெளியும்‌ நீயே வெளியுற நிற்றலின்‌ தாயும்‌ நீயே சாயை தந்துகத்தலின்‌ தந்தையும்‌ நீயே முந்தி நின்றளித்தலின்‌ உறவும்‌ நீயே துறவாதொழிதலின்‌ உற்றதும்‌ நீயே சிற்றின்பம்‌ இன்மையின்‌ ஆறும்‌ நீயே ஆற்றுக்கருள்‌ தலின்‌ அறமும்‌ நீயே மறநிலை மாய்த்தலின்‌ துணைவனும்‌ நீயே இணை இலையாதலின்‌ துய்யனும்‌ நீயே செய்யாள்‌ உறைதலின்‌ காரணம்‌ நீயே நாரணன்‌ ஆதலின்‌ கற்பகம்‌ நீயே நற்பதம்‌ தருதலின்‌ இறைவனும்‌ நீயே குறை ஒன்றிலாமையின்‌ இன்பமும்‌ நீயே துன்பம்‌ துடைத்தலின்‌ யானும்‌ நீயே யென்னுள்‌ உறைதலின்‌ எனதும்‌ நீயே உனதன்றி இன்மையின்‌ நல்லாய்‌ நீயே பொல்லாங்கிலாமையின்‌ வல்லாய்‌ நீயே வையமுண்டுமிழ்தலின்‌ எங்ஙனமாகுமெய்ய நின்‌ இயல்பெ அங்ஙனேயொக்க அறிவதாரணமே

8

ஆரணங்கள்‌ தேட அயிந்தைநகர்‌ வந்துதித்த காரணராய்‌ நின்ற கடல்வண்ணர்‌ நாரணனார்‌ இப்படிக்குமிக்கன்றெடுத்த பாதம்‌ கழுவ மெய்ப்படிக்கம்‌ ஆனது பொன்‌ வெற்பு

9

வெற்புடனொன்றி அயிந்தையில்‌ வெவ்வினை தீர்‌ மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை கேட்டு அருள்‌ வேண்டி நிற்கப்‌ பற்பில்‌ அமர்ந்த செய்யாள்‌ படிகாட்டிய பண்புடை எம்‌ வில்‌ புருவக்கொடிக்கோர்‌ விலங்கா மயல்‌ பெற்றனமே

10

பெற்றனை நீயே மற்றுளதெல்லாம்‌ பெறுவது நின்னை உறுவது கொள்வார்‌ நின்னால்‌ அன்றி மன்னார்‌ இன்பம்‌ நின்‌ பொருட்டு நீ என்‌ பொருட்டிலை நின்‌ உருநின்று மின்‌ உருத்தோன்றும்‌ நின்‌ தனக்கு நிகர்‌ நின்னடி அடைவார்‌ நின்‌ பால்‌ அன்றி அன்பால்‌ உய்யார்‌ வாரணம்‌ அழைக்க வந்த காரணனே