திருவாய்மொழி 9-8 அறுக்கும்வினை
9-8. அறுக்கும்வினை
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"அறுக்கும் வினை ஆயின ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு ... திருநாவாய் குறுக்கும் வகை உண்டு கொலோ? கொடியேற்கே" — வினைகளை அறுக்கும் அவனை மனத்துள் நிறுத்திய அடியார் சூழ, மலர்ச்சோலை சூழ்ந்த திருநாவாயை அடையும் வழி இக்கொடியேனுக்கு உண்டோ என்று ஏங்கும் பதிகம். தலம் அருகிலிருந்தும் அணுக இயலாத் தவிப்பே இதன் உணர்வு. அடைவதற்கான வகையையே தேடித் தவிக்கிறார்.
அறுக்கும் வினை ஆயின ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு வெறித்தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் குறுக்கும் வகை உண்டு கொலோ? கொடியேற்கே
கொடியேரிடைக் கோகனகத்தவள் கேள்வன் வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப் பெறு நாள் எவை கொலொ?
எவை கொல் அணுகப் பெறு நாள்? என்று எப்போதும் கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன் நவையில் திருநாரணன் சேர் திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே
நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா!
மணாளன் மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே?
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல்? கண்கள் தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசின்றி வண்டார் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் கொண்டே உறைகின்ற எங்கோவலர் கோவே!
கோவாகிய மாவலியை நிலங்கொண்டாய்! தேவாசுரம் செற்றவனே! திருமாலே! நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ! ஆவா! அடியான் இவன் என்று அருளாயே
அருளாதொழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென்திருநாவாய் என் தேவே!
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கரியன் மூவர் முதல்வன் ஒரு மூவுலகாளி தேவன் விரும்பி உறையும் திருநாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ!
அந்தோ! அணுகப் பெறு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால்! என்று அழைப்பன் கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் வந்தே உறைகின்ற எம்மா மணிவண்ணா!
வண்ணம் மணிமாட நல்நாவாய் உள்ளானை திண்ணம் மதிள் தென்குருகூர்ச் சடகோபன் பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் மண்ணாண்டு மணம் கமழ்வர் மல்லிகையே