தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் விற்றுவக்கோட்டம்மானே அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே
5. தருதுயரம்
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"நீ துயரம் தந்தாலும், உன் திருவடியன்றி எனக்கு வேறு அடைக்கலம் இல்லை" என்று ஆழ்வார் அறுதியிட்டுச் சொல்லும் பதிகம். தாய் அடித்தாலும் குழந்தை அவளையே பற்றிக்கொள்வது, நோய்வாய்ப்பட்டவன் மருந்தளிக்கும் மருத்துவனையே நம்புவது என ஒவ்வொரு பாசுரமும் ஓர் உவமையால் இதை விளக்குகிறது. துன்பம் வந்தால் விலகுவதல்ல, இன்னும் நெருங்குவதே பற்று என்பதை இது சொல்கிறது.
பெருமாள் திருமொழி - 5 தருதுயரம் (விற்றுவக்கோட்டம்மான் விவுயமாக : ஆழ்வார் தமது ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களைத் தெரிவித்தல்)
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் விண்தோய் மதிள் புடை சூழ் விற்றுவக்கோட்டம்மா நீ கொண்டாளாய் ஆகிலும் உன் குரைகழலே கூறுவனே
மீன்நோக்கும் நீள் வயல் சூழ் விற்றுவக்கோட்டம்மா என் பால் நோக்காய் ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன் தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் விற்றுவக்கோட்டம்மா நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
வெங்கண் திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட்டம்மானே எங்குப் போய் உய்கேன் உன்னிணை அடியே அடையல் அல்லால் எங்கும் போய்க் கரை காணாது எறிகடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே
செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் வெந்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா உன் அந்தமில் சீர்க்கல்லால் அகம் குழைய மாட்டேனே
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவை போல் மெய்த்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா என் சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே
தொக்கிலங்குயாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட்டம்மா உன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால் ர் மின்னையே சேர் திகிரி விற்றுவக்கோட்டம்மானே நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
விற்றுவக்கோட்டம்மா நீ வேண்டாயே ஆயிடினும் மற்றாரும் பற்றிலேன் என்று அவனைத் தாள் நயந்து கொற்றவேல் தானைக் குலசேகரன் சொன்ன நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே