Skip to the text
திருவாய்மொழி

9-9. மல்லிகை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ! வண்குறிஞ்சி இசை தவழுமாலோ! செல்கதிர் மாலையும் மயக்குமாலோ!" — மல்லிகை மணக்கும் தென்றல், குறிஞ்சி இசை, மாலைப் பொழுது, செக்கர் மேகம் — அந்திப் பொழுதின் இனிய யாவும் பிரிவில் அரிவாளாய் மாறும் பதிகம். மென்மையான ஒவ்வொன்றும் துன்பக் கருவியாகிறது. "மாலைப் பூசல்" — அவனைப் பிரிந்து உயிர் தாங்கமாட்டா ஆயர்மகளிரின் அந்திப் புலம்பலே இது.

திருவாய்மொழி 9-9 மல்லிகை

3645

மல்லிகை கமழ்‌ தென்றல்‌ ஈருமாலோ! வண்குறிஞ்சி இசை தவழுமாலோ! செல்கதிர்‌ மாலையும்‌ மயக்குமாலோ! செக்கர்‌ நல்மேகங்கள்‌ சிதைக்குமாலோ! அல்லியந்தாமரைக்‌ கண்ணன்‌ எம்மான்‌ ஆயர்களேறு அரியேறு எம்‌ மாயோன்‌ புல்லிய முலைகளும்‌ தோளும்‌ கொண்டு புகலிடம்‌ அறிகிலம்‌ தமியமாலோ!

3646

புகலிடம்‌ அறிகிலம்‌ தமியமாலோ! புலம்புறும்‌ அணிதென்றல்‌ ஆம்பலாலோ! பகலடு மாலை வண்சாந்தமாலோ! பஞ்சமம்‌ முல்லை தண்வாடையாலோ! ர்‌ அகலிடம்‌ படைத்திடந்து உண்டுமிழ்ந்து அளந்து எங்கும்‌ அளிக்கின்ற ஆயன்‌ மாயோன்‌ இகலிடத்தசுரர்கள்‌ கூற்றம்‌ வாரான்‌ இனி இருந்து என்னுயிர்‌ காக்குமாறென்‌?

3647

இனி இருந்து என்னுயிர்‌ காக்குமாறென்‌? இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்க துனியிருங்கலவி செய்து ஆகம்‌ தோய்ந்து துறந்தெம்மை இட்டகல்‌ கண்ணன்‌ கள்வன்‌ தனியிளம்‌ சிங்கம்‌ எம்‌ மாயன்‌ வாரான்‌ தாமரைக்‌ கண்ணும்‌ செவ்வாயும்‌ நீலப்‌ பனியிரும்‌ குழல்களும்‌ நான்கு தோளும்‌ பாவியேன்‌ மனத்தே நின்றீருமாலோ!

3648

பாவியேன்‌ மனத்தே நின்றீருமாலோ! வாடை தண்வாடை வெவ்வாடையாலோ! மேவு தண்மதியம்‌ வெம்மதியமாலோ! மென்மலர்ப்‌ பள்ளி வெம்பள்ளியாலோ! தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வ வண்டு துதைந்த எம்‌ பெண்மையம்‌ பூவிதாலோ! ஆவியின்‌ பரமல்ல வகைகளாலோ! யாமுடை நெஞ்சமும்‌ துணையன்றாலோ!

3649

யாமுடை நெஞ்சமும்‌ துணையன்றாலோ! ஆபுகும்‌ மாலையும்‌ ஆகின்றாலோ! யாமுடை ஆயன்‌ தன்‌ மனம்‌ கல்லாலோ! அவனுடைத்‌ தீங்குழல்‌ ஈருமாலோ! யாமுடைத்‌ துணை என்னும்‌ தோழிமாரும்‌ எம்மின்‌ முன்‌ அவனுக்கும்‌ ஆய்வராலோ! யாமுடை ஆருயிர்‌ காக்குமாறென்‌? அவனுடை அருள்‌ பெறும்‌ போதரிதே

