Skip to the text
திருவாய்மொழி

10-2. கெடூமிடர்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன ... அனந்தபுர நகர் புகுதும் இன்றே" — "கேசவா" என்று ஒருமுறை சொன்னால் இடர் யாவும் கெடும், கூற்றுவனின் தமரும் அணுக மாட்டார் என்று திருநாமத்தின் வலிமையைச் சொல்லும் பதிகம். அரவணையில் துயிலும் அனந்தபுரத்தானை இன்றே சேருங்கள் என்னும் அவசர அழைப்பு. நாமமே உடனடி விடுதலை என்பதே இதன் உறுதி.

திருவாய்மொழி 10-2 கெடூமிடர்‌

3678

கெடும்‌ இடராயவெல்லாம்‌ கேசவா என்ன நாளும்‌ கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌ விடமுடை அரவில்‌ பள்ளி விரும்பினான்‌ சுரும்பலற்றும்‌ தடமுடை வயல்‌ அனந்தபுர நகர்‌ புகுதும்‌ இன்றே

3679

இன்று போய்ப்‌ புகுதிராகில்‌ எழுமையும்‌ ஏதம்‌ சார குன்று நேர்‌ மாடமாடே குருந்து சேர்‌ செருந்தி புன்னை மன்றலர்‌ பொழில்‌ அனந்தபுர நகர்‌ மாயன்‌ நாமம்‌ ஒன்றும்‌ ஓராயிரமாம்‌ உள்ளுவார்க்கு உம்பரூரே

3680

ஊரும்‌ புட்கொடியும்‌ அஃதே உலகெல்லாம்‌ உண்டுமிழ்ந்தான்‌ சேரும்‌ தண்ணனந்தபுரம்‌ சிக்கெனப்‌ புகுதிராகில்‌ தீரும்‌ நோய்‌ வினைகள்‌ எல்லாம்‌ திண்ணம்‌ நாம்‌ அறியச்‌ சொன்னோம்‌ பேரும்‌ ஓராயிரத்துள்‌ ஒன்று நீர்‌ பேசுமினே

3681

பேசுமின்‌ கூசமின்றிப்‌ பெரிய நீர்‌ வேலை சூழ்ந்து வாசமே கமழும்‌ சோலை வயலணி அனந்தபுரம்‌ நேசம்‌ செய்து உறைகின்றானை நெறிமையால்‌ மலர்கள்‌ தூவி பூசனை செய்கின்றார்கள்‌ புண்ணியம்‌ செய்தவாறே!

3682

புண்ணியம்‌ செய்து நல்ல புனலொடும்‌ மலர்கள்‌ தூவி எண்ணுமின்‌ எந்தை நாமம்‌ இப்பிறப்பறுக்கும்‌ அப்பால்‌ திண்ணம்‌ நாம்‌ அறியச்‌ சொன்னோம்‌ செறிபொழில்‌ அனந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதம்‌ அணுகுவார்‌ அமரர்‌ ஆவார்‌

3683

அமரராய்த்‌ திரிகின்றார்கட்கு ஆதிசேர்‌ அனந்தபுரத்து அமரர்‌ கோன்‌ அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர்‌ விண்ணோர்‌ நமர்களோ! சொல்லக்‌ கேண்மின்‌ நாமும்‌ போய்‌ நணுக வேண்டும்‌ குமரனார்‌ தாதை துன்பம்‌ துடைத்த கோவிந்தனாரே

3684

துடைத்த கோவிந்தனாரே உலகுயிர்‌ தேவும்‌ மற்றும்‌ படைத்த எம்‌ பரம மூர்த்தி பாம்பணைப்‌ பள்ளி கொண்டான்‌ மடைத்தலை வாளை பாயும்‌ வயலணி அனந்தபுரம்‌ கடைத்தலை சீய்க்கப்‌ பெற்றால்‌ கடுவினை களையலாமே

3685

கடூவினை களையலாகும்‌ காமனைப்‌ பயந்த காளை இடவகை கொண்டதென்பர்‌ எழிலணி அனந்தபுரம்‌ படமுடை அரவில்‌ பள்ளி பயின்றவன்‌ பாதம்‌ காண நடமினோ நமர்களுள்ளீர்‌! நாம்‌ உமக்கு அறியச்‌ சொன்னோம்‌

3686

நாம்‌ உமக்கு அறியச்‌ சொன்ன நாள்களும்‌ நணியவான சேமம்‌ நன்குடைத்துக்‌ கண்டீர்‌ செறிபொழில்‌ அனந்தபுரம்‌ தூம! நல்விரை மலர்கள்‌ துவளற ஆய்ந்து கொண்டு வாமனன்‌ அடிக்கென்றேத்த மாய்ந்தறும்‌ வினைகள்‌ தாமே

3687

மாய்ந்தறும்‌ வினைகள்‌ தாமே மாதவா! என்ன நாளும்‌ ஏய்ந்த பொன்மதிள்‌ அனந்தபுர நகர்‌ எந்தைக்கென்று சாந்தொடு விளக்கம்‌ தூபம்‌ தாமரை மலர்கள்‌ நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார்‌ அந்தமில்‌ புகழினாரே

3688

அந்தமில்‌ புகழ்‌ அனந்தபுர நகர்‌ ஆதி தன்னை கொந்தலர்‌ பொழில்‌ குருகூர்‌ மாறன்‌ சொல்‌ ஆயிரத்துள்‌ ஐந்தினோடு ஐந்தும்‌ வல்லார்‌ அணைவர்‌ போய்‌ அமருலகில்‌ பைந்தொடு மடந்தையர்‌ தம்‌ வேய்மரு தோளிணையே