Skip to the text
திருவாய்மொழி

10-8. திருமாலிருஞ்சோலை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்" — "திருமாலிருஞ்சோலை மலை" என்று ஒரு சொல் சொன்னேன்; அவ்வளவே, திருமால் வந்து என் நெஞ்சை நிறையப் புகுந்தான் என்னும் பதிகம். செயலுக்கு மீறிய அருளின் விகிதப்பொருந்தாமையே இதன் வியப்பு — பெயரைச் சொன்னதே போதுமானது. தான் தந்தது சிறிது; பெற்றது அனைத்தும். அளவுக்கு மீறிக் கொடுக்கும் அவன் ஈகை இதில் நிற்கிறது.

திருவாய்மொழி 10-8 திருமாலிருஞ்சோலை

3744

திருமாலிருஞ்சோலை மலை என்றேன்‌ என்ன திருமால்‌ வந்து என்‌ நெஞ்சு நிறையப்‌ புகுந்தான்‌ குருமாமணி உந்து புனல்‌ பொன்னித்‌ தென்பால்‌ திருமால்‌ சென்று சேர்விடம்‌ தென்‌ திருப்பேரே

3745

பேரே உறைகின்ற பிரான்‌ இன்று வந்து பேரேன்‌ என்று என்‌ நெஞ்சு நிறையப்‌ புகுந்தான்‌ காரேழ்‌ கடலேழ்‌ மலையேழ்‌ உலகுண்டும்‌ ஆரா வயிற்றானை அடங்கப்‌ பிடித்தேனே

3746

பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌ மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை ர்‌ கொடிக்‌ கோபுர மாடங்கள்‌ சூழ்‌ திருப்பேரான்‌ அடிச்‌ சேர்வது எனக்கு எளிதாயினவாறே

3747

எளிதாயினவாறென்று என்‌ கண்கள்‌ களிப்ப களிதாகிய சிந்தையனாய்க்‌ களிக்கின்றேன்‌ கிளி தாவிய சோலைகள்‌ சூழ்‌ திருப்பேரான்‌ தெளிதாகிய சேண்‌ விசும்பு தருவானே

3748

வானே தருவான்‌ எனக்கா என்னோடு ஒட்டி ஊனேய்‌ குரம்பை இதனுள்‌ புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள்‌ தவிர்த்தான்‌ தேனேய்‌ பொழில்‌ தென்‌ திருப்பேர்‌ நகரானே

3749

திருப்பேர்‌ நகரான்‌ திருமாலிருஞ்சோலை பொருப்பே உறைகின்ற பிரான்‌ இன்று வந்து இருப்பேன்‌ என்று என்‌ நெஞ்சு நிறையப்‌ புகுந்தான்‌ விருப்பே பெற்று அமுதம்‌ உண்டு களித்தேனே

3750

உண்டு களித்தேற்கு உம்பர்‌ என்‌ குறை? மேலைத்‌ தொண்டு களித்து அந்தி தொழும்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ வண்டு களிக்கும்‌ பொழில்‌ சூழ்‌ திருப்பேரான்‌ கண்டு களிப்பக்‌ கண்ணுள்‌ நின்றகலானே

3751

கண்ணுள்‌ நின்றகலான்‌ கருத்தின்‌ கண்‌ பெரியன்‌ எண்ணில்‌ நுண்பொருள்‌ ஏழிசையின்‌ சுவை தானே வண்ண நன்மணி மாடங்கள்‌ சூழ்‌ திருப்பேரான்‌ திண்ணம்‌ என்‌ மனத்துப்‌ புகுந்தான்‌ செறிந்து இன்றே

3752

இன்று என்னைப்‌ பொருளாக்கித்‌ தன்னை என்னுள்‌ வைத்தான்‌ அன்று என்னைப்‌ புறம்‌ போகப்‌ புணர்த்தது என்‌ செய்வான்‌? குன்று என்னத்‌ திகழ்‌ மாடங்கள்‌ சூழ்‌ திருப்பேரான்‌ ஒன்று எனக்கருள்‌ செய்ய உணர்த்தல்‌ உற்றேனே

3753

உற்றேன்‌ உகந்து பணி செய்து உன பாதம்‌ பெற்றேன்‌ ஈதே இன்னம்‌ வேண்டுவது எந்தாய்‌! கற்றார்‌ மறை வாணர்கள்‌ வாழ்‌ திருப்பேராற்கு அற்றார்‌ அடியார்‌ தமக்கு அல்லல்‌ நில்லாவே

3754

நில்லா அல்லல்‌ நீள்‌ வயல்‌ சூழ்‌ திருப்பேர்‌ மேல்‌ நல்லார்‌ பலர்‌ வாழ்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லார்‌ தமிழ்‌ ஆயிரத்துள்‌ இவை பத்தும்‌ வல்லார்‌ தொண்டர்‌ ஆள்வது சூழ்‌ பொன்‌ விசும்பே