Skip to the text
திருவாய்மொழி

10-4. சார்வே

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள் ... பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே" — தவநெறிக்கு உண்மைச் சார்பு தாமோதரனுடைய திருவடிகளே என்று தொடங்கும் பதிகம். நீர், வானம், மண், தீ, காற்று ஆய் நிற்கும் அந்தர்யாமியின் பெருமையை வானவர்களும் பிதற்றியே அமைகின்றனர். கற்றார்க்கு ஒரே பற்று கண்ணன் கழலிணை என்று முடிக்கிறது.

திருவாய்மொழி 10-4 சார்வே

3700

சார்வே தவநெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌ கார்மேக வண்ணன்‌ கமல நயனத்தன்‌ ர்‌ நீர்‌ வானம்‌ மண்‌ எரி காலாய்‌ நின்ற நேமியான்‌ பேர்‌ வானவர்கள்‌ பிதற்றும்‌ பெருமையனே

3701

பெருமையனே வானத்து இமையோர்க்கும்‌ காண்டற்‌ கருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்‌ திருமெய்‌ உறைகின்ற செங்கண்மால்‌ நாளும்‌ இருமை வினை கமந்து இங்கு என்னை ஆள்கின்றானே

3702

ஆள்கின்றான்‌ ஆழியான்‌ ஆரால்‌ குறைவுடையம்‌? மீள்கின்றதில்லைப்‌ பிறவித்‌ துயர்‌ கடிந்தோம்‌ வாள்கெண்டை ஒண்கண்‌ மடப்பின்னை தன்‌ கேள்வன்‌ தாள்‌ கண்டு கொண்டு என்‌ தலை மேல்‌ புனைந்தேனே

3703

தலை மேல்‌ புனைந்தேன்‌ சரணங்கள்‌ ஆலின்‌ இலை மேல்‌ துயின்றான்‌ இமையோர்‌ வணங்க மலை மேல்‌ தான்‌ நின்று என்‌ மனத்துள்‌ இருந்தானை நிலை பேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேனே

3704

நிச்சித்திருந்தேன்‌ என்‌ நெஞ்சம்‌ கழியாமை கைச்சக்கரத்து அண்ணல்‌ கள்வம்‌ பெரிதுடையன்‌ மெச்சப்படான்‌ பிறர்க்கு மெய்‌ போலும்‌ பொய்‌ வல்லன்‌ நச்சப்படூும்‌ நமக்கு நாகத்தணையானே

3705

நாகத்தணையானை நாள்தோறும்‌ ஞானத்தால்‌ ஆகத்து அணைப்பார்க்கு அருள்‌ செய்யும்‌ அம்மானை ஈர மாகத்து இளமதியம்‌ சேரும்‌ சடையானை பாகத்து வைத்தான்‌ தன்‌ பாதம்‌ பணிந்தேனே

3706

பணி நெஞ்சே! நாளும்‌ பரம பரம்பரனை பிணி ஒன்றும்‌! சாரா பிறவி கெடுத்தாளும்‌ மணி நின்ற சோதி மதுசூதன்‌ என்னம்மான்‌ அணி நின்ற செம்பொன்‌ அடல்‌ ஆழியானே

3707

ஆழியான்‌ ஆழி அமரர்க்கும்‌ அப்பாலான்‌ ஊழியான்‌ ஊழி படைத்தான்‌ நிரை மேய்த்தான்‌ பாழியந்தோளால்‌ வரை எடுத்தான்‌ பாதங்கள்‌ வாழி என்‌ நெஞ்சே! மறவாது வாழ்‌ கண்டாய்‌

3708

கண்டேன்‌ கமல மலர்ப்‌ பாதம்‌ காண்டலுமே விண்டே ஒழிந்த வினை ஆயினவெல்லாம்‌ ர தொண்டே செய்து என்றும்‌ தொழுது வழி ஒழுக பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே

3709

வகையால்‌ மனமொன்றி மாதவனை நாளும்‌ புகையால்‌ விளக்கால்‌ புதுமலரால்‌ நீரால்‌ திசை தோறு அமரர்கள்‌ சென்று இறைஞ்ச நின்ற தகையான்‌ சரணம்‌ தமர்கட்கு ஓர்‌ பற்றே

3710

பற்றென்று பற்றிப்‌ பரம பரம்பரனை மல்திண்தோள்‌ மாலை வழுதி வளநாடன்‌ சொல்‌ தொடை அந்தாதி ஓராயிரத்துள்‌ இப்பத்தும்‌ கற்றார்க்கு ஓர்‌ பற்றாகும்‌ கண்ணன்‌ கழலிணையே