திருவாய்மொழி 10-6 அருள் பெறுவார்
10-6. அருள் பெறுவார்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் ... இனிப் பிறவி யான் வேண்டேன்" — அடியார்க்கு அடியேனுக்கு ஆழியான் அருள் தர ஆயத்தமாகிறான், அதுவே நம் விதி என்று உறுதிகொள்ளும் பதிகம். இருள் நிறைந்த இப்பூமியில் இனி ஒரு பிறவியும் வேண்டேன் என்கிறார். ஐயம் நீங்கி, மடநெஞ்சை வாட்டாற்றான் அடி வணங்குமாறு தேற்றுகிறார்.
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே ஈர இருள் தருமா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருளொழி நீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடி வணங்கே
வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மடநெஞ்சே! கேசவன் எம்பெருமானை ர பாட்டாய பல பாடப் பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே
நண்ணினம் நாரணனை நாமங்கள் பல சொல்லி மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறாகா இக்கருமங்கள் என் நெஞ்சே!
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து வன்னெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் மன்னஞ்சப்!' பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல்நெஞ்சே! நம்பெருமான் நமக்கருள் தான் செய்வானே
வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே! தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன்! செழும்பறவை தானேறித் திரிவான தாளிணை! என் தலை மேலே
தலை மேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான் நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் மலைமாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலை யானை மருப்பொசித்தான் குரைகழல்கள் குறுகினமே
குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடு கொண்டான் திரைகுழுவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன வரைகுழுவு மணிமாட வாட்டாற்றான் மலரடி மேல் விரைகுழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே
மெய்ந்நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல் மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே?
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண்வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே
பிரியாது ஆட்செய் என்று பிறப்பறுத்து ஆளறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரிவாள்வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டிுனனே
காட்டித் தன் கனைகழல்கள் கடுநரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம்பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே