பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதமென்று நன்னிற நாமம் படை திக்கி யாவையும் நாமறியத் தென்னந் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை ஓதி ஈந்தான் மின்னுறு நூலமர் வேங்கடநாதன் நம் தேசிகனே கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி ஏர்கொண்ட கீர்த்தி இராமாநுசன் தன் இணையடிசேர் சீர்கொண்ட தூப்புல் திருவேங்கடாரியன் சீர்மொழியை ஆர்கொண்டு போற்றினும் அம்மால் பதத்தை அடைவிக்குமே கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன்மலைபோல் வாசிமிகுத்தெனை மங்காமல் காக்கும் மறையதனால் ஆசைமிகுத்த அயன் மக வேதியில் அற்புதனே
பன்னிருநாமம்
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
கேசவன் முதல் தாமோதரன் வரையிலான பன்னிரு திருநாமங்களைப் பாடும் நூல். ஒவ்வொரு நாமத்திற்கும் உரிய நிறம், ஆயுதம், உடலின் இடம் ஆகியவற்றை வரிசையாகச் சொல்கிறது. ஊர்த்துவ புண்டரம் அணியும்போது சொல்லப்படும் நாமங்களின் பொருளை இது விளக்குகிறது. நாள்தோறும் செய்யும் ஒன்றை அறிந்து செய்யச் செய்யும் நூல்.
நாரணனாய் நல் வலம்புரி நாலும் உகந்தெடுத்தும் ஊரணி மேகம் எனவே உதரமும் மேற்கு நின்றும் ஆரணநூல் தந்தருளால் அடைக்கலம் கொண்டருளும் வாரணவெற்பில் மழை முகில்போல் நின்ற மாயவனே
மாதவ நாமமும் வான்கதை நான்கு மணிநிறமும் ஓதும் உறைப்படி ஏந்தி உரத்திலுமேலும் அல்கிப் போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்தளிக்கும் தூதனும் நாதனுமாய தொல் அத்திகிரிச் சுடரே
கோவிந்தன் என்றும் குளிர்மதியாகிக் கொடியவரை ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட்கழுத்து நின்று மேவும் திருவருளால் வினைதீர்த்தெனை ஆண்டருளும் பூவன் தொழ அத்திமாமலை மேல் நின்ற புண்ணியனே
விட்டு வலவயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று மட்டவிழ் தாமரைத் தாது நிறங்கொண்ட மேனியனாய்த் தொட்டகலப்பைகள் ஈரிரண்டாலும் துயர் அறுக்கும் கட்டெழில் சோலைக் கரிகிரிமேல் நின்ற கற்பகமே
மதுசூதனன் என் வலப்புயம் தென் கிழக்கென்றிவற்றில் பதியாய் இருந்து பொன் மாதுறை பங்கய வண்ணனுமாய் முது மாவினைகள் அறுக்கும் முயலங்கள் ஈரிரண்டால் மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழைமுகிலே
திருவிக்கிரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடைவாள் உருவிக் கரங்களில் ஈரிரண்டேந்தி வலக்கழுத்தும் செருவிக்கரமத்தரக்கர் திக்கும் சிறந்தாளுமிறை மருவிக் கரிகிரிமேல் வரம் தந்திடும் மன்னவனே
வாமனன் என்றன் வாமோதரமும் வாயுவின் திசையும் தாமம் அடைந்து தருண அருக்கனிறத்தனுமாய்ச் சேமமரக்கலம் செம்பவி ஈரிரண்டால் திகழும் நாமங்கை மேவிய நான்முகன் வேதியில் நம்பரனே
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் ஏரார் இடங்கொண்டு இலங்குவெண் தாமரை மேனியனாய்ப் பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயமறுக்கும் ஆராவமுது அத்திமாமலை மேல் நின்ற அச்சுதனே
என் இருடிகேசன் இறை கீழ் இடக்கழுத்தென்றிவற்றில் நன்னிலை மின்னுருவாய் நாலு முற்கரம் கொண்டளிக்கும் பொன் அகில் சேர்ந்தலைக்கும் புனல் வேகை வடகரையில் தென்னன் உகந்து தொழும் தேனவேதியர் தெய்வம் ஒன்றே
எம் பற்பநாபனும் என்பின் மனம் பற்றி மன்னிநின்று வெம்பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய்யுருவாய் அம்பொன் கரங்களில் ஐம்படை கொண்டஞ்சல் என்றளிக்கும் செம்பொன் திருமதிள் சூழ் சிந்துராசலச் சேவகனே
தாமோதரன் என்றன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு ஆமோதரம் என ஆகத்தின் உட்புறம் பின் கழுத்தும் தாம் ஓர் இளங்கதிரோன் என என்னுள் இருள் அறுக்கும் மாமோக மாற்றும் மதிள் அத்தியூரின் மரகதமே
கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் பத்திக்குறுதுணை பன்னிருநாமம் பயில்பவர்க்கு முத்திக்கு மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும் தித்திக்கும் எங்கள் திருவத்தியூரரைச் சேர்பவர்க்கே