துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே
4-10. துப்புடையாரை
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"வலிமையுடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே" — ஆற்றல் உள்ளவரிடம் அடைக்கலம் புகுவது இயல்பு என்று ஆழ்வார் தொடங்குகிறார். "ஒப்பில்லாதவனாயினும் நின்னை அடைந்தேன்; யானைக்கு அருள் செய்தவனே எனக்கும் அருள்" என்று வேண்டுகிறார். தகுதி பார்த்து அல்ல, தேவை பார்த்தே அவன் அருள்கிறான் என்ற நம்பிக்கை இப்பதிகத்தின் அடித்தளம்.
பெரியாழ்வார் திருமொழி 4-10 துப்புடையாரை (அந்திம காலத்தில் கடாக்விக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்)
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது நில்லுமின் என்னும் உபாயமில்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும் அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயோ அற்றது வாணாள் இவற்கென்றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்றல் உற்ற அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே க
பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை வைய மனிசரைப் பொய்யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய் ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே
தண்ணெனவில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய் எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே எஞ்சலில் என்னுடை இன்னமுதே ஏழுலகும் உடையாய் என்னப்பா வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மாமாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே
குன்றெடுத்து ஆனிரை காத்த ஆயா கோனிரை மேய்த்தவனே எம்மானே அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ்சோதி மறந்தறியேன் நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக்காளர் தாமே