Skip to the text
திருமந்திரச்சுருக்கு

திருமந்திரச்சுருக்கு

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

திருமந்திரத்தின் — எட்டெழுத்தின் — பொருளைச் சுருக்கமாக விளக்கும் பத்துப் பாசுரங்கள். சொற்களின் பொருளை மட்டுமல்ல, அது கோரும் வாழ்க்கை முறையையும் சேர்த்துச் சொல்கிறது. மந்திரம் என்பது சொல்வதற்கு அல்ல, ஆவதற்கு என்பது இதன் நிலைப்பாடு.

1

நாவலர்‌ மறை நாலொன்றும்‌ நலந்திகழ்‌ மறை ஒன்றோராது ஆவலிப்பலைக்கு மோகத்து அழுந்தி நின்றலமர்கின்றீர்‌ தூவலம்‌ புரியாம்‌ ஒன்றில்‌ துவக்கமாம்‌ வண்ணம்‌ ஒன்றால்‌ காவலென்றகரத்தவ்வாய்க்‌ கருத்துறக்‌ காண்மினீரே

2

இளக்கமில்‌ மயக்கம்‌ தன்னால்‌ எனக்கு யான்‌ உரியன்‌ என்னும்‌ களக்கருத்தொன்றே கொண்டு கடு நரகடைந்து நின்றீர்‌ விளக்கும்‌ அவ்வெழுத்தின்‌ நாலாம்‌ வேற்றுமை ஏற்றி வாங்கித்‌ துளக்கமில்‌ அடிமை பூண்டு தூயராய்‌ வாழ்மினீரே

3

அப்பொருள்‌ இகந்து மற்றும்‌ அழித்தழிந்தெழுவார்‌ தாளில்‌ இப்பொருள்‌ இகந்தவன்பால்‌ இரங்கினிர்‌ வணங்கி வீழ்ந்தீர்‌ உப்பொருள்‌ உள்ளி மற்றோர்‌ உயிர்‌ தனக்குரிமை மாற்றி எப்பொருள்‌ பயனும்‌ ஈதென்று எண்ணினிர்‌ எழுமினீரே

4

என்றும்‌ ஓர்‌ ஏதமின்றி இரவியும்‌ ஒளியும்‌ போல ஒன்றி நின்றுலகளிக்கும்‌ உகம்‌ இகந்தடிமை வைத்தீர்‌ ஒன்று மூன்றெழுத்தாய்‌ ஒன்றும்‌ ஒன்றில்‌ ஒன்றுடைய முன்னே ஒன்றிய இரண்டை உள்ளி உளர்‌ என உய்ம்மினீரே

5

தத்துவம்‌ அறுநான்கோடு தனியிறை அன்றி நின்ற சித்தினை உணராதென்றும்‌ திரள்‌ தொகையாகி நின்றீர்‌ மத்தனைத்‌ தனிவிடாதே மையிலா விளக்கமாக்கி உத்தமன்‌ அடிமையான உயிர்நிலை உணர்மினீரே

6

தனதிவை அனைத்தும்‌ ஆகத்‌ தான்‌ இறையாகும்‌ மாயன்‌ உனதெனும்‌ உணர்த்தி தாராது உமக்குநீர்‌ உரிமை உற்றீர்‌ எனதிவை அனைத்தும்‌ யானே இறையெனும்‌ இரண்டும்‌ தீர மந எனும்‌ இரண்டின்‌ மாறா வல்வினை மாற்றுவீரே

7

அழிவிலா உயிர்கட்கெல்லாம்‌ அருக்கனாய்‌ அழியாவீசன்‌ வழியலா வழிவிலக்கும்‌ மதியெழ மாய மூர்த்தி வழுவிலாதிவை அனைத்தும்‌ வயிற்றில்‌ வைத்துமிழ்ந்த மாலை நழுவிலா நாரவாக்கில்‌ நாடி நீர்‌ நணுகுவீரே

8

வயனம்‌ ஒன்றறிந்துரைப்பார்‌ வன்கழல்‌ வணங்க வெள்கி நயனம்‌ உள்ளின்றி நாளும்‌ நள்ளிருள்‌ நண்ணி நின்றீர்‌ அயனம்‌ இவ்வனைத்துக்கும்‌ தான்‌ அவை தனக்கயனம்‌ என்னப்‌ பயனுமாய்ப்‌ பதியுமான பரமனைப்‌ பணிமினீரே

9

உயர்ந்தவர்‌ உணர்ந்த வாற்றால்‌ உவந்த குற்றேவலெல்லாம்‌ அயர்ந்து நீர்‌ ஐம்புலங்கட்கு அடிமை பூண்டலமர்கின்றீர்‌ பயந்திவை அனைத்தும்‌ ஏந்தும்‌ பரமனார்‌ நாமம்‌ ஒன்றில்‌ வியந்த பேரடிமை தோற்றும்‌ வேற்றுமை மேவுவீரே

10

எண்‌ திசை பரவும்‌ சீரோர்‌ எங்களுக்கீந்தவெட்டில்‌ உண்டவாறுரைப்பார்‌ போல ஒன்பது பொருள்‌ உரைத்தோம்‌ பண்டுநான்‌ மறையோர்‌ காக்கும்‌ மாநிதி இவை அனைத்தும்‌ கண்டவர்‌ விள்ளார்‌ விள்ளக்‌ கருதுவார்‌ காண்கிலாரே