கதிரவன் குண திசைச் சிகரம் வந்தணைந்தான் கன இருள் அகன்றது காலையம் பொழுதாய் மது விரிந்தொழுகின மாமலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலை கடல் போன்றுளதெங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
திருப்பள்ளியெழுச்சி
தொண்டரடிப்பொடியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
திருவரங்கனைத் துயில் எழுப்பும் பத்துப் பாசுரங்கள். கதிரவன் கீழ்த்திசைச் சிகரத்தை அடைந்துவிட்டான் என்று தொடங்கி, தேவர்களும் முனிவர்களும் வாயிலில் காத்திருக்கும் காலைக் காட்சியை விரிக்கிறார். "பள்ளியெழுந்தருளாயே" என்ற ஒரே வேண்டுதல் ஒவ்வொரு பாசுரத்திலும் திரும்பவும் ஒலிக்கிறது. இன்றும் கோயில்களில் விடியற்காலை சேவையாக இது ஒலிக்கிறது.
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக் கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ எழுந்தன மலரணைப் பள்ளி கொள் அன்னம் ஈன்பனி நனைந்த தம் இருஞ்சிறகுதறி விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயிறு உற அதன் விடத்தனுக்கு அனுங்கி அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
சுடரொளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி படரொளி பசுத்தனன் பனி மதி இவனோ பாயிறுள் அகன்றது பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடலெொளி திகழ் தரு திகிரியந்தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள் வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறே மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே க
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி கலந்தது குண திசைக் கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி புரவியோடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடித் தொழுவான் அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு ஏற்பனவாயின கொண்டு நன்முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான் ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ ர கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ துடி இடையார் சுரிகுழல் பிழிந்துதறித் துகில் உடுத்தேறினர் சூழ்புனல் அரங்கா தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்றருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Essence of pasuram 924
வானவர் வாயுறை வழங்க, கபிலை, ஒள்ளிய கண்ணாடி முதலிய படிமக்கலன்களைக் கொண்டு நல்முனிவர் இறைவனைக் காண வருகின்றனர். தும்புரு, நாரதர் புகுந்தனர்; கதிரவனும் ஒளி பரப்பித் தோன்றினான் என ஆழ்வார் விடியலை நிறைவு செய்கிறார். திருவாராதனத்திற்குரிய பரிகரங்களுடன் தேவர்களும் முனிவர்களும் அணிதிரளும் காட்சி இது.