கருமமு ஞானமும் கொண்டெழும் காதலுக்கோர் இலக்கென்று அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம் திருமகளோடு வரும் திருமால் என்றுதான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே
கீதார்த்தசங்கிரகம்
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
பகவத் கீதையின் பொருளை இருபத்து மூன்று பாசுரங்களில் தொகுக்கும் நூல். "கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு" — கருமயோகமும் ஞானயோகமும் பக்தியை நோக்கியே செல்கின்றன என்று மூன்று பிரிவுகளின் அமைப்பைத் தெளிவுபடுத்துகிறது. கீதையின் முழு அமைப்பையும் தமிழில் சுருக்கமாகச் சொல்லும் அரிய முயற்சி இது.
உகவை அடைந்த உறவுடையார் பொரலுற்ற அந்நாள் தகவுடன் அன்பு கரைபுரளத் தருமத்தளவில் மிக உளம் அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கோர் நகையுடன் உண்மையுரைக்க அமைந்தனன் நாரணனே
உடலம் அழிந்திடும் உள்ளுயிர் ஒன்றழியாதெனைப்போல் விடுமது பற்று விடாததடைத்த கிரிசைகளே கடுக உனக்குயிர் காட்டு நினைவு அதனால் உளதாம் விடு மயல் என்று விசயனைத் தேற்றினன் வித்தகனே
சங்கம் தவிர்ந்து சகம் சதிர் பெற்ற தனஞ்சயனே பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள் நங்கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்றார் எங்கும் அறிவர்களே என்று நாதன் இயம்பினனே
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் துறவாக் கிரிசைகள் தூய்மதி தன்னால் துலங்குகையும் இறவா உயிர் நன்னிலை கண்டிடும் உலகின் நிலையும் மறைவாழு மாயவன் நேயனுக்-கன்றறி-வித்தனனே
கண்டெளி தாம் கருமம் உயிர்காட்டக் கடுகுதலும் மண்டி அதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும் கண்டறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும் வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே
யோக முயற்சியும் யோகில் சமநிலை நால்வகையும் யோகின் உபாயமும் யோகுதன்னால் வரும் பேறுகளும் யோகுதனில் தன் திறமுடை யோகுதன் முக்கியமும் நாகணை யோகி நவின்றனன் நன்முடி வீரனுக்கே
தான் நின்ற உண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும் தானன்றி மாயைதனைத் தவிர்ப்பான் விரகற்றமையும் மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானிதன் மேன்மைகளும் தேன் நின்ற செங்கழலான் தெளிவித்தனன் பார்த்தனுக்கே
ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும் பேராது தன் கழற்கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும் சோராதுகந்தவர் தூமதி கொள்வதும் செய்வனவும் தேரா விசயனுக்குத் திருநாரணன் செப்பினனே
தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையும் பன்மேனி நண்ணினன்பால் பிரியா அன்பர் ஆசைகளும் புன்மேனி விண்ணவர்பால் புரியாத தன் பத்தியையும் நன்மேனி நாரணன் தான் நரனுக்கு நவின்றனனே
எல்லையில்லாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும் எல்லையில்லாத விபூதி எலாம் தனதானமையும் எல்லையில் பத்தி தனை எழுவிக்கத் திருவருளால் எல்லையில் ஈசன் இயம்பினன் இந்திரன் மைந்தனுக்கே
எல்லாம் தனக்குருவாய் இலங்கும்வகை தானுரைத்துச் சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற வில்லாளனுக்கன்று மெய்க்கண் கொடுத்திது வேறுமுண்டோ நல்லார்கள் காண்பாரென்று நவின்றான் நங்கள் நாயகனே
தன்கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம் இன் குண சிந்தையும் ஈதறியார்க்கவ்வடிமைகளும் தன் கருமங்கள் அறியாதவர்க்கு இலகு நிலையும் தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே
ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார் ஞானம் பெறுவகையும் ஞானம் ஈன்ற உயிர்ப்பயனும் ஊன் நின்றதற்கடியும் உயிர் வேறிடும் உள் விரகும் தேன் நின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே
முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும் முக்குணமே அனைத்தும் வினை கொள்ள முயன்றமையும் முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்தளிப்பும் முக்குணம் அற்றபிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே
மூவெட்டிலும் அதின் மோகம் அடைந்த உயிர்களிலும் நாவெட்டெழுத்தொடு நல்வீடு நண்ணின நம்பரிலும் மேவெட்டு வன்குண விண்ணோர்களினும் விசயனுக்குத் தாவிட்டுலகளந்தான் தனை வேறென்று சாற்றினனே
ஆணை மறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர் கோணை மராத குணச்செல்வ நீ குறிக்கொள் மறையைப் பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும் காண் இதனால் விசயா என்று கண்ணன் இயம்பினனே
மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும் மறைபொருந்தும் நிலையும் வண் குணப்படி மூவகையும் மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையும் அம் மறை உமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கே
சத்துவ வீடுடை நற்கருமம் தான் உகந்தமையும் சத்துவமுள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும் சத்துவ நற்கிரிசைப் பயனும் சரணாகதியும் சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே
வன் பற்றறுக்குமருந்தென்று மாயவன் தான் உரைத்த இன்பக்கடல் அமுதாம் என நின்ற இக்கீதை தனை அன்பர்க்குரைப்பவர் கேட்பவர் ஆதரித்தோதும் அவர் துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே
தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம் மலர்மேல் மாதுற்ற மாயன் மருவ இன் கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மெளலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே