மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவ் வையம் தன்னொடும் கூடுவதில்லை யான் ஐயனே அரங்கா என்றழைக்கின்றேன் மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே
3. மெய்யில் வாழ்க்கையை
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"உடம்பு சார்ந்த வாழ்க்கையை உண்மை என நம்பும் இவ்வுலகத்தாருடன் எனக்கு என்ன?" என்று ஆழ்வார் கேட்கும் பதிகம். நிலையற்றதை நிலையானதாக எண்ணும் மயக்கத்தை ஒவ்வொரு பாசுரமும் அவிழ்த்துக் காட்டுகிறது. மறுப்பதோடு நிற்காமல், அதற்குப் பதிலாக எதைப் பற்ற வேண்டும் என்பதையும் அரங்கனைக் காட்டித் தெளிவுபடுத்துகிறார்.
பெருமாள் திருமொழி - 3 மெய்யில் வாழ்க்கையை (ஆழ்வார் அரங்கனுக்கு அடியாராய் உலகத்தாரோடு தாம் சேராமை)
நூலினேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவதில்லை யான் ஆலியா அழையா அரங்கா என்று மாலெழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினாரொடுூம் கூடுவதில்லை யான் ஆரமார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நரகாந்தகன் பித்தனே
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலத்தொடும் கூடுவதில்லை யான் அண்ட வாணன் அரங்கன் வன்பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே க
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரொடும் கூடுவதில்லை யான் ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப் பேதை மா மணவாளன் தன் பித்தனே
எம்பரத்தர் அல்லாரொடும் கூடலன் உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதிலன் தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச் சித்தம் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் அத்தனே அரங்கா என்றழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர் பேயனே எவர்க்கும் இது பேசி என் ஆயனே அரங்கா என்றழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
அங்கையாழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய் கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்றில்லையே