Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

4-4. நாவகாரியம்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

திருக்கோட்டியூரைப் பாடும் பதிகம். நாவால் தீங்கு சொல்லாதவர்கள், நாள்தோறும் விருந்தினரை உபசரிப்பவர்கள், தெய்வக் காரியங்களைச் செய்து வேதம் பயின்று வாழ்பவர்கள் நிறைந்த ஊர் என்று அதை வருணிக்கிறார். இறைவன் உறையும் இடத்தை அதன் கோபுரத்தால் அல்லாமல், அங்கு வாழ்பவர்களின் பண்பால் அடையாளம் காட்டுவது இப்பதிகத்தின் சிறப்பு.

பெரியாழ்வார்‌ திருமொழி 4-4 நாவகாரியம்‌ (முக்கரணங்களாலும்‌ திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக்‌ கொண்டாடியும்‌, அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும்‌ கூறுதல்‌)

360

நாவகாரியம்‌ சொல்லிலாதவர்‌ ர நாள்தொறும்‌ விருந்தோம்புவார்‌ தேவகாரியம்‌ செய்து வேதம்‌ பயின்று வாழ்‌ திருக்கோட்டியூர்‌ மூவர்‌ காரியமும்‌ திருத்தும்‌ முதல்வனைச்‌ சிந்தியாத அப்‌ பாவகாரிகளைப்‌ படைத்தவன்‌ எங்ஙனம்‌ படைத்தான்‌ கொலோ

361

குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கு அனுகூலராய்‌ செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்‌ வாழ்‌ திருக்கோட்டியூர்‌ துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்‌ தன்னைத்‌ தொழாதவர்‌ பெற்ற தாயர்‌ வயிற்றினைப்‌ பெருநோய்‌ செய்வான்‌ பிறந்தார்களே

362

வண்ண நல்மணியும்‌ மரகதமும்‌ அழுத்தி நிழலெழும்‌ திண்ணை சூழ்‌ திருக்கோட்டியூர்த்‌ திருமாலவன்‌ திருநாமங்கள்‌ எண்ணக்‌ கண்ட விரல்களால்‌ இறைப்‌ பொழுதும்‌ எண்ணகிலாது போய்‌ உண்ணக்‌ கண்ட தம்‌ ஊத்தை வாய்க்குக்‌ கவளமுந்துகின்றார்களே

363

உரகமெல்லணையான்‌ கையில்‌ உறை சங்கம்‌ போல்‌ மடவன்னங்கள்‌ நிரை கணம்‌ பரந்தேறும்‌ செங்கமல வயல்‌ திருக்கோட்டியூர்‌ நரகநாசனை நாவிற்‌ கொண்டழையாத மானிட சாதியர்‌ பருகு நீரும்‌ உடுக்குங்‌ கூறையும்‌ பாவம்‌ செய்தன தாங்கொலோ

364

ஆமையின்‌ முதுகத்திடைக்குதி கொண்டு தூமலர்‌ சாடிப்‌ போய்‌ தீமை செய்து இளவாளைகள்‌ விளையாடு நீர்த்‌ திருக்கோட்டியூர்‌ நேமி சேர்‌ தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்‌ உண்ணும்‌ சோற்றினை வாங்கிப்‌ புல்லைத்‌ திணிமினே

365

பூதம்‌ ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள்‌ ஐந்து பொறிகளால்‌ ஏதம்‌ ஒன்றுமிலாத வண்கையினார்கள்‌ வாழ்‌ திருக்கோட்டியூர்‌ நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள்‌ உழக்கிய பாத தூளி படுதலால்‌ இவ்வுலகம்‌ பாக்கியம்‌ செய்ததே

366

குருந்தம்‌ ஒன்றொசித்தானொடும்‌ சென்று கூடியாடி விழாச்‌ செய்து திருந்து நான்மறையோர்‌ இராப்‌ பகல்‌ ஏத்தி வாழ்‌ திருக்கோட்டியூர்‌ கருந்தட முகில்‌ வண்ணனைக்‌ கடைக்‌ கொண்டு கைதொழும்‌ பத்தர்கள்‌ இருந்த ஊரில்‌ இருக்கும்‌ மானிடர்‌ எத்தவங்கள்‌ செய்தார்‌ கொலோ

367

நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌ அபிமான துங்கனை நாள்‌ தொறும்‌ தெளிந்த செல்வனைச்‌ சேவகங்கொண்ட செங்கண்மால்‌ திருக்கோட்டியூர்‌ குளிர்ந்துறைகின்ற கோவிந்தன்‌ குணம்‌ பாடுவார்‌ உள்ள நாட்டினுள்‌ விளைந்த தானியமும்‌ இராக்கதர்‌ மீது கொள்ளகிலார்களே

368

கொம்பினார்‌ பொழில்வாய்‌ குயிலினம்‌ கோவிந்தன்‌ குணம்‌ பாடு சீர்‌ செம்பொனார்‌ மதிள்‌ சூழ்‌ செழுங்கழனியுடைத்‌ திருக்கோட்டியூர்‌ நம்பனை நரசிங்கனை நவின்றேத்துவார்களைக்‌ கண்டக்கால்‌ எம்பிரான்‌ தன சின்னங்கள்‌ இவரிவரென்று ஆசைகள்‌ தீர்வனே

369

காசின்‌ வாய்க்‌ கரம்‌ விற்கிலும்‌ கரவாது மாற்றிலி சோறிட்டு தேசவார்த்தை படைக்கும்‌ வண்கையினார்கள்‌ வாழ்‌ திருக்கோட்டியூர்‌ கேசவா புருடோத்தமா கிளர்‌ சோதியாய்‌ குறளா என்று பேசுவார்‌ அடியார்கள்‌ எந்தம்மை விற்கவும்‌ பெறுவார்களே

370

சீதநீர்‌ புடைசூழ்‌ செழுங்கழனியுடைத்‌ திருக்கோட்டியூர்‌ ஆதியான்‌ அடியாரையும்‌ அடிமையின்றித்‌ திரிவாரையும்‌ கோதில்‌ பட்டர்பிரான்‌ குளிர்‌ புதுவைமன்‌ விட்டுசித்தன்‌ சொல்‌ ஏதமின்றி உரைப்பவர்‌ இருடீகேசனுக்காளரே