Skip to the text
திருவாய்மொழி

10-5. கண்ணன்‌ கழலிணை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே" — கண்ணனை அடைய விரும்பும் மனத்தினர்க்கு, திடமாக எண்ணத்தக்க திருநாமம் நாராயணமே என்று உறுதி கூறும் பதிகம். இருவடி மட்டுமே கொண்ட, மந்திரம் போன்ற செறிவான குறுஞ்செய்யுட்களால் ஆனது இப்பத்து. திருவாய்மொழியின் சுருக்கமும் ஆழமும் ஒருங்கே நிற்கும் இடம் இது.

திருவாய்மொழி 10-5 கண்ணன்‌ கழலிணை

3711

கண்ணன்‌ கழலிணை நண்ணும்‌ மனம்‌ உடையீர்‌! எண்ணும்‌ திருநாமம்‌ திண்ணம்‌ நாரணமே

3712

நாரணன்‌ எம்மான்‌ பாரணங்காளன்‌ வாரணம்‌ தொலைத்த காரணன்‌ தானே

3713

தானே உலகெல்லாம்‌ தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே

3714

ஆள்வான்‌ ஆழி நீர்‌ கோள்வாய்‌ அரவணையான்‌ தாள்வாய்‌ மலர்‌ இட்டு நாள்வாய்‌ நாடீரே

3715

நாடீர்‌ நாள்தோறும்‌ வாடாமலர்‌ கொண்டு பாடீர்‌ அவன்‌ நாமம்‌ வீடே பெறலாமே

3716

மேயான்‌ வேங்கடம்‌ காயாமலர்‌ வண்ணன்‌ பேயார்‌ முலையுண்ட வாயான்‌ மாதவனே

3717

மாதவன்‌ என்றென்று ஓத வல்லீரேல்‌ தீதொன்றும்‌ அடையா ஏதம்‌ சாராவே

3718

சாரா ஏதங்கள்‌ நீரார்‌ முகில்வண்ணன்‌ பேர்‌ ஆர்‌ ஓதுவார்‌ ஆரார்‌ அமரரே

3719

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை ர அமரத்‌ தொழுவார்கட்கு அமரா வினைகளே

3720

வினை வல்லிருள்‌ என்னும்‌ முனைகள்‌ வெருவிப்‌ போம்‌ சுனை நன்மலர்‌ இட்டு நினைமின்‌ நெடியானே

3721

நெடியான்‌ அருள்‌ சூடும்‌ படியான்‌ சடகோபன்‌ நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள்‌ பேறே