முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் ர் பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே
1-3. முற்ற மூத்து
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"முற்ற மூத்துக் கோல் துணையா" — முதுமையின் நிலையை ஆழ்வார் நேரடியாக வருணிக்கும் பதிகம். கோலூன்றி, முன்னடி பார்த்து, வளைந்து நடக்கும் உடல் தளர்வை ஒளிவுமறைவின்றிச் சொல்கிறார். அந்நிலை வருவதற்கு முன்பே இறைவனை அடைய வேண்டும் என்பதே இதன் அறிவுறுத்தல். அச்சுறுத்தலாக அல்ல, தெளிவான ஓர் எச்சரிக்கையாகவே இது ஒலிக்கிறது.
பெரிய திருமொழி 1-3 - முற்ற மூத்து (திருவதரி)
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி இது என்னப்பர் மூத்தவாறென்று இளையவர் ஏசா முன் மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே
உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடூங்கா முன் அறிதியாகில் நெஞ்சம்! அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே
பீளை சோரக் கண் இடங்கிப் பித்தெழ மூத்து இருமி தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவா முன் காளையாகிக் கன்று மேய்த்துக் குன்றெடுத்து அன்று நின்றான் வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே
பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க உரைத்து இருமி தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண்துழாயான் வதரி வணங்குதுமே
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயரா முன் அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே
பப்ப அப்பர் மூத்தவாறு பாழ்ப்பது சீத் திரளை ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று செப்பு நேர் மென்கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் வைப்பும் நங்கள் வாழ்வுமானான் வதரி வணங்குதுமே
ஈசி போமின் ஈங்கு இரேன்மின் இருமி இளைத்தீர் உள்ளம் கூசியிட்டீர் என்று பேசும் குவளையங் கண்ணியர் பால் நாசமான பாசம் விட்டு நல்நெறி நோக்கலுறில் வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதுமே
புலங்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்து உள்ளம் எள்கி கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன் அலங்கலாய தண்துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள்விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓராட்சி அறியோமே
அடிவரவு: முற்ற முதுகு உறிகள் பீளை பண்டு எய்த்த பப்ப ஈசி புலன்கள் வண்டு ஏனம்