3650

அவனுடை அருள்‌ பெறும்‌ போதரிதால்‌ அவ்வருள்‌ அல்லன அருளும்‌ அல்ல அவனருள்‌ பெறும்‌ அளவு ஆவி நில்லாது அடுபகல்‌ மாலையும்‌ நெஞ்சும்‌ காணேன்‌ சிவனொடு பிரமன்‌ வண்திருமடந்தை சேர்‌ திருவாகம்‌ எம்மாவி ஈரும்‌ எவன்‌! இனிப்‌ புகுமிடம்‌? எவன்‌ செய்கேனோ? ஆருக்கென்‌ சொல்லுகேன்‌? அன்னைமீர்காள்‌!

3651

ஆருக்கென்‌ சொல்லுகேன்‌? அன்னைமீர்காள்‌! ஆருயிர்‌ அளவன்று இக்கூர்தண்வாடை காரொக்கும்‌ மேனி நங்கண்ணன்‌ கள்வம்‌ கவர்ந்த அத்தனி நெஞ்சம்‌ அவன்‌ கணஃதே சீருற்ற அகிற்புகை யாழ்‌ நரம்பு பஞ்சமம்‌ தண்பசுஞ்சாந்து அணைந்து போருற்ற வாடை தண்மல்லிகைப்பூப்‌ புது மணம்‌ முகந்து கொண்டு எறியுமாலோ!

3652

புது மணம்‌ முகந்து கொண்டு எறியுமாலோ! பொங்கிள வாடை புன்செக்கராலோ! அதுமணந்து அகன்ற நங்கண்ணன்‌ கள்வம்‌ கண்ணினிற்‌ கொடிது இனி அதனில்‌ உம்பர்‌ மதுமண மல்லிகை மந்தக்‌ கோவை வண்பசுஞ்‌ சாந்தினில்‌ பஞ்சமம்‌ வைத்து அதுமணந்து இன்னருள்‌ ஆய்ச்சியர்க்கே ஊதும்‌ அத்தீங்குழற்கே உய்யேன்‌ நான்‌

3653

ஊதும்‌ அத்தீங்குழற்கே உய்யேன்‌ நான்‌ அது மொழிந்திடை இடைத்தன்‌ செய்கோலத்‌ தூது செய்‌ கண்கள்‌ கொண்டு ஒன்று பேசித்‌ தூமொழி இசைகள்‌ கொண்டு ஒன்று நோக்கி பேதுறு முகம்‌ செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சறவறப்‌ பாடும்‌ பாட்டை யாதும்‌ ஒன்று அறிகிலம்‌ அம்ம! அம்ம! மாலையும்‌ வந்தது மாயன்‌ வாரான்‌

3654

மாலையும்‌ வந்தது மாயன்‌ வாரான்‌ மாமணி புலம்ப வல்லேறணைந்த கோல நன்னாகு உகளுகளுமாலோ! கொடியன குழல்களும்‌ குழறுமாலோ! வாலொளி! வளர்‌ முல்லை கருமுகைகள்‌ மல்லிகை அலம்பி வண்டாலுமாலோ! வேலையும்‌ விசும்பில்‌ விண்டலறுமாலோ! என்‌ சொல்லி உய்வன்‌ இங்கு அவனை விட்டே?

3655

அவனை விட்டு அகன்று உயிர்‌ ஆற்றகில்லா அணியிழை ஆய்ச்சியர்‌ மாலைப்‌ பூசல்‌ அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணிகுருகூர்ச்‌ சடகோபன்‌ மாறன்‌ அவனி உண்டுமிழ்ந்தவன்‌ மேல்‌ உரைத்த ஆயிரத்துள்‌ இவை பத்தும்‌ கொண்டு அவனியுள்‌ அலற்றி நின்று உய்ம்மின்‌ தொண்டீர்‌! அச்சொன்ன மாலை நண்ணித்‌ தொழுதே