Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

1-4. தன் முகத்து

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

தவழத் தொடங்கிய கண்ணனுடன் விளையாட நிலவை அழைக்கும் பதிகம். "கண் இருந்தால் வந்து பார்; என் மகன் அழைக்கிறான்; மேகத்தில் மறையாதே, ஓடி வா" என்று தாய் நிலவிடம் கெஞ்சுகிறாள். பின்பு, "சிறியவன் என்று இகழாதே — மாவலியிடம் கேட்டுப் பார்" என்று அன்புடன் மிரட்டவும் செய்கிறாள். குழந்தையின் மேல் உள்ள பெருமிதமும் இறைவனின் பெருமையும் இணைந்து நகைச்சுவையுடன் வெளிப்படுகின்றன.

பெரியாழ்வார்‌ திருமொழி 1-4 தன்‌ முகத்து (சந்திரனை அழைத்தல்‌: அம்புலிப்‌ பருவம்‌)

54

தன்‌ முகத்துச்‌ சுட்டி தூங்கத்‌ தூங்கத்‌ தவழ்ந்து போய்‌ பொன்‌ முகக்‌ கிண்கிணி ஆர்ப்பப்‌ புழுதி அளைகின்றான்‌ என்‌ மகன்‌ கோவிந்தன்‌ கூத்தினை இளமாமதீ நின்‌ முகம்‌ கண்ணுளவாகில்‌ நீ இங்கே நோக்கிப்‌ போ

55

என்‌ சிறுக்‌ குட்டன்‌ எனக்கோர்‌ இன்னமுது எம்பிரான்‌ தன்‌ சிறுக்‌ கைகளால்‌ காட்டிக்‌ காட்டி அழைக்கின்றான்‌ அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல்‌ மஞ்சில்‌ மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா

56

சுற்றும்‌ ஒளிவட்டம்‌ சூழ்ந்து சோதி பரந்தெங்கும்‌ எத்தனை செய்யினும்‌ என்‌ மகன்‌ முகம்‌ நேரொவ்வாய்‌ வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற கைத்தலம்‌ நோவாமே அம்புலீ கடிதோடி வா

57

சக்கரக்‌ கையன்‌ தடங்கண்ணால்‌ மலர விழித்து ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்‌ காட்டும்‌ காண்‌ தக்கதறிதியேல்‌ சந்திரா சலம்‌ செய்யாதே மக்கட்‌ பெறாத மலடனல்லையேல்‌ வா கண்டாய்‌

58

அழகிய வாயில்‌ அமுதவூறல்‌ தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால்‌ உன்னைக்‌ கூவுகின்றான்‌ குழகன்‌ சிரீதரன்‌ கூவக்‌ கூவ நீ போதியேல்‌ புழையிலவாகாதே நின்‌ செவி புகர்‌ மாமதீ

59

தண்டொடு சக்கரம்‌ சார்ங்கம்‌ ஏந்தும்‌ தடக்கையன்‌ கண்‌ துயில்‌ கொள்ளக்‌ கருதிக்‌ கொட்டாவி கொள்கின்றான்‌ உண்ட முலைப்பாலறா கண்டாய்‌ உறங்காவிடில்‌ விண்‌ தனில்‌ மன்னிய மாமதீ விரைந்தோடி வா

60

பாலகனென்று பரிபவம்‌ செய்யேல்‌ பண்டொருநாள்‌ ஆலினிலை வளர்ந்த சிறுக்‌ கனவன்‌ இவன்‌ மேலெழப்‌ பாய்ந்து பிடித்துக்‌ கொள்ளும்‌ வெகுளுமேல்‌ மாலை மதியாதே மாமதீ மகிழ்ந்தோடி வா

61

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல்‌ கண்டாய்‌ சிறுமையின்‌ வார்த்தையை மாவலியிடைச்‌ சென்று கேள்‌ சிறுமைப்‌ பிழை கொள்ளில்‌ நீயும்‌ உன்‌ தேவைக்குரியை காண்‌ நிறைமதி நெடுமால்‌ விரைந்து உன்னைக்‌ கூவுகின்றான்‌

62

தாழியில்‌ வெண்ணெய்‌ தடங்கை ஆர விழுங்கிய பேழை வயிற்றெம்பிரான்‌ கண்டாய்‌ உன்னைக்‌ கூவுகின்றான்‌ ஆழிகொண்டு உன்னை எறியும்‌ ஐயுறவில்லை காண்‌ வாழ உறுதியேல்‌ மாமதீ மகிழ்ந்தோடி வா

63

மைத்தடங்கண்ணி யசோதை தன்‌ மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம்‌ ஒளி புத்தூர்‌ வித்தகன்‌ விட்டுசித்தன்‌ விரித்த தமிழிவை எத்தனையும்‌ சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே