Skip to the text
திருவாய்மொழி

9-2. பண்டைநாளாலே

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத் தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து ... ஆட்செய்யும் தொண்டரோர்க்கு" — பழம் பெரும் நாள்முதல் தலைமுறை தலைமுறையாய்க் கோயில் பணிசெய்து வந்த தொண்டனுக்கு, சோதிவாய் திறந்து தாமரைக் கண்களால் ஒருமுறை நோக்கு என்று வேண்டும் பதிகம். "கூவுதல் வருதல் செய்திடாய்" — அழைத்தாவது வந்தாவது என்னை ஏற்றுக்கொள் என்பதே இதன் விண்ணப்பம். மௌனத்தை உடைத்து ஒரு பார்வை தருமாறு கேட்கும் அழைப்பு.

திருவாய்மொழி 9-2 பண்டைநாளாலே

3568

பண்டை நாளாலே நின்‌ திருவருளும்‌ பங்கயத்‌ தாள்‌ திருவருளும்‌ கொண்டு நின்‌ கோயில்‌ சீய்த்துப்‌ பல்படிகால்‌ குடிகுடி வழி வந்து ஆட்செய்யும்‌ தொண்டரோர்க்கு அருளிச்‌ சோதிவாய்‌ திறந்து உன்‌ தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌ தெண்திரைப்‌ பொருநல்‌ தண்பணை சூழ்ந்த திருபுளிங்குடிக்‌ கிடந்தானே!

3569

குடி கிடந்தாக்கம்‌ செய்து நின்‌ தீர்த்த அடிமைக்‌ குற்றேவல்‌ செய்து உன்‌ பொன்‌ அடிக்கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள்‌ படிக்களவாக நிமிர்த்த நின்‌ பாத பங்கயமே தலைக்கணியாய்‌ கொடிக்கொள்‌ பொன்‌ மதிள்‌ சூழ்‌ குளிர்வயல்‌ சோலைத்‌ திருபுளிங்குடிக்‌ கிடந்தானே!

3570

கிடந்த நாள்‌ கிடந்தாய்‌ எத்தனை காலம்‌ கிடத்தி? உன்‌ திருவுடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல்‌ செய்து தொல்லடிமை வழி வரும்‌ தொண்டரோர்க்கு அருளி தடங்கொள்‌ தாமரைக்கண்‌ விழித்து நீ எழுந்து உன்‌ தாமரை மங்கையும்‌ நீயும்‌ இடங்கொள்‌ மூவுலகும்‌ தொழ இருந்தருளாய்‌ திருப்புளிங்குடிக்‌ கிடந்தானே!

3571

புளிங்குடிக்‌ கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள்‌ நின்று தெளிந்த என்‌ சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய்‌! எனக்கருளி நளிர்ந்த சீருலகம்‌ மூன்றுடன்‌ வியப்ப நாங்கள்‌ கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர்முகிலின்பவளம்‌ போல்‌ கனிவாய்‌ சிவப்ப நீ காண வாராயே

3572

பவளம்‌ போல்‌ கனிவாய்‌ சிவப்ப நீ காண வந்து நின்‌ பல்நிலா முத்தம்‌ தவழ்‌ கதிர்‌ முறுவல்‌ செய்து நின்‌ திருக்கண்‌ தாமரை தயங்க நின்றருளாய்‌ பவள நன்படர்க்‌ கீழ்ச்‌ சங்குறை பொருநல்‌ தண்திருப்புளிங்குடிக்‌ கிடந்தாய்‌! கவளமா களிற்றின்‌ இடர்‌ கெடத்‌ தடத்துக்‌ காய்சினப்பறவை ஊர்ந்தானே!

3573

காய்சினப்பறவை ஊர்ந்து பொன்மலையின்‌ மீமிசைக்‌ கார்முகில்‌ போல்‌! மாசின மாலி மாலி மானென்று அங்கு அவர்‌ படக்‌ கனன்று முன்‌ நின்ற காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல்‌ திருபுளிங்குடியாய்‌! காய்சின ஆழி சங்கு வாள்‌ வில்‌ தண்டு ஏந்தி எம்‌ இடர்‌ கடிவானே!

3574

எம்‌ இடர்‌ கடிந்து இங்கு என்னை ஆள்வானே! இமையவர்‌ தமக்கும்‌ ஆங்கனையாய்‌! செம்மடல்‌ மலரும்‌ தாமரைப்‌ பழனத்‌ தண்திருப்புளிங்குடிக்‌ கிடந்தாய்‌! நம்முடை அடியர்‌ கவ்வை கண்டுகந்து நாம்‌ களித்து உளநலம்‌ கூர இம்மடவுலகர்‌ காண நீ ஒரு நாள்‌ இருந்திடாய்‌ எங்கள்‌ கண்முகப்பே

3575

எங்கள்‌ கண்முகப்பே உலகர்கள்‌ எல்லாம்‌ இணையடி தொழுதெழுது இறைஞ்சி தங்கள்‌ அன்பாரத்‌ தமது சொல்‌ வலத்தால்‌ தலைத்தலைச்‌ சிறந்து பூசிப்ப திங்கள்‌ சேர்‌ மாடத்‌ திருப்புளிங்குடியாய்‌! திருவைகுந்தத்துள்ளாய்‌! தேவா! இங்கண்மா ஞாலத்து இதனுளும்‌ ஒரு நாள்‌ இருந்திடாய்‌ வீற்றிடங்கொண்டே

3576

வீற்றிடங்கொண்டு வியன்கொள்‌ மாஞாலத்து இதனுளும்‌ இருந்திடாய்‌ அடியோம்‌ போற்றி ஓவாதே கண்ணினை குளிரப்‌ புதுமலர்‌ ஆகத்தைப்‌ பருக சேற்றிள வாளை செந்நெலூடுகளும்‌ செழும்பணைத்‌ திருப்புளிங்குடியாய்‌! கூற்றமாய்‌ அசுரர்‌ குலமுதல்‌ அரிந்த கொடுவினைப்‌ படைகள்‌ வல்லானே!

3577

கொடுவினைப்‌ படைகள்‌ வல்லையாய்‌ அமரர்க்கு இடர்‌ கெட அசுரர்கட்கு இடர்‌ செய்‌ கடூவினை நஞ்சே! என்னுடை அழுதே! கலிவயல்‌ திருப்புளிங்குடியாய்‌! வடிவிணையில்லா மலர்மகள்‌ மற்றை நிலமகள்‌ பிடிக்கும்‌ மெல்லடியை கொடுவினையேனும்‌ பிடிக்க நீ ஒரு நாள்‌ கூவுதல்‌ வருதல்‌ செய்யாயே

3578

கூவுதல்‌ வருதல்‌ செய்திடாய்‌ என்று குரைகடல்‌ கடைந்தவன்‌ தன்னை மேவி நன்கமர்ந்த வியன்புனல்‌ பொருநல்‌ வழுதிநாடன்‌ சடகோபன்‌ நாவியல்‌ பாடல்‌ ஆயிரத்துள்ளும்‌ இவையுமோர்‌ பத்தும்‌! வல்லார்கள்‌ ஓவுதல்‌ இன்றி உலகம்‌ மூன்றளந்தான்‌ அடியிணை உள்ளத்து ஓர்வாரே 11 !2 ஆயிரத்துள்‌ இவையுமோர்‌ பத்தும்‌ / ஆயிரத்துள்‌ இவையும்‌ பத்தும்‌