Skip to the text
திருவாய்மொழி

10-10. முனியே

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! ... இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே" — முடிவிலே ஆழ்வார் இறைவனைப் பற்றிக்கொண்டு, இனி உன்னை விடேன், மாயம் செய்யாதே என்று அழுத்தமாக நிற்கும் இறுதிப் பதிகம். ஆயிரம் பாடலையும் இயக்கிய "அவா" — அந்த ஏக்கமே இங்கே தன் எல்லையை எட்டி, அறுகிறது. "அவா அற்று வீடு பெற்ற சடகோபன்" — வேட்கை நிறைவுற்றதே வேட்கையின் முடிவாகி, மோட்சமாய் மலர்கிறது. திருவாய்மொழி இந்த வேட்கையின் அமைதியுடன் நிறைவடைகிறது — ஆழ்வார் ஏறிச் செல்கிறார்.

திருவாய்மொழி 10-10 முனியே

3766

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என்‌ பொல்லாக்‌ கனி வாய்த்‌ தாமரைக்‌ கண்‌ கருமாணிக்கமே! என்‌ கள்வா! தனியேன்‌ ஆருயிரே! என்‌ தலைமிசையாய்‌ வந்திட்டு இனி நான்‌ போகலொட்டேன்‌ ஒன்றும்‌ மாயம்‌ செய்யேல்‌ என்னையே

3767

மாயம்‌ செய்யேல்‌ என்னை உன்‌ திருமார்வத்து மாலை நங்கை வாசம்‌ செய்‌ பூங்குழலாள்‌ திருவாணை நின்‌ ஆணை கண்டாய்‌ நேசம்‌ செய்து உன்னோடு என்னை உயிர்‌ வேறின்றி ஒன்றாகவே கூசம்‌ செய்யாது கொண்டாய்‌ என்னைக்‌ கூவிக்‌ கொள்ளாய்‌ - வந்தந்தோ!

3768

கூவிக்‌ கொள்ளாய்‌ வந்தந்தோ! என்‌ பொல்லாக்‌ கருமாணிக்கமே! ஆவிக்கோர்‌ பற்றுக்‌ கொம்பு நின்னலால்‌ அறிகின்றிலேன்‌ நான்‌ மேவித்‌ தொழும்‌ பிரமன்‌ சிவன்‌ இந்திரன்‌ ஆதிக்கெல்லாம்‌ நாவிக்‌ கமல முதற்‌ கிழங்கே! உம்பர்‌ அந்ததுவே

3769

உம்பர்‌ அந்தண்‌ பாழேயோ! அதனுள்‌ மிசை நீயேயோ! அம்பர நற்சோதி! அதனுள்‌ பிரமன்‌ அரன்‌ நீ ர உம்பரும்‌ யாதவரும்‌ படைத்த முனிவன்‌ அவன்‌ நீ எம்பரம்‌ சாதிக்கலுற்று என்னைப்‌ போர விட்டிட்டாயே

3770

போர விட்டிட்டு என்னை நீ புறம்‌ போக்கலுற்றால்‌ பின்னை யான்‌ ஆரைக்‌ கொண்டு எந்தையந்தோ! எனதென்பதென்‌? யான்‌ என்பதென்‌? தீர இரும்புண்ட நீரது போல என்‌ ஆருமிரை ஆரப்‌ பருக எனக்கு ஆராவமுதானாயே

3771

எனக்காராவமழுதாய்‌ எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி உண்டிட்டாய்‌ இனி உண்டொழியாய்‌ புனக்காயா நிறத்த புண்டரீகக்‌ கண்‌ செங்கனி வாய்‌ உனக்கேற்கும்‌ கோல மலர்ப்‌ பாவைக்கு அன்பா! என்‌ அன்பேயோ!

3772

கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ! நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப கோல வராகம்‌ ஒன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌! நீலக்‌ கடல்‌ கடைந்தாய்‌ உன்னைப்‌ பெற்று இனிப்‌ போக்குவனோ?

3773

பெற்று இனிப்‌ போக்குவனோ? உன்னை என்‌ தனிப்‌ பேருயிரை உற்ற இருவினையாய்‌ உயிராய்ப்‌ பயனாய்‌ அவையாய்‌ முற்ற இம்மூவுலகும்‌ பெருந்தூறாய்த்‌ தூற்றில்‌ புக்கு முற்றக்‌ கரந்தொலித்தாய்‌! என்‌ முதல்‌ தனி வித்தேயோ!

3774

முதல்‌ தனி வித்தேயோ! முழு மூவுலகாதிக்கெல்லாம்‌ முதல்‌ தனி உன்னையுன்னை எனை நாள்‌ வந்து கூடுவன்‌ நான்‌? முதல்‌ தனி அங்குமிங்கும்‌ முழு முற்றுறு வாழ்‌ பாழாய்‌ முதல்‌ தனி சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!

3775

சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்‌ பெரும்‌ பாழேயோ! சூழ்ந்ததனில்‌ பெரிய பர நன்மலர்ச்‌ சோதீயோ! ர்‌ சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர்‌ ஞான இன்பமேயோ! சூழ்ந்ததனில்‌ பெரிய என்‌ அவா அறச்‌ சூழ்ந்தாயே!

3776

அவா அறச்‌ சூழ்‌ அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன அவாவில்‌ அந்தாதிகளால்‌ இவை ஆயிரமும்‌ முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்தறிந்தார்‌ பிறந்தார்‌ உயர்ந்தே