Skip to the text
பெரிய திருமொழி

2-5. பாராயது

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

உலகை உண்டு உமிழ்ந்த பவளத் தூண், கடலைக் கடைந்து அமுதம் தந்தவன், பூமியைக் கீண்டெடுத்த சீரான் — உவமைகளால் இறைவனை அடுக்கிச் செல்லும் பதிகம். ஒவ்வொரு பாசுரமும் "எம்மான்" என்று உரிமையுடன் அழைத்து முடிகிறது. தொலைவில் இருக்கும் பெருமையை அருகில் கொண்டுவரும் ஒரு சொல் அது.

பெரிய திருமொழி 2-5 - பாராயது (திருக்கடல்மல்லை 1)

1088

பாராயது உண்டு உமிழ்ந்த பவளத்‌ தூணைப்‌ படுகடலில்‌ அமுதத்தைப்‌ பரிவாய்‌ கீண்ட சீரானை எம்மானைத்‌ தொண்டர்‌ தங்கள்‌ சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை போரானைக்‌ கொம்பொசித்த போரேற்றினைப்‌ புணர்‌ மருதமிற நடந்த பொற்குன்றினை காரானை இடர்‌ கடிந்த கற்பகத்தைக்‌ கண்டது நான்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1089

பூண்டவத்தம்‌ பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்‌ பொய்ந்நூலை மெய்ன்ந்நூல்‌ என்று என்றும்‌ ஓதி மாண்டு அவத்தம்‌ போகாதே வம்மின்‌ எந்தை என்‌ வணங்கப்படுவானை கணங்கள்‌ ஏத்தும்‌ நீண்ட அத்தைக்‌ கருமுகிலை எம்மான்‌ தன்னை நின்றவூர்‌ நித்திலத்தைத்‌ தொத்தார்‌ சோலை காண்டவத்தைக்‌ கனல்‌ எரி வாய்ப்‌ பெய்வித்தானைக்‌ கண்டது நான்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1090

உடம்புருவில்‌ மூன்றொன்றாய்‌ மூர்த்தி வேறாய்‌ உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி விடம்‌ பருகு வித்தகனைக்‌ கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்‌ தடம்‌ பருகு கருமுகிலைத்‌ தஞ்சைக்‌ கோயில்‌ தவ நெறிக்கு ஓர்‌ பெரு நெறியை வையம்‌ காக்கும்‌ கடும்‌ பரி மேல்‌ கற்கியை நான்‌ கண்டு கொண்டேன்‌ அத்தக்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1091

பேய்த்‌ தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப்‌ பிணை மருப்பிற்‌ கருங்களிற்றைப்‌ பிணை மான்‌ நோக்கின்‌ ஆய்த்‌ தாயர்‌ தயிர்‌ வெண்ணெய்‌ அமர்ந்த கோவை அந்தணர்‌ தம்‌ அமுதத்தைக்‌ குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன்‌ தன்னைக்‌ கோகுலங்கள்‌ தளராமல்‌ குன்றம்‌ ஏந்திக்‌ காத்தானை எம்மானைக்‌ கண்டு கொண்டேன்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1092

பாய்ந்தானைத்‌ திரி சகடம்‌ பாறி வீழப்‌ பாலகனாய்‌ ஆலிலையில்‌ பள்ளி இன்பம்‌ ஏய்ந்தானை இலங்கொளி சேர்‌ மணிக்‌ குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்‌ தோள்‌ எம்மான்‌ தன்னை தோய்ந்தானை நிலமகள்‌ தோள்‌ தூதிற்‌ சென்று அப்‌ பொய்யறை வாய்ப்‌ புகப்பெய்த மல்லர்‌ மங்கக்‌ காய்ந்தானை எம்மானைக்‌ கண்டு கொண்டேன்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1093

கிடந்தானைத்‌ தடங்கடலுள்‌ பணங்கள்‌ மேவிக்‌ கிளர்‌ பொறியமறிதிரிய அதனின்‌ பின்னே படர்ந்தானைப்‌ படு மதத்த களிற்றின்‌ கொம்பு பறித்தானைப்‌ பாரிடத்தை எயிறு கீற இடந்தானை வளை மருப்பின்‌ ஏனமாகி இருநிலனும்‌ பெரு விசும்பும்‌ எய்தா வண்ணம்‌ கடந்தானை எம்மானைக்‌ கண்டு கொண்டேன்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1094

பேணாத வலி அரக்கர்‌ மெலிய அன்று பெருவரைத்‌ தோளிற நெரித்து அன்று அவுணர்‌ கோனை பூணாகம்‌ பிளவெடுத்த போர்‌ வல்லோனைப்‌ பொரு கடலுள்‌ துயில்‌ அமர்ந்த புள்ளூர்தியை ஊணாகப்‌ பேய்‌ முலை நஞ்சு உண்டான்‌ தன்னை உள்ளுவார்‌ உள்ளத்தே உறைகின்றானை காணாது திரிதருவேன்‌ கண்டு கொண்டேன்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1095

பெண்ணாகி இன்னமுதம்‌ வஞ்சித்தானைப்‌ பிறை எயிற்று அன்று அடலரியாய்ப்‌ பெருகினானை தண்ணார்ந்த வார்புனல்‌ சூழ்‌ மெய்யம்‌ என்னும்‌ தடவரை மேல்‌ கிடந்தானைப்‌ பணங்கள்‌ மேவி எண்ணானை எண்ணிறந்த புகழினானை இலங்கொளி சேர்‌ அரவிந்தம்‌ போன்று நீண்ட கண்ணானை கண்ணாரக்‌ கண்டு கொண்டேன்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1096

தொண்டாயார்‌ தாம்‌ பரவும்‌ அடியினானைப்‌ படி கடந்த தாளாளற்கு ஆளாய்‌ உய்தல்‌ விண்டானை தென்னிலங்கை அரக்கர்‌ வேந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச்‌ சரங்கள்‌ ஆண்டு பண்டாய வேதங்கள்‌ நான்கும்‌ ஐந்து வேள்விகளும்‌ கேள்வியோடு அங்கம்‌ ஆறும்‌ கண்டானை தொண்டனேன்‌ கண்டு கொண்டேன்‌ கடிபொழில்‌ சூழ்‌ கடல்மல்லைத்‌ தலசயனத்தே

1097

பட நாகத்தணைக்‌ கிடந்து அன்று அவுணர்‌ கோனைப்‌ பட வெகுண்டு மருதிடை போய்ப்‌ பழனவேலி தடமார்ந்த கடல்‌ மல்லைத்‌ தலசயனத்துத்‌ தாமரைக்‌ கண்‌ துயில்‌ அமர்ந்த தலைவர்‌ தன்னை கடமாரும்‌ கருங்களிறு வல்லான்‌ வெல்‌ போர்க்‌ கலிகன்றி ஒலி செய்த இன்பப்‌ பாடல்‌ திடமாக இவை ஐந்தும்‌ ஐந்தும்‌ வல்லார்‌ தீவினையை முதலரிய வல்லார்‌ தாமே

அடிவரவு: பாராயது பூண்டு உடம்பு பேய்‌ பாய்ந்தானை கிடந்தானை பேணாத பெண்‌ தொண்டாயார்‌ படம்‌ நண்ணாத