மற்றிருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்றிருந்தேனுக்கு உரைப்பதெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி மற்பொருந்தாமற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடூமின்
12. மற்றிருந்தீர்
ஆண்டாள் · முதலாயிரம்
Essence of this decad
"மாதவன் என்ற ஓர் அன்பைப் பெற்றிருக்கும் எனக்கு, மற்றவர்களிடம் சொல்வதெல்லாம் ஊமையரிடம் பேசுவது போலவே" என்று ஆண்டாள் சொல்கிறாள். தன் நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் சுற்றியிருப்பவர்களுக்கு இல்லை என்பதை அவள் உணர்கிறாள். அன்பின் தனிமை — கூட்டத்தின் நடுவே இருந்தும் தனித்திருக்கும் நிலை — இப்பதிகத்தில் தெளிவாகப் பேசப்படுகிறது.
நாச்சியார் திருமொழி - 12 மற்றிருந்தீர் (தலைவி கண்ணன் உள்ள இடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்)
நாணி இனியோர் கருமம் இல்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க உறுதிராகில் மாணி உருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமறியும் ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடூமின்
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான் கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடூமின்
அங்கைத் தலத்திடை ஆழிகொண்டான் அவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடவரைக் காணில் நாணும் கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடூமின் க
ஆர்க்கும் என்நோயிது அறியலாகாது அம்மனைமீர் துழதிப்படாதே கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவத் தீரும் நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடூமின்
கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும் ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடூமின்
வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் உண்ணல் உறாமையும் உள்மெலிவும் ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன் தண்ணந்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப் பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடூமின்
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடூவாழ் சாதியும் ஆகப் பெற்றான் பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ கற்றன பேசி வசை உணாதே காலிகள் உய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடூமின்
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே சூட்டூயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடூமின்
மன்னு மதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும் தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கிடம் வைகுந்தமே