Skip to the text
நாச்சியார் திருமொழி

6. வாரணமாயிரம்

ஆண்டாள் · முதலாயிரம்

Essence of this decad

"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" — ஆண்டாள் தான் கண்ட திருமணக் கனவை விவரிக்கும் புகழ்பெற்ற பதிகம். ஆயிரம் யானைகள் சூழ நாரணன் நடந்து வருவதும், பூரணப் பொற்குடம் வைத்து வரவேற்பதும், மணச் சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்வதும் வரிசையாகச் சொல்லப்படுகின்றன. கனவாய்ச் சொல்லப்பட்டாலும், சடங்குகளின் நுணுக்கம் அதை நிஜம்போல் நிறுத்துகிறது. இன்றும் திருமணங்களில் பாடப்படும் பாசுரங்கள் இவை.

நாச்சியார்‌ திருமொழி - 6 வாரணமாயிரம்‌ (ஆயனை மணம்‌ செய்து கொள்வதாகத்‌ தான்‌ கண்ட கனாவைத்‌ தலைவி தோழிக்குக்‌ கூறுதல்‌)

556

வாரணம்‌ ஆயிரம்‌ சூழ வலம்‌ செய்து நாரண நம்பி நடக்கின்றான்‌ என்றெதிர்‌ பூரண பொற்குடம்‌ வைத்துப்‌ புறமெங்கும்‌ தோரணம்‌ நாட்டக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

557

நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப்‌ பந்தற்‌ கீழ்‌ கோளரி மாதவன்‌ கோவிந்தன்‌ என்பானோர்‌ காளை புகுதக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

558

இந்திரன்‌ உள்ளிட்ட தேவர்‌ குழாம்‌ எல்லாம்‌ வந்திருந்து என்னை மகள்‌ பேசி மந்திரித்து மந்திரக்‌ கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

559

நால்‌ திசைத்‌ தீர்த்தம்‌ கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச்‌ சிட்டர்கள்‌ பல்லார்‌ எடுத்தேத்தி பூப்புனை கண்ணிப்‌ புனிதனோடு என்தன்னை காப்பு நாண்‌ கட்டக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌ க

560

கதிரொளி தீபம்‌ கலசம்‌ உடனேந்தி சதிரிள மங்கையர்‌ தாம்‌ வந்து எதிர்‌ கொள்ள மதுரையார்‌ மன்னன்‌ அடிநிலை தொட்டு எங்கும்‌ அதிரப்‌ புகுதக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

561

மத்தளம்‌ கொட்ட வரிசங்கம்‌ நின்றூத முத்துடைத்‌ தாமம்‌ நிறை தாழ்ந்த பந்தற்‌ கீழ்‌ மைத்துனன்‌ நம்பி மதுசூதன்‌ வந்து என்னைக்‌ கைத்தலம்‌ பற்றக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

562

வாய்‌ நல்லார்‌ நல்ல மறையோதி மந்திரத்தால்‌ பாசிலை நாணல்‌ படுத்துப்‌ பரிதி வைத்து காய்சினமா களிறன்னான்‌ என்‌ கைப்பற்றி தீ வலம்‌ செய்யக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

563

இம்மைக்கும்‌ ஏழேழ்‌ பிறவிக்கும்‌ பற்றாவான்‌ நம்மை உடையவன்‌ நாராயணன்‌ நம்பி செம்மை உடைய திருக்கையால்‌ தாள்‌ பற்றி அம்மி மிதிக்கக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

564

வரிசிலை வாள்‌ முகத்து என்னைமார்‌ தாம்‌ வந்திட்டு எரிழுகம்‌ பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன்‌ அச்சுதன்‌ கைம்மேல்‌ என்‌ கை வைத்து பொரிழமுகம்‌ தட்டக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

565

குங்குமம்‌ அப்பிக்‌ குளிர்‌ சாந்தமட்டித்து மங்கல வீதி வலம்‌ செய்து மண நீர்‌ அங்கு அவனோடும்‌ உடன்‌ சென்று அங்கானை மேல்‌ மஞ்சனம்‌ ஆட்டக்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழீ நான்‌

566

ஆயனுக்காகத்‌ தான்‌ கண்ட கனாவினை வேயர்‌ புகழ்‌ வில்லி புத்தூர்க்‌ கோன்‌ கோதை சொல்‌ தூய தமிழ்‌ மாலை ஈரைந்தும்‌ வல்லவர்‌ வாயு நன்மக்களைப்‌ பெற்று மகிழ்வரே