திருவாய்மொழி 10-9 சூழ் விசும்பு
10-9. சூழ் விசும்பு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"சூழ் விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின" — முக்தி பெற்ற உயிர் பரமபதம் நோக்கி ஏறிச் செல்லும்போது, விசும்பின் முகில்கள் முரசு முழக்க, கடல் அலைகள் கை எடுத்து ஆட, நாரணன் தமரை வரவேற்கும் காட்சியைப் பாடும் பதிகம். அர்ச்சிராதி வழியில் அடியவனுக்கு அண்டமே எதிர்கொள்ளும் மகிழ்வு. மாமணி மண்டபத்தில் அடியாரோடு அந்தமில் பேரின்பத்து இருத்தலுடன் முடிகிறது — வீடு திரும்பும் வரவேற்பு.
சூழ் விசும்பு அணிழுகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின ர ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே
நாரணன் தமரைக் கண்டுகந்து நன்னீர் முகில் பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடு வரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர் பூமி அன்றளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கென்று வந்தெதிரே
எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவரவர் கைநிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே
வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர் ர ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் கிடந்த என் கேசவன் கிளரொளி மணிமுடி குடந்தை என் கோவலன் குடி அடியார்க்கே
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள கொடு அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியுநற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே