மன்னு திரு மந்திரத்தின் வாழ் துவயத்தின் பொருளும் துன்னுபுகழ்க் கீதைதனில் சொன்னவெண்ணான்கின் பொருளும் அன்னவயல் கச்சி அருளாளர் திருச்சின்ன ஒலி இன்னபடி என்றுரைத்தான் எழில் வேதாந்தாரியனே ஏகாந்த மூன்றும் எழிலால் உரைசெய்து மாகாந்தம் செய்தருளும் வள்ளலாய்ச்-சாகாந்த தேசிகனாம் தூப்புல் திருவேங்கடேச குரு வாசகமே எங்களுக்கு வாழ்வு பரிச்சின்னமான இருநாலெழுத்தின் பல்வண்மை எலாம் விரிச்சு நலம்பெறவோதவல்லோர்க்கிந்த மேதினிக்கே மரிச்சின்ன மீளப்பிறவாமல் வாழ்விக்கும் மால் வரதர் திருச்சின்ன ஓசையின் இனிமை உண்டோ மற்றைத் தேவருக்கே ஈருலகைப் படைக்க எண்ணி இருந்தார் வந்தார் எழில்மலரோன் தன்னையன்றே ஈன்றார் வந்தார் மாருத மண்ணீராகு மாயோர் வந்தார் வானொடெரிதாம் ஆகும் மறையோர் வந்தார் சூரியர்கள் தம்முடன் துலங்கு தூயோர் வந்தார் சுரர்களுக்கன்றமுதருள் சுந்தரனார் வந்தார் வாரிதிசூழ் வையகம் வாழ்வித்தார் வந்தார் வண்மையுடன் வரம் தருவார் வந்தார் தாமே
திருச்சின்னமாலை
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
"அனைத்துலகும் காக்கும் அருளாளர் வந்தார்; அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்" — கோயில் புறப்பாட்டின்போது சின்னம் ஊதி அறிவிக்கும் மரபில் அமைந்த நூல். "வந்தார்" என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அறிவிப்பே இதன் இயல்பு. வருகையை அறிவிப்பதே வழிபாடாகும் அரிய வடிவம் இது.
அருமறையை ஊழிதனில் காத்தார் வந்தார் அதுதன்னை அன்றயனுக்களித்தார் வந்தார் தருமவழி அழியாமல் காப்பார் வந்தார் தாமரையாளுடன் இலங்குந் தாதை வந்தார் திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார் மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார் வானேற வழிதந்தார் வந்தார் தாமே
அனைத்துலகும் காக்கும் அருளாளர் வந்தார் அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார் தினைத்தனையும் திருமகளை விடாதார் வந்தார் தேசொத்தார் மிக்காரும் இல்லார் வந்தார் நினைக்க நமக்கின்னறிவு தந்தார் வந்தார் நிலைநின்ற உயிர்தோன்ற நினைந்தார் வந்தார் எனக்கிவர் நானிவர்க்கென்ன இனியார் வந்தார் எழுத்தொன்றில் திகழ நின்றார் வந்தார் தாமே
நாம் வணங்கத் தாமிணங்கா நிற்பார் வந்தார் நம்மை அடைக்கலம் கொள்ளும் நாதர் வந்தார் நாம் எமக்காம் வழக்கெல்லாம் அறுத்தார் வந்தார் நமக்கிதுவென்றுரையாமல் வைத்தார் வந்தார் சேமமெண்ணி எம்மை அன்பர்க்கடைத்தார் வந்தார் செழுந்தகவால் திண் சரணாம் ஈசர் வந்தார் தாமனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார் தமக்கேயாய் எமைக்கொள்வார் வந்தார் தாமே
உலகெல்லாம் உள்ளே வைத்துமிழ்ந்தார் வந்தார் உலகுடம்பாய்த் தாம் உயிராய் நின்றார் வந்தார் அலை கடலாய் ஆனந்தம் அடைந்தார் வந்தார் அளவில்லா அருளாழிப் பெருமாள் வந்தார் திலகமெனும் திருமேனிச் செல்வர் வந்தார் செழுங்குணங்கள் இருமூன்றும் உடையார் வந்தார் இலகுசுடர் முழுநலமாம் இனியார் வந்தார் எல்லார்க்கும் கதியானார் வந்தார் தாமே
அருளாலே விலங்கிரண்டும் அழிப்பார் வந்தார் அஞ்சிறையைக் கழித்தருளும் அன்பர் வந்தார் மருள் வாரா வகை நம்மைக்காப்பார் வந்தார் வானேற வழிநடத்தி வைப்பார் வந்தார் தெருளாரும் தெளிவிசும்பு தருவார் வந்தார் திண் கழல்கீழ் வாழநமக்கருள்வார் வந்தார் பெருவானில் அடிமை நம்மைக் கொள்வார் வந்தார் பிரியாமல் காத்தளிப்பார் வந்தார் தாமே
அகலகிலாத் திருமகளார் அன்பர் வந்தார் அடியிரண்டும் ஆறாகத் தந்தார் வந்தார் புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார் பொன்னுலகில் திருவுடனே திகழ்வார் வந்தார் அகிலமெலாம் ஆனந்தம் ஆனார் வந்தார் அடியிணைக்கீழ் வைத்தடிமை கொள்வார் வந்தார் பகல் நடுவே இரவழைக்க வல்லார் வந்தார் பகலொன்றாய் இரவழித்தார் வந்தார் தாமே
தருமன் விடத்தாந் தூது போனார் வந்தார் தரணிபொறாத் திண் பாரந் தவிர்த்தார் வந்தார் அருமறையின் பொருள் அனைத்தும் விரித்தார் வந்தார் அஞ்சின நீ என்னையடை என்றார் வந்தார் தருமமெலாந் தாமாகி நிற்பார் வந்தார் தாமே நம் வினையனைத்தும் தவிர்ப்பார் வந்தார் பரமெனது நீ புலம்பல் என்றார் வந்தார் பார்த்தனுக்குத் தேரூர்ந்தார் வந்தார் தாமே
வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார் வந்தார் மல்லர் மதகரிமாள மலைந்தார் வந்தார் கஞ்சனைப்போர் கடும் சினத்தால் கடிந்தார் வந்தார் கண்ணுதல் முன் வாணன் தோள் கழித்தார் வந்தார் வெஞ்சொல் தர வீடுகொடுத்துகந்தார் வந்தார் விலக்கில்லா வழிநடத்த விரைந்தார் வந்தார் பஞ்சவரைப் பலவகையும் காத்தார் வந்தார் பாஞ்சாலி குழல் முடித்தார் வந்தார் தாமே
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் ஆனைபரிதேரின் மேல் அழகர் வந்தார் கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார் கருதவரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார் முத்திமழை பொழியும் முகில்வண்ணர் வந்தார் மூலமென ஓலமிட வல்லார் வந்தார் உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார் உம்பர்தொழும் கழலுடையார் வந்தார் தாமே
மறைத்தலையில் இசை எழுத்தில் வணங்கும் வாக்கில் மந்திரத்தில் நாலெழுத்தாம் திருநாமத்தில் நிறைத்திலகு வேற்றுமையில் இரண்டாம் ஒன்றில் நெடுமால் தன் கீதையெலாம் நிறைந்த சொல்லில் உறைத்தவர் கண்டுரைத்த பொருளான எல்லாம் உயர்விரத அருளாளப் பெருமாள் தேசின் திறத்தில் இயை திருச்சின்னமாலை பத்தும் செவிக்கினிதாம் சிற்றின்பம் இசையாதார்க்கே