சிந்துரச் செம்பொடுப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ
9. சிந்துரச் செம்பொடி
ஆண்டாள் · முதலாயிரம்
Essence of this decad
திருமாலிருஞ்சோலை எங்கும் இந்திரகோபப் பூச்சிகள் சிந்தூரச் செம்பொடி போல் பரவியிருப்பதைக் கண்டு ஆண்டாள் துடிக்கும் பதிகம். மழைக்காலத்தின் ஒவ்வொரு அழகும் அவளுக்கு வலியாகவே மாறுகிறது. இயற்கை மகிழ்ச்சியாய் இருக்கும்போது பிரிந்திருப்பவருக்கு அது எவ்வளவு கொடுமையாகத் தோன்றும் என்பதை இது சொல்கிறது.
நாச்சியார் திருமொழி - 9 சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்)
போர்க்களிறு பொரும் மாலிருஞ்சோலையம் பூம்புறவில் தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் ஆர்க்கிடுகோ தோழி அவன் தார் செய்த பூசலையே
கருவிளை ஒண்மலர்காள் காயா மலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கொன்று உரையீர் ர் திருவிளையாடு திண்தோள் திருமாலிருஞ்சோலை நம்பி வரிவளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள் ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ் சுனைகாள் சுனையில் தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்றுமினே
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ
இன்று வந்து இத்தனையும் அழுது செய்திடப் பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே
கோங்கலரும் பொழில் மாலிருஞ்சோலயில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ
சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்துரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே