Skip to the text
பெரிய திருமொழி

2-7. திவளும்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

வெண்மதி போன்ற திருமுகத்தையுடைய திருமகள் நின் மார்பில் இருப்பதைச் சொல்லித் தொடங்கும் பதிகம். கடலமுதில் தோன்றியவள் அவன் திருமார்பையே இடமாகக் கொண்டிருப்பதை ஆழ்வார் மீண்டும் மீண்டும் நினைவுகூர்கிறார். இறைவனை அணுகும்போது தாயாரின் முன்னிலை எப்போதும் உண்டு என்பதே இதன் உட்கருத்து.

பெரிய திருமொழி 2-7 - திவளும்‌ (திருவிடவெந்தை - தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ ஆற்றாமை கண்ட தாய்‌ இரங்கும்‌ பாசுரம்‌)

1108

திவளும்‌ வெண்மதி போல்‌ திருமுகத்தரிவை செழுங்கடல்‌ அமுதினில்‌ - பிறந்த அவளும்‌ நின்னாகத்திருப்பதும்‌ அறிந்தும்‌ ஆகிலும்‌ ஆசை விடாளால்‌ குவளையங்‌ கண்ணி கொல்லியம்‌ பாவை சொல்லு நின்‌ தாள்‌ நயந்திருந்த இவளை உன்‌ மனத்தால்‌ என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை - எந்தை பிரானே!

1109

துளம்படு முறுவல்‌ தோழியர்க்கு அருளாள்‌ துணை முலை சாந்து கொண்டு - அணியாள்‌ குளம்படு குவளைக்‌ கண்ணிணை எழுதாள்‌ கோல நல்மலர்‌ குழற்கு - அணியாள்‌ வளம்படு முந்நீர்‌ வையம்‌ முன்‌ அளந்த மாலென்னும்‌ மாலின மொழியாள்‌ இளம்படி இவளுக்கு என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை - பிரானே!

1110

சாந்தமும்‌ பூணும்‌ சந்தனக்‌ குழம்பும்‌ தடமுலைக்கு அணியிலும்‌ தழலாம்‌ போந்த வெண்‌ திங்கள்‌ கதிர்‌ சுட மெலியும்‌ பொரு கடல்‌ புலம்பிலும்‌ - புலம்பும்‌ மாந்தளிர்‌ மேனி வண்ணமும்‌ பொன்னாம்‌ வளைகளும்‌ இறை நில்லா - என்தன்‌ ஏந்திழை இவளுக்கு என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை பிரானே!

1111

ஊழியில்‌ பெரிதால்‌ நாழிகை என்னும்‌ ஒண்‌ சுடர்‌ துயின்றதால்‌ என்னும்‌ ஆழியும்‌ புலம்பும்‌ அன்றிலும்‌ உறங்கா தென்றலும்‌ தீயினிற்‌ கொடுதாம்‌ தோழியோ! என்னும்‌ துணைமுலை அரக்கும்‌ சொல்லுமின்‌ என்‌ செய்கேன்‌? - என்னும்‌ ஏழை என்‌ பொன்னுக்கு என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை - பிரானே!

1112

ஓதிலும்‌ உன்‌ பேர்‌ அன்றி மற்றோதாள்‌ உருகும்‌ நின்‌ திருவுரு நினைந்து ஊழியின்‌ காதன்மை பெரிது கையறவுடையள்‌ கயல்‌ நெடுங்கண்‌ துயில்‌ மறந்தாள்‌ பேதையேன்‌ பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள்‌ வள்ளி நுண்மருங்குல்‌ ஏதலர்‌ முன்னா என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை - பிரானே!

1113

தன்‌ குடிக்கு ஏதும்‌ தக்கவா நினையாள்‌ தடங்கடல்‌ நுடங்கெயிலிலங்கை வன்குடி மடங்க வாளமர்‌ தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும்‌ - மயங்கும்‌ மின்கொடி மருங்குல்‌ சுருங்க மேல்‌ நெருங்கி மென்முலை பொன்‌ - பயந்திருந்த என்கொடி இவளுக்கு என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை பிரானே!

1114

உளங்கனிந்திருக்கும்‌ உன்னையே பிதற்றும்‌ உனக்கன்றி எனக்கு - அன்பொன்று இலளால்‌ வளங்கனி பொழில்சூழ்‌ மாலிருஞ்சோலை மாயனே! என்று வாய்‌ வெருவும்‌ களங்கனி முறுவல்‌ காரிகை பெரிது கவலையோடு அவலம்‌ சேர்ந்திருந்த இளங்கனி இவளுக்கு என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை - பிரானே!

1115

அலங்கெழு தடக்கை ஆயன்‌ வாயாம்பற்கு அழியுமால்‌ என்‌ உள்ளம்‌ - என்னும்‌ புலங்கெழு பொருநீர்ப்‌ புட்குழி பாடூம்‌ போதுமோ நீர்மலைக்கு? என்னும்‌ குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடு இடை நெடு மழைக்‌ கண்ணி இலங்கெழில்‌ தோளிக்கு என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை - பிரானே!

1116

பொன்குலாம்‌ பயலை பூத்தன மெந்தோள்‌ பொருகயற்‌ கண்துயில்‌ - மறந்தாள்‌ அன்பினால்‌ உன்‌ மேல்‌ ஆதரம்‌ பெரிது இவ்வணங்கினுக்கு! உற்ற நோய்‌ - அறியேன்‌ மின்குலா மருங்குல்‌ சுருங்க மேல்‌ நெருங்கி வீங்கிய வனமுலையாளுக்கு என்கொலாம்‌? குறிப்பில்‌ என்‌ நினைந்திருந்தாய்‌? இடவெந்தை எந்தை - பிரானே!

1117

அன்னமும்‌ மீனும்‌ ஆமையும்‌ அரியும்‌ ஆய எம்‌ மாயனே! அருளாய்‌ என்னும்‌ இன்தொண்டர்க்கு இன்னருள்‌ புரியும்‌ இடவெந்தை எந்தை - பிரானை மன்னு மாமாட மங்கையர்‌ தலைவன்‌ மானவேல்‌ கலியன்‌ வாய்‌ ஒலிகள்‌ பன்னிய பனுவல்‌ பாடுவார்‌ நாளும்‌ பழவினை பற்றறுப்பாரே

அடிவரவு: திவளும்‌ துளம்‌ சாந்தம்‌ ஊழியில்‌ ஓதிலும்‌ தன்‌ உளம்‌ அலம்‌ பொன்‌ அன்னம்‌ திரிபுரம்‌