Skip to the text
திருவாய்மொழி

9-1. கொண்டபெண்டிர்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதும் இல்லை" — மனைவி, மக்கள், உற்றார், சுற்றத்தார் எனும் உறவுகள் எல்லாம் கண்முன் இருக்கும் வரையே; அவற்றின் அன்பு நிபந்தனையுடையது என்பதை ஆழ்வார் வெளிப்படையாகச் சொல்கிறார். தொண்டராய் இருப்பதொன்றே தவறாத துணை என முடிக்கிறது. ஒன்பதாம் பத்து இந்த உறுதியுடன் தொடங்குகிறது.

திருவாய்மொழி 9-1 கொண்டபெண்டிர்‌

3557

கொண்ட பெண்டிர்‌ மக்கள்‌ உற்றார்‌ சுற்றத்தவர்‌ பிறரும்‌ கண்டதோடு பட்டதல்லால்‌ காதல்‌ மற்று யாதும்‌ இல்லை எண்திசையும்‌ கீழும்‌ மேலும்‌ முற்றவும்‌ உண்ட பிரான்‌ தொண்டரோமாய்‌ உய்யல்‌!! அல்லால்‌ இல்லை கண்டீர்‌ துணையே

3558

துணையும்‌ சார்வும்‌ ஆகுவார்‌ போல்‌ சுற்றத்தவர்‌ பிறரும்‌ அணைய வந்த ஆக்கம்‌ உண்டேல்‌ அட்டைகள்‌ போல்‌ சுவைப்பர்‌ கணை ஒன்றாலே ஏழ்மரமும்‌ எய்த எம்‌ கார்முகிலை புணை என்று உய்யப்‌ போகல்‌ அல்லால்‌ இல்லை கண்டீர்‌ பொருளே

3559

பொருள்‌ கையுண்டாய்ச்‌ செல்லக்‌ காணில்‌ போற்றி என்று ஏற்றெழுவர்‌ இருள்கொள்‌ துன்பத்தின்மை காணில்‌ என்னே! என்பாருமில்லை மருள்கொள்‌ செய்கை அசுரர்‌ மங்க வடமதுரைப்‌ பிறந்தாற்கு அருள்கொள்‌ ஆளாய்‌ உய்யல்‌!! அல்லால்‌ இல்லை கண்டீர்‌ அரணே

3560

அரணம்‌ ஆவர்‌ அற்றகாலைக்கு என்றென்று அமைக்கப்பட்டார்‌ இரணம்‌ கொண்டதெப்பர்‌ ஆவர்‌ இன்றி இட்டாலும்‌ அஃதே வருணித்தென்னே? வடமதுரைப்‌ பிறந்தவன்‌ வண்புகழே சரணென்று உய்யப்‌ போகல்‌! அல்லால்‌ இல்லை கண்டீர்‌ சதிரே

3561

சதுரம்‌ என்று தம்மைத்‌ தாமே சம்மதித்து இன்மொழியார்‌ மதுர போகமது உற்றவரே வைகி மற்றொன்று உறுவர்‌ அதிர்கொள்‌ செய்கை அசுரர்‌ மங்க வடமதுரைப்‌ பிறந்தாற்கு எதிர்கொள்‌ ஆளாய்‌ உய்யல்‌! அல்லால்‌ இல்லை கண்டீர்‌ இன்பமே

3562

இல்லை கண்டீர்‌ இன்பம்‌ அந்தோ! உள்ளது நினையாதே தொல்லையார்கள்‌ எத்தனைவர்‌ தோன்றிக்‌ கழிந்தொழிந்தார்‌? மல்லை மூதூர்‌ வடமதுரைப்‌ பிறந்தவன்‌ வண்புகழே சொல்லி உய்யப்‌ போகல்‌ அல்லால்‌! மற்றொன்று இல்லை சுருக்கே

3563

மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்து எவ்வுயிர்க்கும்‌ சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்‌ கண்டீர்கள்‌ அந்தோ! குற்றமன்று எங்கள்‌ பெற்றத்‌ தாயன்‌ வடமதுரைப்‌ பிறந்தான்‌ குற்றமில்‌ சீர்கற்று வைகல்‌ வாழ்தல்‌ கண்டீர்‌ குணமே

3564

வாழ்தல்‌ கண்டீர்‌ குணம்‌ இதந்தோ? மாயவன்‌ அடிபரவி போழ்து போக உள்ளகிற்கும்‌ புன்மை இலாதவர்க்கு வாழ்துணையா வடமதுரைப்‌ பிறந்தவன்‌ வண்புகழே வீழ்துணையாப்‌ போமிதனில்‌ யாதுமில்லை மிக்கதே

3565

யாதுமில்லை மிக்கதனில்‌ என்றென்று அது கருதி காது செய்வான்‌ கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும்‌ போம்‌ மாதுகிலின்‌ கொடிக்கொள்‌ மாட வடமதுரைப்‌ பிறந்த தாது சேர்தாள்‌ கண்ணன்‌ அல்லால்‌ இல்லை கண்டீர்‌ சரணே

3566

கண்ணன்‌ அல்லால்‌ இல்லை கண்டீர்‌ சரண்‌ அது நிற்க வந்து மண்ணின்‌ பாரம்‌ நீக்குதற்கே வடமதுரைப்‌ பிறந்தான்‌ திண்ணமா நும்முடைமை உண்டேல்‌ அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மதாதும்‌ அவனன்றி மற்றில்லையே

3567

ஆதுமில்லை மற்றவனில்‌ என்றதுவே துணிந்து தாதுசேர்‌ தோள்‌ கண்ணனைக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன தீதிலாத ஒண்தமிழ்கள்‌ இவை ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌ ஓத வல்ல பிராக்கள்‌ நம்மை ஆளுடையார்கள்‌ பண்டே