Skip to the text
சரமச்லோகச்சுருக்கு

சரமச்லோகச்சுருக்கு

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

சரமச்லோகத்தின் — கீதையின் இறுதி உபதேசத்தின் — பொருளைச் சொல்லும் பதினொரு பாசுரங்கள். கடலைக் கடந்து மதுரை வந்து, பாரதப் போரில் தேரோட்டியாய் நின்று உபதேசித்தவனை நினைவுகூர்கிறது. "அனைத்தையும் விட்டு என்னைச் சரணடை" என்னும் அவ்வொரு வாக்கியத்தின் ஆழத்தை இந்நூல் விரிக்கிறது. கேட்டவனுக்கு மட்டுமல்ல, கேட்கும் அனைவருக்கும் சொன்னது அது.

1

கல்லார்‌ அகலும்‌ கருமமும்‌ ஞானமும்‌ காதலும்‌ மற்று எல்லா நிலைகளுக்கேற்ப விதித்த கிரிசைகளும்‌ வல்லார்‌ முயல்க வலியிழந்தார்‌ என்‌ தனைத்‌ தொழுகென்று எல்லாத்‌ தருமம்‌ உரைத்தவன்‌ இன்னடி சேர்ந்தனமே

2

வெறுமை உணர்ந்தது முன்னிட்டு வேறங்கம்‌ இல்லையெனக்‌ குறியவன்‌ இன்னறவெட்டக்‌ குறித்திடும்‌ கோணை துறந்து உறுமயன்‌ அத்திரமென்னப்‌ பொறாநிலை ஓர்ந்திட ஓர்‌ அறநெறி அன்றுரைத்தான்‌ அழியா அறமாயினனே

3

வாரிதி விட்டு மலர்மகளோடு மதுரை வந்து பாரத வெஞ்சமர்‌ பார்மகள்‌ பாரம்‌ செகவுகந்து சாரதியாய்‌ முன்பு தூதனுமாய்த்‌ தளரும்‌ விசயன்‌ தேரதில்‌ நின்றவனைத்‌ தேற்றினான்‌ திறம்‌ ஆயினமே

4

தன்னருளால்‌ பெறும்‌ சாதனம்‌ சாதகன்‌ என்றிவற்றைத்‌ தன்னுடன்‌ எண்ணுதல்‌ நீங்கத்‌ தனித்தொரு சாதனமாய்ப்‌ பொன்‌ அருளோடும்‌ அப்பூமகளோடும்‌ புகழ நின்ற இன்னுரை ஈசனையே ஏகம்‌ எண்ண இசைந்தனமே

5

ஊனில்‌ இணைத்துழல்‌ விக்கும்‌ வினைக்‌ கடலுள்‌ விழுந்த யான்‌ எனதான குணங்கள்‌ எனக்கிசை நல்வழியும்‌ தான்‌ உதவித்‌ தனைத்‌ தந்திட நின்ற தனித்தருமம்‌ நான்‌ இனி வேறோர்‌ பரம்‌ நணுகாவகை நல்கியதே

6

கடுவினை நாம்பெறும்‌ பேற்றைத்‌ தகைந்தமை கண்டு நம்மேல்‌ தொடை விலகாமல்‌ இசைந்து ஒருகாலம்‌ துணிவுடனே உடைமை அடைக்கலமாக அடைக்கும்‌ உகப்பதனால்‌ அடையென என்றுரைத்தான்‌ அடைவித்தனன்‌ தன்னடியே

7

கானென்ற வேதங்கள்‌ காக்கும்‌ பரனென்று காட்ட நின்றோன்‌ தானென்றறியகிலார்க்கு அறிவிக்கும்‌ தனித்திறலோன்‌ வான்‌ ஒன்றினாரொடு மானிடன்‌ என்ன அவதரிப்பான்‌ நானென்ற நம்‌ திருமால்‌ நம்மை நற்பதம்‌ சேர்த்திடுமே

8

தன்னிலை காட்டித்‌ தனிமை உகந்து தனித்தகவால்‌ அன்னிலை தீர அடைக்கலம்‌ கொண்டு அடிசேர்த்திடவே பன்னிலை மூல எழுத்திலும்‌ பாண்டவன்‌ தேர்தனிலும்‌ முன்னிலை கொண்ட பிரான்‌ எம்மை முன்னிலை கொண்டனனே

9

காடுகளோ நரகோ கடிதாம்‌ கரளத்‌ திரளோ சூடுவிடா அனலோ தொலையா நிலை நள்ளிருளோ சாடுபடச்‌ சரணால்‌ அன்று சாடிய சாரதியார்‌ வீடு செய்வித்து நம்மை விடுவிக்கின்ற பாவங்களே

10

சென்றுயர்‌ வான்‌ அமர்ந்து அவ்வடியாருடன்‌ சேர்ந்திடவே இன்றெனில்‌ இன்று நாளை எனில்‌ நாளை இனிச்செறிந்து நின்ற நிலை நின்‌ அனைத்து வினையும்‌ நின்‌ விட்டகலக்‌ கன்றி விடுப்பன்‌ என்றான்‌ கருத்தால்‌ நம்மைக்‌ காத்திடுமே

11

அறிவும்‌ அனைத்தும்‌ இலா அடியோமை அடைக்கலம்‌ கொண்டு உறவென நின்றதெலாம்‌ உறவே நின்ற தான்‌ எமக்காய்‌ மறு பிறவித்‌ துயர்‌ வாராவகை மனம்‌ கொண்டகலா இறையவன்‌ இன்னருளால்‌ எங்கள்‌ சோகம்‌ தவிர்த்தனனே